Wednesday 27 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கிழி கிழி என கிழித்து தொங்கவிடும் மூத்த பத்திரிகையாளரின் கேள்விக் கணைகள்.....
🛃➿ SPOT NEWS ➿🛃
கொரோனாவிலும் காசு பார்க்கும் பத்திரிக்கைகள்:
சும்மா ``கிழி,கிழி`` என கிழிப்பார்களா வாசகர்கள்.?
........................................
கொரோனா பாதிப்பில் பத்திரிக்கைகள் அடியோடு பாதிக்கப்பட்டு, தொழிலே நசுங்கி விட்டதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு இச் சமுதாயத்தை ஏமாற்றத் துடிக்கும் பத்திரிக்கை முதலாளிகள், நவீன பாணியில் கொரோனாவிலும் காசு பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதாவது, கொரோனாவில் இந்த உலகமே பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தபோதும், பத்திரிக்கைகளையும், மீடியாக்களையும் இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு அனுமதி வழங்கின. இதெல்லாம் ஏதோ சமுதாயத்தின் மீதான அக்கறை என்று பொருள் கொள்ள முடியாது.
இந்த மீடியாக்களையும், பத்திரிக்கைகளையும் எதிர்த்து கேள்விகள் எழுப்ப இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்கும், ஆட்சியாளருக்கும் துணி்ச்சல் கிடையாது. ஏனெனில், ஆட்சியாளர்களின் அலங்கோலங்களை, ஊழல்களை மீடியாக்காரர்கள் சும்மா கிழி கிழி என கிழித்துவிடுவார்கள் என்ற பயமே காரணம். அதேநேரத்தில் மீடியாக்களும், பத்திரிக்கை முதலாளிகளும் செய்யும் மறைமுக ஊழல்களை, அராஜகங்களை ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் கண்டுகொள்வதே கிடையாது. இவர்களுக்குள் ஒரு அனுசரணைப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த வாரம், பத்திரிக்கை முதலாளிகள் ஒன்றாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, இடதுசாரி சிந்தனையாளர் என்று சொல்லிக் கொண்டு பிற்போக்குத்தனமான செயல்களில் ஈடுபடும் பத்திரிக்கை அதிபர் என். ராம் (இந்து பத்திரிக்கை) தலைமையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்- தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி பத்திரிக்கை அதிபர்கள் எல்லாம் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதுவரை பத்திரிக்கை உலகில் இப்படி ஒரு விநோதம் நடந்தே கிடையாது.
பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளுக்கு சொத்துகளை குவித்து வைத்திருக்கும் முதலாளிகள், இப்படி வீதிக்கு வந்து, ஒரு பொதுவெளியில் நாடகத்தை நடத்தினார்கள். பத்திரிக்கைகள் எல்லாம் அடியோடு நலிந்துவிட்டது. பாவம், எங்கள் எல்லோருக்கும் பல கோடி இழப்பு. ஊழியர்களுக்கெல்லாம் சம்பளமே கொடுக்க முடியவில்லை என்று புலம்பல் புராணத்தை அரங்கேற்றி, இந்தச் சமுதாயத்தை நம்ப வைத்தார்கள். ஆனால் உண்மை என்ன என்பது அரசியல்வாதிகளுக்கும், இந்த பத்திரிக்கைகளி்ல் வேலை செய்யும் ஏழைப் பத்திரிக்கைகாரர்களுக்கும் தெரியும்.
இந்து நாளிதழ் 142 வருட கால பத்திரிக்கை. இந்தியன் எகஸ்பிரஸ், தினமணி 85 ஆண்டு கால பத்திரிக்கைகள், தினமலர் 70 ஆண்டுகால நாளிதழ், தினகரன்,-உலக பணக்காரர்களில் ஒருவரான மாறன் சகோதரர்களின் பத்திரிக்கை. தினமலர்- சகோதரர்கள் பத்திரிக்கையை பாகப்பிரிவினை செய்து கொண்டு தனித்தனி சமஸ்தானமாக ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள். தினத்தந்தி நாளிதழுக்கு கட்டட வாடகையில் மட்டும் பல கோடி உபரி வருமானம். இவர்கள் எல்லாம் 10 தலைமுறைகளுக்கு அசையா சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
எந்த முதலாளியும் பத்திரிக்கை மட்டும் நடத்தவில்லை. கல்லூரி, ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடங்கி குளிர்பானம் தயாரிப்பு வரை பத்திரிக்கை பெயரை வைத்துக் கொண்டு தினமும் பல கோடி வருமானத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதம் ஊரடங்கு நடந்ததால் பத்திரிக்கைத் தொழிலே நசுங்கிவிடுமா என்ன.?இதெல்லாம் ஊரை ஏமாற்றவே என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் .
பத்திரிக்கை துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. மாநில அரசுகள் வெறும் பெயரளவில் விளம்பரங்களை மட்டுமே வழங்குகிறது. இவர்களால் பத்திரிக்கைகளின் பிரச்சினைகளை பெரிதாக தீர்த்துவிட முடியாது. நியாயமாகப் பார்த்தால் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அல்லது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மூலம் பாரதப் பிரதமர் மோடியை இந்த பத்திரிக்கை அதிபர்கள் சந்திருக்க வேண்டும். மாறாக, தமிழக முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவனைச் சந்தித்திருக்கிறார்கள்.
ஏனெனில் பத்திரிக்கை அதிபர்கள் யாரும் அவ்வளவு லேசாக மோடியை சந்தித்துவிட முடியாது. அப்படியே சந்தித்தாலும் இவர்கள் விடும் கதைகளை எல்லாம் மோடி நம்ப மாட்டார். அவரிடம் இந்த பத்திரிக்கை ராஜ்ஜியங்களின் பல கோடி பூஜ்ஜியங்களை பின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் முதலாளிகளின் மாயமந்திரம் தெரியும்.
இரண்டு மாதமாக ஊரடங்கினால் அரசுகள் மூலம் பத்திரிக்கைகளுக்கு வரவேண்டிய ரூ. 1500 கோடி விளம்பர பாக்கி வரவில்லை என்று இவர்கள் கணக்கு சொன்னால் 15 ஆயிரம் கோடி சம்பாதித்தீர்களே..அந்தப் பணம் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று மோடி கணக்கு கேட்பார். இதனால்தான் இவர்கள் வைகோவையும், திருமாவையும் சந்திக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக பல கோடி லாபத்தில் பத்திரிக்கையை நடத்தி வரும் முதலாளிகள், இந்த இரண்டு மாத நட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதா..? நட்டத்தை சரி செய்வதாகக் கூறி, ஆயிரக்கணக்கான பத்திரிக்கைகாரர்களை பணியில் இருந்து நீக்கி அவர்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் என்கிறார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
பத்திரிக்கை முதலாளிகள் அனைவரும் முதல்வர்-எதிர்க்கட்சிகளை சந்தித்ததில் மற்றொரு பி்ன்னணியும் ஒளிந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதாவது, வரும் காலங்களில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முதலாளிகள் திட்டம் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னோட்டமாகவும், ஆதரவு கேட்டும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் நேர்கொண்ட பார்வையில் அஞ்சாத நெறிகளோடு இயங்குவதாக மார்த்தட்டிக் கொள்ளும் பத்திரிக்கைகள் எல்லாம், அரசியல்வாதிகளை சந்தித்து பிச்சைப்பாத்திரம் ஏந்தினால் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளை எப்படி தட்டிக் கேட்க முடியும் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியல், சினிமா போன்று ஏக அரசியல் சதுரங்க காய்களை நகர்த்தும் விளையாட்டுகளை பத்திரிக்கை முதலாளிகளும் கையாளத் தொடங்கி இருப்பது ஜனநாயகத்திற்கு வைக்கப்படும் வேட்டு என்றுதான் புலம்ப வேண்டியிருக்கிறது.
ஊரடங்கு சமயத்தில் பத்திரிக்கை சேவைகளையும் அரசுகள் நிறுத்தியிருக்க வேண்டும். மாறாக, அனுமதி தந்ததால் ஏராளமான பத்திரிக்கை சகோதரர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சில பத்திரிக்கை ஊழியர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் மூன்று முன்னணி பத்திரிக்கைகளில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும் பத்திரிக்கை நிர்வாகங்கள் தரும் கடும் நெருக்கடிக்கு பயந்து, பல ஊழியர்கள் தற்போது வேலைக்கு வந்து செல்கின்றனர். ஒரு பத்திரிக்கையில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் ஒருவர் (திருச்சி) 24-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
ஒரு பத்திரிகை நூலகப் பிரிவில் ஒருவருக்கும், 2 பெண் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதுவும் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த பத்திரிக்கையில் 50 நாட்களாக ஊழியர்களுக்கு விடுப்பும் தரப்படவில்லையாம். மற்றொரு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டவுடன் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டனர் என்றெல்லாம் அச்சப்படும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று பழைய கீறல் விழுந்த ஆடியோ சிடியை ஓயாமல் ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பத்திரி்க்கை படிக்கும் வாசகர்களாவது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, எந்தப் பத்திரிக்கையையும் சிறிதுகாலத்திற்கு வாங்குவதில்லை என்று முடிவெடுக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா.?

No comments:

Post a Comment