Tuesday 30 November 2021

உண்மையான அன்பு.

 உண்மையான அன்பு.

அன்பு இந்த அழகிய சொல்லில் தான் இவ்வுலகமே கட்டுண்டு இருக்கிறது. உங்களைச் சுற்றி உள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பைச் செலுத்துங்கள், நாம் என்ன கொடுக்கிறோமோ அது மறுபடியும் நமக்கு கிடைக்கும் அதனால் விலை மதிப்பில்லாத அன்பை அனைவருக்கும் அள்ளிக் கொடுங்கள்.
"கண்ணா சாப்டியா?" என்று வினவும் தாயின் அன்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
தந்தை அன்பை மனதில் வைத்துக் கொண்டு தன் குடும்பத்திற்காகவே தன் ஆசைகளை எல்லாம் தியாகம் செய்து நம் கண் எதிரில் வாழும் கடவுள்.
டேய் மச்சான் நான் இருக்கேன்டா என்ற ஒற்றை சொல்லில் அன்பை புரிய வைப்பார்கள் நம் நண்பர்கள்.
உங்கள் இல்வாழ்க்கைத்
துணையின் அன்பு அவர் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்.
நாம் இந்த மண்ணில் வாழும் வரை அன்பை அனைவருக்கும் வாரி வழங்குவோம், அன்பிற்கு காசு பணம் அந்தஸ்து இவை எதுவும் தேவை இல்லை.
கடினமாக பேசுபவர்கள் அன்பு இல்லாதவரும் அல்ல, சிரித்து சிரித்துப் பேசுபவர்கள் அனைவரும் உண்மையான அன்பு
கொண்டவரும் அல்ல( அனுபவம்).
உங்கள் அன்பு உங்கள் குடும்பத்திற்காக மட்டும் என்று நினைத்து நத்தையைப் போல் சுருக்கிக் கொள்ளாதீர்கள். அன்புக்காக பல பேர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேவையான தருணத்தில் கிடைக்காத அன்பு பயனற்றது.
பெட்டி நிறைய அரிசி இருந்தாலும் அதை வடித்து உண்டால் மட்டுமே பசி தீரும், அதை அப்படியே வைத்திருந்தால் புழுத்துவிடும் அதுபோல் தான் அன்பும் அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைக்காதீர்கள். உங்களால் முடிந்த விதத்தில் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் பார்க்கும் அனைத்து நபர்களிடமும்
இன்றைய நாள் நல்லபடியாக இருக்கட்டும்" என்று கூறுங்கள்.
நம்மிடம் யாராவது அவர்களின் துயரங்களைக் கூறினால் அன்போடு காது கொடுத்து கேட்டு " நான் இருக்கிறேன் உனக்காக"* என்று புரிய வைக்க வேண்டும். நான் என்னும் அகந்தையை ஒழித்துவிட்டாலே அன்பு ஆட்சிக்கு வந்து விடும். நாம் வாழும் காலத்தில், சம்பாதிக்கும் பணம் நம் இறுதி பயணத்தில் நம்மோடு வரப்போவதில்லை ஆனால் நாம்
பிறரிடம் காட்டிய அன்பும் பாசமும் பல தலைமுறைகளுக்குத் தொடரும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


காசியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்

 காசியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்

ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார்.
செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை.
மாலை 7 மணி ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார்.
அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார்.
முதல் 4 பங்கு உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த இறைவன் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழுநோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். இறைவன் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா என்று தொழுநோயாளியிடம் கேட்டார்.
யாராக இருந்தால் என்ன?....முதலில் சாப்பிடு என்றான். மீண்டும் இறைவன் அதட்டலாகக் கேட்டார். நான் யார் தெரியுமா?
தொழுநோயாளி அமைதியாக சொன்னார்.......இறைவன் வாயடைத்துப் போய் விட்டார்.
இந்தத் தொழுநோயாளியின் அசுத்தமான உணவை என் அழுகிப்போன கைகளால் கொடுப்பதை பெற்றுக் கொள்வது காசி விஸ்வநாதரை தவிர வேறு யாராக இருக்க முடியும்? என்று சிரித்தார்.
எல்லா உயிருள்ளும் உயிராக இருக்கும் இறைவனுக்கு எந்த உயிர்களுக்குள்ளும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்து அழகாகச் சொன்னார்...இறைவன் மெய்மறந்து நின்று விட்டார்.
நன்றி ஆன்மீக களஞ்சியம்.


Monday 29 November 2021

இன்று அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு குளிரக்குளிர சங்காபிஷேகம்!

 இன்று அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு குளிரக்குளிர சங்காபிஷேகம்!

இன்று கார்த்திகை சோமவாரம் !
சங்காபிஷேகம்... சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!
கார்த்திகை 13, நவம்பர் 29/11/2021
சிறப்பு: சுபமுகூர்த்த நாள், கார்த்திகை சோமவாரம்,
வழிபாடு: இன்று 29ம் தேதி திங்கட்கிழமை. தென்னாடுடைய சிவனார் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தேறும். கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கார்த்திகை மாதம் விசேஷம். அதேபோல் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு ரொம்பவே விசேஷம். கார்த்திகை மாதத்தின் சோமவாரம் என்பது இன்னும் மகத்தானதாகப் போற்றப்படுகிறது.
சங்கு என்பது புனிதமான பொருட்களில் ஒன்று என்கிறது புராணம். மகாவிஷ்ணு தன் திருக்கரத்தில் சங்கு வைத்திருக்கிறார் சங்குடன் அபயம் அளிக்கிறார் என்கிறது விஷ்ணு புராணம்.
சங்கு வைத்திருப்பதும் சங்குக்கு பூஜைகள் செய்வதும் சங்கினைக் கொண்டே பூஜைகள் செய்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோமவாரம் என்றால் திங்கட்கிழமை. திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிரு க்கிறார் சிவபெருமான் என்கிறது புராணம்.
அதனால்தான், சோமவாரம் என்கிற திங்கட்கிழமையில் சிவனாருக்கு வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன. அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன.
சிவனார் அபிஷேகப் பிரியன். அந்த அபிஷேகப்பிரியனுக்கு சங்கு கொண்டு அபிஷேகிப்பதை தரிசித்தால், மும்மடங்குப் பலன்கள் கிடைக்கப் பெறலாம். முக்தி நிச்சயம். இம்மையிலும் நன்மை, மறுமையிலும் நன்மையைத் தந்தருள்வார் சிவபெருமான் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.
சங்காபிஷேகத்தை தரிசியுங்கள். சந்தோஷமாய் வாழ அருளுவான் சங்கரன்!
நன்றி இறையருள்

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்.

 உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்.

அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத சூழலிலும் மகாகவி பாரதி, கைவசமிருந்த அரிசியையும் தானியங்களையும் பறவைகளுக்கு வாரி இறைத்து காக்கை குருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாடினான். எந்த வலைக்குள்ளும் அகப்படா சுதந்திரக்கலையே வாழ்க்கை.
இயல்பாய் இருங்கள் சிரிக்கும் புத்தர் சிலையைப்போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கப் பழகுங்கள். சிரிப்பின் சிறப்பு என்னவென்றால் அது இறப்பை வெல்லும்.
நாம் மட்டும் ஏன் இப்படி வாழ்கிறோம்? பல நேரங்களில் சகமனிதர்களின் புலம்பல்கள் புதிராய் இருக்கின்றன. மணித்துளிகளைப் பணித் துளிகளாகவும், பணத் துளிகளாகவும் மாற்றி வாழ்ந்தது போதும். மனத் துளிகளை ரசிக்கவும் இனி நம் காலத்தைச் செலவிடலாமே.
ஒரு சிறு நலம் விசாரிப்பு, ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு உதவி என மலர்ச்சி மயமாக்கலாமே! உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்தலின் அடையாளமாகாது. புன்னகையோடு தொடங்கும் நாள் மலர் மணத்தோடு இரவில் உறங்கச் செல்கிறது. கவலை மறந்த மனங்களில்தான் இறைவன் இருக்கிறான்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவரின் நெறி அற்புதமானதன்றோ!
சிரிக்க மறந்த நாள் இப்புவியில் வசிக்க மறந்தநாள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நல்லதை விதைத்திருந்தால் நல்லதே அறுவடையாகும். அன்பிற் சிறந்ததவமில்லை என்றார் பாரதி. அன்பை விதைத்து, உள்ளதைச் சொல்லி, நல்லதைச் செய்து ரசித்து வாழ்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்


 

பிறர் கவனத்தைக் கவர்வது குறை சொல்லும் பலரது நிலை.

 பிறர் கவனத்தைக் கவர்வது குறை சொல்லும் பலரது நிலை.

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறி விட்டது.ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல்.
சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ?
குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு ! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது.
ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்தக் குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.
அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ,
புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும்.
தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.
ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்தக் கெட்டப் பழக்கம் உங்களை விட்டுப் போய் விடும்.
குறை சொல்பவர்கள் தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அட குறையைப் போக்கும் வழியைத் தேடணுமே என்பதை மறந்து விடுவார்கள்.
இருப்பதில் திருப்தியடையாதவர்கள் குறை சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளவோ, அல்லது கவனத்தை இழுக்கவோ கூட பிறர் மீது சிலர் குறைகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருப்பதும் உண்டு.
குறை சொல்தல் வெறுமனே உங்கள் வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. உங்களுடைய ஆழமான குடும்ப வாழ்க்கைக்கே அது கொள்ளி வைத்து விடும்.
குறை சொல்வது ஒரு மிகப்பெரிய உறவு எதிரி !
ஆம்.,நண்பர்களே..,
குறை சொல்வதற்கான தருணங்களில் கவனமாய் இருங்கள்.
அந்தக் கவனம் உங்களில் எப்போதும் இருந்தால் படிப்படியாய் நீங்கள் குறை சொல்லும் குறையை விட்டு வெளியே வர முடியும்.
வாழ்க்கையும் ரொம்ப அழகானதாய்த் தெரிய ஆரம்பிக்கும்.
குறைகளைக் களைவோம், நிறைவு அடைவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மக்கள் வெள்ளத்தில் அன்பு

 மக்கள் வெள்ளத்தில் அன்பு

நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா.
நேற்று காலை கண்டனூரில் நடைபெற்ற மதுரை தொழிலதிபர், கடுமையான உழைப்பாளி, ஜெராக்ஸ் தொழில் நுட்ப ஆரம்ப கால முன்னோடி, பக்தர்களின் பைகளுக்குள் முதன் முதலில் தனது பெரும் முயற்சியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருவுருவப் படத்தினை வைத்திடச் செய்த பெருமகன், கடந்து நாற்பது ஆண்டுகளாக மாநகர் மதுரையில் பெரும் கொடையாளர், நகரத்தார் பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாகச் செயல்பட்டவர், நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த பேரன்புடன் நடத்தி வரும் பண்பாளர், அருமை அண்ணன்
அன்பு நா. சிதம்பரம் செட்டியார் - கண்ணம்மை ஆச்சி
எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில்
மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கஸ்தூரி கிருஷ்ணன், கண்டனூர் குழு மற்றும் ஆனந்தம் அன்பர்கள் குழு உள்ளிட்ட 7 வாட்சாப் குழுவின் அட்மின்
என். சரவணன், லெட்சுமி விலாஸ்
தே. ஐயப்பன், விசாலாட்சி ஐயப்பன், விழா நாயகரின் இளைய மாப்பிள்ளை மணி ஆறுமுகம் உள்ளனர்.
மற்றும் விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள், நீதியரசர் எம். சொக்கலிங்கம், மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஆர். மெய்யப்பன், எஸ்எம் எஸ்பி. வெங்கடாஜலம், வி. வயிரவன், எல் எஸ். கணேசன் மற்றும் வயிரவன் கோவில் நடப்பு தலைவர் கே.ஆர். மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், எஸ் பி எஸ் எஸ் . ஆறுமுகம், மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் கதிரேசன் பேப்பர் ஸ்டோர்ஸ் ராமநாதன், சகானா சத்தியமூர்த்தி, எம். முருகப்பன், சி, லெட்சுமணன், ஆர். கதிரேசன், அருளிசை மணி வீர. சுப்பிரமணியன்,கொத்தமங்கலம் எம். ராமநாதன், வடு. கண்ணன், அருண் வீரப்பா, லெ மு மு. லெட்சுமணன், அங்கயற்கண்ணி, தேனப்பன், கோனாபட்டு முருகப்பன், பாகனேரி பெருங்கொடையாளர் தியாகராஜன், மாலதி தியாகராஜன், காரைக்குடி செக்காலை கோட்டை நகரத்தார் சங்கத்தின் தலைவர் நாச்சியப்பன், பெல். மணி, கீழையூர் வயிரவன், என். மெய்யப்பன், கீதா மெய்யப்பன், கண்டனூர் சீமான் கண்ணப்பன், முதியோர் நலன் காக்கும் பள்ளத்தூர் முத்து செட்டியார், மீனாட்சி அச்சகம் எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்துப் பெற்றனர்.
மக்கள் திருவிழா போல பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
ஏற்பாடுகளை அன்பு குடும்பத்தினர் சித. சிவக்குமார் - லெட்சுமி,
தீ. சொ. ராம. சொ. ரவி - நாச்சாள், ராம. வீரப்பன் - தேனம்மை,
மணி ஆறுமுகம் - வள்ளிமலர் மற்றும் அவர்கள் உறவினர்கள், கண்டனூர் நகரத்தார்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
வாழிய அன்பு குடும்பத்தினர்.






Saturday 27 November 2021

அன்பு நா. சிதம்பரம் செட்டியார் - கண்ணம்மை ஆச்சி எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ

 திருவிழா போல காட்சியளித்த கண்டனூர்.

இன்று காலை கண்டனூரில் நடைபெற்ற மதுரை தொழிலதிபர், கடுமையான உழைப்பாளி, ஜெராக்ஸ் தொழில் நுட்ப ஆரம்ப கால முன்னோடி, பக்தர்களின் பைகளுக்குள் முதன் முதலில் தனது பெரும் முயற்சியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருவுருவப் படத்தினை வைத்திடச் செய்த பெருமகன், கடந்து நாற்பது ஆண்டுகளாக மாநகர் மதுரையில் பெரும் கொடையாளர், நகரத்தார் பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாகச் செயல்பட்டவர், நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த பேரன்புடன் நடத்தி வரும் பண்பாளர், அருமை அண்ணன்
அன்பு நா. சிதம்பரம் செட்டியார் - கண்ணம்மை ஆச்சி
எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில்
மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கஸ்தூரி கிருஷ்ணன், கண்டனூர் குழு மற்றும் ஆனந்தம் அன்பர்கள் குழு உள்ளிட்ட 7 வாட்சாப் குழுவின் அட்மின்
என். சரவணன், லெட்சுமி விலாஸ்
தே. ஐயப்பன், விசாலாட்சி ஐயப்பன், விழா நாயகரின் இளைய மாப்பிள்ளை மணி ஆறுமுகம் உள்ளனர்.
மற்றும் விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள், நீதியரசர் எம். சொக்கலிங்கம், மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஆர். மெய்யப்பன், எஸ்எம் எஸ்பி. வெங்கடாஜலம், வி. வயிரவன், எல் எஸ். கணேசன் மற்றும் வயிரவன் கோவில் நடப்பு தலைவர் கே.ஆர். மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், எஸ் பி எஸ் எஸ் . ஆறுமுகம், மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் கதிரேசன் பேப்பர் ஸ்டோர்ஸ் ராமநாதன், சகானா சத்தியமூர்த்தி, எம். முருகப்பன், சி, லெட்சுமணன், ஆர். கதிரேசன், அருளிசை மணி வீர. சுப்பிரமணியன்,கொத்தமங்கலம் எம். ராமநாதன், வடு. கண்ணன், அருண் வீரப்பா, லெ மு மு. லெட்சுமணன், அங்கயற்கண்ணி, தேனப்பன், கோனாபட்டு முருகப்பன், பாகனேரி பெருங்கொடையாளர் தியாகராஜன், மாலதி தியாகராஜன், காரைக்குடி செக்காலை கோட்டை நகரத்தார் சங்கத்தின் தலைவர் நாச்சியப்பன், பெல். மணி, கீழையூர் வயிரவன், என். மெய்யப்பன், கீதா மெய்யப்பன், கண்டனூர் சீமான் கண்ணப்பன், முதியோர் நலன் காக்கும் பள்ளத்தூர் முத்து செட்டியார், மீனாட்சி அச்சகம் எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்துப் பெற்றனர்.
மக்கள் திருவிழா போல பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
ஏற்பாடுகளை அன்பு குடும்பத்தினர் சித. சிவக்குமார் - லெட்சுமி,
தீ. சொ. ராம. சொ. ரவி - நாச்சாள், ராம. வீரப்பன் - தேனம்மை,
மணி ஆறுமுகம் - வள்ளிமலர் மற்றும் அவர்கள் உறவினர்கள், கண்டனூர் நகரத்தார்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
வாழிய அன்பு குடும்பத்தினர்.


















கவனம் சிதறாமல் இருக்கட்டும்.

 கவனம் சிதறாமல் இருக்கட்டும்.

வாழ்வில் வெற்றி பெறுவதன் மறைபொருள்(இரகசியம்) என்ன...? வாழ்க்கையை மனத் திண்மையோடு அதன் போக்கில் எதிர்கொள்ளுதலே வாழ்வில் மறைந்திருக்கும் மறைபொருளும் அதைத் தொடர்ந்து வரும் வெற்றியும்...
நாளும் நாம் செய்யும் நம் வேலைகளில் எது முதன்மையானது...? எது அதன் பின் வருவது...? என்று வரிசைப்படுத்தி நம் மனதைக் குவித்து ஈடுபட பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...
இது நடக்குமோ?, நடக்காதோ! என்கிற எதிர்மறை எண்ணங்களை அறவே ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்...
இது தொடர்பாக ஒரு கதை இதோ...
கருவுற்றிருந்த மான் ஒன்று பிரசவிப்பதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்து, ஒரு நதிக் கரையில் அடர்ந்த புல்வெளியொன்றைத் தேர்ந்தெடுத்தது...
அது பாதுகாப்பான இடமாக அதற்குத் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்ததும் அதற்குப் பிரசவ வலியும் ஆரம்பித்து விட்டது...
வலியினூடே அக்கம் பக்கம் நோட்டம் விட்டது...
இடதுபக்கம் ஒரு வேடன் கையில் வில் அம்புடன் மானைக் குறி பார்த்தபடி நிற்கிறான்...
வலது பக்கம் பசியோடு ஒரு சிங்கம் எந்த நேரத்திலும் மானின் மேல் பாயத் தயாராக இருந்தது...
தலைக்கு மேலோ கருமேகங்கள் சூழ்ந்து பளீரென ஒரு மின்னல் தாக்க உடனே காட்டு மரங்கள் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டது...
கருவுற்றிருக்கும் மானால் என்ன செய்ய முடியும்...? அதுவோ பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது...
இப்போது என்ன நடக்கும்...? மான் பிரசவித்து ஒரு குட்டி மானை ஈனுமா...? அந்த குட்டி மான் உயிர் பிழைக்குமா...?
இல்லை!, காட்டுத்தீ எல்லாவற்றையும் எரித்து விடுமா...? இல்லை!, வேடனின் அம்புக்கு மான் இரையாகிவிடுமா...? ஒரு வேளை சிங்கத்துக்கு பலியாகி மாய்ந்து விடுமா...?
மான் அந்த விநாடியில் தான் என்ன செய்யவேண்டும் என்பதை உடனே தீர்மானிக்கிறது...
எதைப் பற்றியும் அஞ்சாமல், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முடிவு செய்து, எந்தவித எதிர்மறை எண்ணங்கள் தன்னை அணுக விடாமல் தன் முழுக் கவனத்தையும் பிரசவிப்பதில் செலுத்தி அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது...
அடுத்த விநாடி, அடடா!, என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன அந்தக் காட்டில்...
மற்றொரு மின்னல் அடிக்க, வேடனின் கண் பார்வை பறி போகிறது. அவனுடைய குறி தவறி சிங்கத்தின் மேல் அம்பு பாய சிங்கம் பரிதாபமாக மாய்ந்து போகிறது...
கருமேகங்கள் குவிய பெருமழை ஆரம்பிக்கிறது. காட்டுத் தீ மெதுவாக அணைந்து போகிறது.
ஆம் நண்பர்களே.
சக்தி வாய்ந்த நேர்மறை எண்ணங்கள் ஆபத்தான தருணங்களிலும் நம்மை எவ்வாறு வழி நடத்தி நம்மைப் பாதுகாக்கின்றன என்பதற்கு அந்த மான் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது.
படிப்பு, அலுவலக வேலை, வீட்டு வேலை எதுவாக இருந்தாலும் சரி கவனம் சிதறாமல் ஒன்று குவிக்கப்பட்ட மனம் மட்டுமே தேவை.
அந்த நேரத்தில் நம் கையில் இருக்கும் செயலில் நாம் முனைப்போடு முழுக் கவனத்தோடு செயல்பட்டோம் என்றால், அந்த ஈடுபாடே நமக்கு முழு நம்பிக்கையைக் கொடுத்து அந்தச் செயல் வெற்றி பெற உதவும்.
இதை நாம் அந்த மானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Friday 26 November 2021

அன்பு நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.

 கண்டனூர்

அன்பு நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.
இன்று பகல் கண்டனூரில் அவர்களிடம் ஆசி பெற்று மகிழும் அருமைச் சகோதரர் பண்பாளர் வேகுப்பட்டி
எஸ். அண்ணாமலை,
அண. சிட்டாள் தம்பதியர்.
அருகில் ஆனந்தம் அன்பர்கள் குழு, கண்டனூர் குழு, மற்றும் நகரத்தார் வேலை வாய்ப்பு, திருமண சேவை தகவல் என ஏழு வாட்சாப் குழுவின் அட்மின், பயன் தரும் பணிகளைச் செய்து வரும் அன்புச் சகோதரர், கண்டனூர்
என். சரவணன் உள்ளார்.
வாழிய விழா தம்பதியர் - மனிதத்தேனீ



அமைதியும் காத்திருப்பும்.

 அமைதியும் காத்திருப்பும்.

மனதில் மிகுந்த கவலையும் பயமும் குழப்பமும் நிறைந்த ஒருவர் புத்தரைக் காண வந்திருந்தார்.
“குருவே,என் மனது அதிகமான கவலைகளாலும் பயத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருக்கிறது எவ்வளவு தீவிரமாக முயன்றும் அமைதியாக்க முடியவில்லை.இதை அமைதியாக்க ஏதேனும் வழிமுறைகளை எனக்கு கூறுங்கள்.”என புத்தரிடம் பணிந்தார் வந்தவர்.
“நீங்கள் பத்து நாட்கள் ஆசிரமத்தில் தங்கவேண்டும்”எனக் கூறினார் புத்தர்.
ஒருநாள் ஆசிரமத்திற்கு அருகே உள்ள குளம் ஒன்றில் குரங்குகள் விளையாடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் மரத் துண்டுகளை உடைத்தெறிந்து கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்த புத்தர் தனக்கு குளத்திலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறினார். குளம் அருகே சென்ற சீடர் நீர்நிலை களங்கி இருப்பதைக் கண்டு களங்கிய நீரைக் குருவுக்கு எவ்வாறு கொடுப்பது என ஆலோசித்துவிட்டு தண்ணீர் எடுக்காமல் ஆசிரமத்திற்கு திரும்பினார்.
வெறும் கையோடு திரும்பி வந்தவரை “ஏன் தண்ணீர் கொண்டு வரவில்லை?” என வினாவினார். தண்ணீர் களங்கி இருந்ததை விளக்கினார் சீடர். மீண்டும் “சென்று தண்ணீர் எடுத்து வா”எனக் கூறினார் புத்தர்.
குளத்தருகே சென்றவர் தண்ணீர் தெளிவதற்காக காத்திருந்தார்.சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் தெளிந்திருந்தது.மண்பானையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு மடத்திற்கு திரும்பலானார்.
“குளத்தில் தண்ணீர் தெளிவதற்காக நீ என்ன முயற்சி செய்தாய்?” திரும்பி வந்தவரிடம் புத்தர் வினாவினார்” நான் சிறிது நேரம் காத்திருந்தேன் தண்ணீர் தானாகவே தெளிந்தது பிறகு தண்ணீர் நிரப்பிக்கொண்டு திரும்பினேன்”
எனப் பதிலளித்தார் வந்தவர்.
“நீ தேடி வந்தபிரச்சனைக்கான தீர்வு உனக்கு கிடைத்துவிட்டது” என பதிலளித்தார் புத்தர்.
“என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தயவுகூர்ந்து விளக்கமாகக் கூறுங்கள்” என்று பணிவுடன் கேட்டார் வந்தவர்.
“எப்பொழுதெல்லாம் உன் மனது அதிகமான கவலைகளாலும் பயத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருக்கிறதோ அப்போதெல்லாம் மனதை அடக்க தீவிரமாக முயலாதே! சிறிது நேரம் அமைதியாக காத்திரு! அமைதி தானாகவே உனக்குள் ஊடுறுவும்.மனம் தனது இயல்பு நிலையான அமைதியையும் சாந்த நிலையையும் தானாகவே அடையும். மேலும் உனது தீவிரத்தன்மையே உனது அமைதிக்கு எதிராக அமைவதை உன்னால் தவிர்க்கமுடியும்”என சாந்தமாக விளக்கினார் புத்தர்.
நன்றி கூறும் வகையில் கைகூப்பி வணங்கி மௌனமாக நகர்ந்தார் வந்தவர்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய மணமக்கள். இன்று காலை வலையபட்டியில் நடைபெற்ற கோவை நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, அன்புச் சகோதரர் சா. சித. சுவாமிநாதன் மகள் சேது ராமாயி - தஞ்சை நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, அருமை நண்பர் கண்டனூர் அரு. நாராயணன் மகன் அருணாசலம் திருமணத்தில் சிதம்பரம் நகரத்தார் சங்கத்தின் முன்னோடி இராம. இளங்கோ உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ


 

Thursday 25 November 2021

இன்று காலை எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு

 மகிழ்வான வேளை.

இன்று காலை எனது இல்லத்தரசியார்
அலமேலு சொக்கலிங்கம் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் திருநகர் 8 ஆவது பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி 98 ஆவது வார்டு அலுவலக வளாகத்தில் உள்ள நகர்புற வீடற்ற ஏழைகள் (ஸ்வீடு டிரஸ்ட்) இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம்.
அருகில்
பொறியாளர் சொ. ராம்குமார். ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் கோவிந்தராஜ் .
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ









நேர்வழிக்கான விதை.

 நேர்வழிக்கான விதை.

ஒரு முறை ஒரு தந்தை தனது ஏழு வயது பையனை விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் சென்றார் , நுழைவுச் சீட்டின் விலையை கவுண்டரில் கேட்டறிந்தார். பெரியவர்கள் என்றால் இருபது ரூபாய் ஆறு வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்குப் பத்து ரூபாய் என்று தெரிவித்தார்கள். தந்தை இரண்டு பெரியவருக்கான நுழைவு சீட்டை தருமாறு கவுண்டரில் கேட்டார்.
கவுண்டரில் இருந்த டிக்கெட் கொடுக்கும் கிளார்க் பையனின் உயரத்தைப் பார்த்துவிட்டு ஒரு முழு டிக்கட் ஒரு அரை டிக்கட் வாங்கினால் போதும் என்றார். பையனுக்கு ஆறு வயது என்று கூறினால் ஒன்றரை டிக்கேட் வாங்கினால் போதும் என்றார். இல்லை என்றால் இரண்டு வாங்க வேண்டும் என்றார்.
அந்த பையனின் தந்தையோ இரண்டு முழு டிக்கட் கொடுங்கள் என்றார்.
நீங்கள் பையனுக்கு ஆறு வயது என்று சொல்லியிருந்தால் பத்து ரூபாய் மிச்சமாகுமே ஏன் இரண்டு முழு டிக்கட் வாங்குகிறீர்கள் ஒன்றரை டிக்கெட் வாங்கியிருக்கலாமே என்று டிக்கெட் வழங்கியவர் கேட்டார்.
அதற்கு அந்த தந்தையோ பத்து ரூபாய் மிச்சம் தான். ஆனால் என் பையன் நம்ம அப்பா பத்து ரூபாய்க்காக பொய் சொல்லுகிறார் என்று எண்ணுவான் என்றார்.
பணம் சம்பாதித்துவிடலாம் ஆனால் அப்பாவை பற்றிய எண்ணம் தவறாக அவன் மனதில் பதிந்துவிட்டால் அது நீங்காத தழும்பாக மாறிவிடும்.
அவனும் பொய் சொல்வதில் தவறேதுமில்லை என்று எண்ணத்தொடங்குவான், லாபம் கிடைக்குமானால் பொய் சொல்வது கூடத் தவறில்லை என்ற தவறான எண்ணம் அவன் மனதில் வேருன்றி விடும் எனவே வேண்டாம் என்றார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லாமல் தாங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால் தான் குழந்தைகளும் அவ்வாறே அப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுவார்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பாட்டுப் பெட்டகம், பணியாற்றும் நிறுவனத்தில் நாற்பதாண்டு கால நம்பிக்கை நட்சத்திரம், பழனிக் காவடி எடுப்பதில் கடந்த முப்பதாண்டு கால பங்களிப்பு.
மற்றும் கல்வி நிலைய வளர்ச்சியில் அயராத உழைப்பு, வளரும் தலைமுறைக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வழிகாட்டும் செய்திகளை வழங்குதல் என எதையும் நேர்த்தியாகச் செய்திடும் அம்பத்தூர் வாழ் எளிமை.
கோனாபட்டு சுப்பு என்ற
வி. சுப்பிரமணியன்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



 

Wednesday 24 November 2021

மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள நிகழ்ச்சி


 

நல்ல எண்ணங்களை விதைப்போம்.

 நல்ல எண்ணங்களை விதைப்போம்.

ஓர் அழகிய பள்ளி அது. எட்டாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
“என்ன பிள்ளைகளா, சில நாட்களுக்கு முன்னால நம்ம பள்ளித் தோட்டத்தில விதை விதைச்சீங்களே, தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வர்றீங்களா?’’
”ஆமாம் சார், தினமும் தண்ணி ஊற்றி நல்லா கவனிச்சிட்டு வர்றோம் சார்”
“சரி, அப்படின்னா அந்தச் செடிகள் எல்லாம் எப்படி வளர்ந்திருக்குன்னு இப்போ போய் பார்த்திட்டு வரலாமா?”
“சரிங்க சார்”
“தருண், நீ என்ன விதை விதைச்ச?”
“கத்தரி விதை சார்”
“சரி, மத்தவங்க என்ன விதை விதைச்சீங்கன்னு சொல்லுங்க”
தக்காளி, அவரை, பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், வெண்டை, பாகல், புடலை, முள்ளங்கி, பீன்ஸ், அரைக்கீரை என்று ஒவ்வொரு மாணவரும் அவர்கள் விதைத்ததைச் சொன்னார்கள்.
“சரி, இப்ப உங்க செடி, கொடிகள் எப்படி வளர்ந்திருக்குன்னு பாருங்க”
எல்லாச் செடி, கொடிகளும் மிக அழகாக வளர்ந்து வருவதைப் பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
“தருண் நீ விதைச்ச கத்தரி விதையில இருந்துதானே இந்த தக்காளிச் செடி முளைச்சது ?”
தருண் சிரித்துக்கொண்டே, “என்ன சார், என்னை சோதிச்சுப் பார்க்கணும்னுதானே இப்படிக் கேக்கறீங்க , அது எப்படி சார் கத்தரி விதையில இருந்து தக்காளிச் செடி முளைக்கும்? என்ன விதை விதைக்கறோமோ அந்தச் செடிதான் சார் முளைக்கும்”
“என்ன பிள்ளைகளா, தருண் சொல்வது சரிதானா?”
“ஆமாம் சார், என்ன விதை விதைக்கறோமோ அந்த விதையிலிருந்து அதற்குரிய செடிதான் முளைக்கும் சார்”
“உண்மைதான் குழந்தைகளே, எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். அதுபோல நம்முடைய மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை விதைக்கிறோமோ அவைதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மனதில் நல்ல எண்ணங்களை வைத்திருந்தால் நல்லவற்றை அறுவடை செய்யலாம். மாறாக, கெட்ட எண்ணங்களை வைத்திருந்தால் கெட்டவையே நமக்குக் கிடைக்கும்.
அதனால் எப்பொழுதும் நாம் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். நல்லவற்றை மட்டுமே செய்ய வேண்டும். குழந்தைகளே, இனி நீங்கள் கெட்டதை விலக்கி நல்லதை மட்டுமே உங்கள் மனதில் விதைக்க வேண்டும். சரி தானே?”
“விதைப்பதுதான் கிடைக்கும் என்பது தெரிந்ததுதான் சார். அதேபோன்று நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நல்லவற்றைப் பெற முடியும் என்பதையும் இப்போது புரிந்துகொண்டோம் சார்” என்று ஒருசேரக் கூறினர்.
நீதி: நம் எண்ணங்கள் சிறப்பாய் இருந்தால் அதனால் உருவாகும் விளைவுகளும் மிகச் சிறப்பாய் அமையும்.