Tuesday 19 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தங்க விமான தரிசனம் செய்யலாம்...
மதுரைக் கோபுரத்தைத் தொலைதூரத்திலிருந்து பார்த்தே வணங்கி விடலாம். ஆனால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கருவறைகளுக்கு மேலேயுள்ள விமானங்களைப் பார்த்து வணங்கிட முடியுமா?
விமானங்களைப் பார்த்து வேண்டுமானால், கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால்தான் பார்க்க முடியும். கோயிலின் மேற்பகுதிக்கும் கும்பாபிஷேக நாளில் மட்டுமே செல்லமுடியும், அதுவும் அதற்கென அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும்.
அப்படியானால் சாதாரண மக்கள் மதுரை மீனாட்சியம்மனின் பொன்வேய்ந்த விமானத்தையும், சுந்தரேசுவரரின் பொன்வேய்ந்த விமானத்தையும் கண்டு வணங்கிட முடியாதா?
அதுவும் கோயிலின் மேற்பகுதிக்குச் செல்லாமலேயே பொன்வேய்ந்த விமானங்களைக் கண்டு வணங்கிட வேண்டுமா?
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பல அற்புதங்கள் நிறைந்தது.
கோயிலில் நடந்து செல்லும் போது பாதையில் சதுரமாகச் செதுக்கி அதன் நடுவே பூ போன்ற சிற்பம் செதுக்கி வைத்து இருப்பார்கள்.
1) வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோயில் உள்ளே வந்து, கிழக்குக் கோபுர வாயிலுக்குச் செல்லும் பாதையிலும்,
2) பொற்றாமரைக் குளத்தின் கிழக்கே, குளத்தைச் சுற்றியுள்ள மண்டபத்திலும்,
3) சுவாமி சந்நிதி கொடிமரத்தின் தென் பகுதியில் வெண்ணெய் விற்கும் இடத்திற்கு அருகிலும்,
4) சண்டேசுவரர் சந்நிதி அருகிலும்
இவ்வாறு பாதையில் பூ செதுக்கி வைத்திருக்கின்றனர்.
நடந்து செல்லும் பாதையில் பூ சிற்பம் வைத்திருப்பதன் காரணம் என்ன ?
அதில் ஒரு சிறப்பு உண்டு. அந்தப் பூச் சிற்பத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தால், மீனாட்சியம்மன் விமானத்தையோ அல்லது சோமசுந்தரேசுவரர் விமானத்தையோ அல்லது இரண்டு விமானங்களையுமோ காணலாம்.
தங்க விமானத்தைக் கண்டு வணங்கிட விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேடிச் சென்று, அந்தப் பூவின் மீது நின்று பார்த்து வழிபடலாம்.
மதுரைக் கோயிலில் விமானங்களை வணங்கிக் கொள்வதற்கு வசதியாக, இதுபோன்ற பூப் போட்ட கற்களைப் பதித்து வைத்து இருக்கின்றனர்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர் (சுயம்புலிங்கம்) விமானத்தின் மேல் உள்ளது சாதாரணமான கல் அல்ல. அது ஒரு விண்கல் ஆகும். இதை விண்ணிழி விமானம் என்கிறது புராணம்.
எவ்விதமான விஞ்ஞான வளர்ச்சியும் அடையாத அந்தக் காலத்திலேயே இவ்வாறு விமானங்களைப் பார்ப்பதற்கு ஏதுவான இடங்களில் எல்லாம், நடந்து செல்லும் பாதைகளில் பூப்போன்ற சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கின்றனர் நமது பண்டைய தமிழர். நமது முன்னோர்களின் கலைத்திறனும், கட்டிடத்திறனும் வியந்து பாராட்டும் வகையில் உள்ளன.
ஆனால், இந்த அமைப்புமுறையானது பக்தர் அனைவருக்கும் தெரிவதில்லை. நாள்தோறும் நாடெங்கிலும் இருந்து எத்தனையோ பக்தர்கள் வந்து அன்னை மீனாட்சியையும், ஐயன் சோமசுந்தரேசுவரரையும் வணங்கிச் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்த எளிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதுபோன்ற இடங்கள் குறித்து கோயில் புத்தகங்களிலும், தகவல் பக்கங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment