Saturday 30 April 2022

பேர் சொல்லி அழைப்பதால் கிடைக்கும் நன்மை.

 பேர் சொல்லி அழைப்பதால் கிடைக்கும் நன்மை.

ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர்.
அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான்.
ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.
அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை
அவருடைய கலைந்த தலையும், கசங்கிய
ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார்.
விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.. அவர் உட்கார்ந்ததும்,
சூடாக டீ
குடிக்கிறீங்களா?
என்று கேட்டார்.
வந்தவர், அவசரமாக
'வேண்டாம்' என்று சொன்னார்.
சொல்லுங்க, என்ன
விஷயம்? விவசாயி கேட்டார்.
ஒண்ணுமில்லை. நான் கோதாவரி நதி
கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.
வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.
அதை வெளியே எடுக்கணும்.
உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.
அதைக் கொண்டு
காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க.
அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று.
ரொம்பப் பெரிய காரா ? என்று கேட்டார் விவசாயி.
இல்லை, இல்லை.
சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக் கொண்டார்.
குதிரையின் கட்டை
அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார்.
விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம்.
அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.
கார் சிறியதாகத் தான் இருந்தது.
ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவே பிணைத்தார்.
கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
பிறகு,
எங்கடா பழனி..
இழு பார்ப்போம் என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார்.
குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.
ஏண்டா
கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி.
குதிரை துளிகூட நகரவே இல்லை.
டேய் முருகா வேகமா இழு
மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை.
என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா! என்றார்.
அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடமே கார் பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க்காரரோ, விவசாயிக்கு நன்றி
சொன்னார்.
ஐயா. நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ?
அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை.
ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது.
தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா?
அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.
அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு.
சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு!
அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.
ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ மிக ஏராளம்.
வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.
அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்
போது...
கடுஞ்சொற்களை ஏன் நாம் பேச வேண்டும் என்பதையே *கனியிருப்பக் காய் கவர்ந்தற்று* என்கிறார். வள்ளுவரும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ரோல் மாடல்

 ரோல் மாடல்

ஓர் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிட்டால் போதும்....மாமன்,மச்சினன்,சித்தப்பன், பெரியப்பன், ஜாதிக்காரன், நண்பன்,நண்பனுக்கு நண்பன் என்று எவ்விதத் தகுதியும் இல்லாவிட்டாலும்கூட தன்னுடைய அதிகாரத்தை வைத்து தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனைத்தையும் 'பெற்றுத் தரும்' இந்த சுருட்டல் உலகில்..,
தன்னுடைய சொந்த உழைப்பால் எழுதிய தகுதி உள்ள சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் விருதுகூட, தன்னுடைய பதவியால்தான் கிடைத்தது என்ற விமர்சனத்துக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காகவே அந்த விருதை நிராகரித்த நம் உண்மையான நாயகன் முதுமுனைவர்
திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்கள் நம் சமூகத்தின் பாடம்..!
இதைப் பார்த்தாவது தமிழகம் திருந்தட்டும்...!
நன்றி எழுத்தாளர் அசோக்குமார்.


Friday 29 April 2022


 

செல்வத்தால் கர்வப்பட வேண்டாம்.

 செல்வத்தால் கர்வப்பட வேண்டாம்.

பட்டினத்தாரின் ஊசி
பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார்.
அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்
இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்
நினைத்ததைச் சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள், என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்
சற்று யோசித்த பட்டினத்தார் ரொம்ப நல்லது.
அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே! என்று கேட்டார்.
என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.
செய்யக் காத்திருக்கிறேன் என்றார்
பணக்காரர்.
தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.
இந்தப் பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி என்றார் பணக்காரர்.
இதைப் பத்திரமாக வைத்திருங்கள்
நாம் இருவரும் இறந்த பிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும் என்றார் பட்டினத்தார்.
இறந்த பிறகு இந்த ஊசியை எப்படிக் கொண்டு வர முடியும் என்று கேட்டார் பணக்காரர்.
அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால்
நினைத்ததைச் சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே
ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும்.
செல்வத்தால் யாரும் கர்வப்படத்
தேவையில்லை
அதை இல்லாதவர்களுக்கு
கொடுத்து
உதவுங்கள்.
அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்
என்று அறிவுரை கூறினார்.
வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.
எனவே
இருப்பதை மற்றவருக்குக் கொடுத்து வாழ்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Thursday 28 April 2022

எதிர்காலம் என்பது ஏறிச் செல்லும் ஏணிப்படிகளே.

 எதிர்காலம் என்பது

ஏறிச் செல்லும் ஏணிப்படிகளே.
பகிர்ந்து கொள்ளாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
நேரத்திலும், நேர்மையாக இருப்பதிலும் கவனமாக இருங்கள். தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது.
பயந்து நடக்காதீர்கள்.கிடைத்த வாய்ப்பும் தொலைந்து போகும். துணிந்து செல்லுங்கள் வந்த துன்பமும் விலகிப் போகும்.
பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்... அது கடனாய் முடியும்... வாழ்வதற்காகப் பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள் வாழ்வு இனிக்கும்.
வாழ்க்கைப் புத்தகம் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான்... வெறுப்பவர்களைத் தேடாதீர்கள்... விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.
எதுவாயினும் எதிர் கொள்ளுங்கள்... எதிர்காலம் என்பது எரிமலை அல்ல... ஏறிச்செல்லும் ஏணிப்படியே.
எல்லா உறவுகளும் ஒருநாள் கசந்துபோகும்... எல்லா ஆச்சர்யங்களும் ஒருநாள் சலித்துப் போகும்.
எல்லா சுவாரசியங்களும் ஒருநாள் நீர்த்துப் போகும்... இருப்பினும் அதனைத் தேடித் திரிவதுதானே மானுட வாழ்க்கை.
எதிர்பார்க்கும் சந்தோசங்களை விட, எதிரில் வந்து நிற்கும் துன்பங்கள் தான் வாழ்க்கையை எளிதில் கற்றுத் தருகின்றது.
நிம்மதி வேண்டுமென தேடுகிறோமே தவிர ஆசைகளைக் கைவிட யாருமே நினைப்பதில்லை.
நிறைய உழைக்கத் தெரிந்த அளவிற்கு கொஞ்சம் போல் நடிக்கத் தெரிந்திருந்தால், வாழ்வின் சில பள்ளங்கள் மேடாகியிருக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உ.வே.சாமிநாதய்யர் நினைவைப் போற்றுவோம்

 


வாழ்த்தும் பாராட்டும். தடம் புரளாத அரசியல் தலைவர், மேனாள் அமைச்சர், மாநகர் மதுரையின் அஇஅதிமுக மாவட்டச் செயலாளராக அன்புச் சகோதரர் செல்லூர் கே. ராஜூ அவர்கள் தொடர்ந்து தேர்வானது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. பணிகள் சிறக்கட்டும்.-மனிதத்தேனீ

 


எப்போதும் எளிமை, நேர்மை, பேராற்றல்

 எப்போதும் எளிமை, நேர்மை, பேராற்றல்

வாழிய பணி - மனிதத்தேனீ
தலைமைச் செயலாளர் என்றால், அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்! சுலபத்தில் அணுக முடியாதவர் என்ற பொதுத் தன்மையை உடைத்து நாளும்,பொழுதும் மக்களோடு தொடர்பில் இருப்பவர் இறையன்பு. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த அவர் நேரடியாக களம் கண்டது ஒரு சுவாரசியமான அனுபவம்!
முதல்வர் ஒரு திட்டத்தை அறிவித்தால், மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்று நினைக்காமல், அந்த திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டத்திற்கோ களத்திற்கோ நேரில் சென்று அதில் உள்ள குறைகள், நிறைகள் என கள ஆய்வு செய்வதில் இறையன்பு முதலிடம் வகிக்கிறார்.
மக்களோடு கலந்துறவாடும் தலைமைச் செயலாளர்!
நன்றி சாவித்திரி கண்ணன்


Wednesday 27 April 2022

நல்லவனாக வாழ்வது எளிது, ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

 நல்லவனாக வாழ்வது எளிது, ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

பழங்காலத்தில் எல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால், அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டு விடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம்,
ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுதத் தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லைக் கொடுத்தான். ஐயா இதிலே ஒரு பெயர் எழுதிக் கொடுங்கள்
என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார்.
யாருடைய பெயரை எழுத வேண்டும் என்றார்.
இவன் அரிஸ்டாட்டில் என்று எழுதுங்கள் என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்.
அதுசரி அரிஸ்டாட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்? என்று கேட்டார்
அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை என்றான்.
எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார்.
அரிஸ்டாட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி அவர் ஒரு பெரிய வள்ளல் பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது என்றான். அதனால் அவரை வெறுக்கிறேன் என்று கூறினான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது.
எனவே இதிலிருந்து நமக்குப் புரிவது என்னவென்றால் நல்லவனாக வாழ்வது எளிது; ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 26 April 2022

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது

 உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது

இந்த 21 வாக்கியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(1)போனது போச்சு, இனி ஆக
வேண்டியதை யோசிப்போம்.
(2) நல்ல வேளை. இதோடு போச்சு.
(3) உடைஞ்சா என்ன? வேற
வாங்கிட்டா போச்சு.
(4) பஸ்ஸு போயிடுச்சா, அதனால
என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
(5) பணம் தான போச்சு. கை கால்
இருக்குல்ல. மனசுல தெம்பு
இருக்குல்ல.
(6) சொல்றவங்க ஆயிரம்
சொல்வாங்க.... எல்லாமே சரின்னு
எடுத்துக்க முடியுமா?
(7) இதெல்லாம் சப்ப மேட்டரு.
இதுக்குப் போயா கவலைப்படறது.
(8)கஷ்டம் தான்… ஆனா முடியும்.
(9) நஷ்டம் தான்… ஆனா மீண்டு
வந்திடலாம்.
(10) விழுந்தா என்ன? எழுந்திருக்க
மாட்டனா?
(11) இவன் இல்லேன்னா என்ன?
நமக்கு வேற ஆளே இல்லயா?
(12) இந்த வழி இல்லேன்னா வேற
வழி இல்லியா?
(13) இப்பவும் முடியலியா? சரி.
இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
(14) இது கஷ்டமே இல்லையே.
கொஞ்சம் யோசிச்சா வழி
தெரியுமே.
(15) முடியுமா…ன்னு நினைக்காதே.
முடியணும்…னு நினை.
(16) கிடைக்கலியா, விடு. வெயிட்
பண்ணு. இத விட நல்லதாகவே
கிடைக்கும்.
(17) திருப்பித் திருப்பி அதயே
பேசாதே. அது முடிஞ்சு போன
கதை.
(18) ஆகா, இவனும் அயோக்யன்
தானா? சரி, சரி. இனிமே
ஜாக்ரதையா தான் இருக்கணும்.
(19) கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது?
அது பாட்டுக்கு அது.
வேலைபாட்டுக்கு வேலை.
(20) எப்பவுமே ஜெயிக்க முடியுமா?
அப்பப்ப தோத்தா அது என்ன
பெரிய தப்பா?
(21) அடடே, தூங்கிட்டேனே,
பரவாயில்ல. இனிமே
முழிச்சிக்கலாம்.
வீழ்வது கேவலமல்ல நண்பர்களே
வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.
உங்கள் மனம் சக்தி பெறும்.
புதிய தெம்போடு நீங்கள் செயல்படுவீர்கள்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 25 April 2022

வரும் திங்கட்கிழமை இரவு நடைபெறும் பட்டிமன்றம்.


 

மனம் என்னும் மகா சக்தி.

 மனம் என்னும் மகா சக்தி.

மனத்தை ஒரு வேற்றுக் கிரகவாசி போல் சற்றுத் தொலைவிலிருந்து கவனித்தால் போதும். மனமாற்றத்துக்கான முதல் விதை இதுதான். மனம் ஒரு சிறந்த பணியாள்; மோசமான முதலாளி. ஆனால் அதை எப்படி நடத்துவது என்று தெரியாமல்தான் மோசமாகக் கையாண்டு வருகிறோம்.
மனத்தை நம்பலாமா
மனம் கண்ணியமானது என்று நம்பும்போது, அது தன் கேவலமான குணத்தைக் காண்பிக்கும். உறுதியானது என்று தீர்மானமாக இருக்கும்போது, அது தன் பலவீனத்தைத் தெரிவிக்கும். தெளிவானது என்று ஒரு முடிவுக்கு வருகையில், குழப்பியடிக்கும். ‘அடச்சே’ என்று அலட்சியம் காண்பிக்கையில் கூர்மையான தர்க்கத்தால், ‘அடடே’ என்று பிரம்மிக்க வைக்கும்.
நம் மனத்தைப் பற்றியே நமக்குத் தெரியாததால்தான் ‘எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை!’ என்று சுய வாக்குமூலம் கொடுக்கிறோம். இப்படி நம் மனத்தைப் பற்றியே சரியாக கணிக்க முடியாத நிலையில், எதிராளியைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம்மை நினைத்தால் நமக்கே சிரிப்பு வருவது இதனால்தான்.
மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை. நம் நினைவுத்திறனும் கற்பனை ஆற்றலும் பல நேரம் எளிதில் நீரோடு நீராக கலக்கக்கூடியவை. நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல. இருந்தாலும் நம் மனம் தரும் தற்காலிகத் தகவல்களை நம்பி, வாழ்க்கையின் பெரிய முடிவுகளை எடுக்கிறோம். இதில் பல நேரம் நம் புலனறிவும் சேர்ந்து சதிசெய்யும்.
மனத்தின் தகவல் பிழை
‘என்னை பாத்துட்டுப் பார்க்காத மாதிரி போயிட்டா. அவ்வளவு திமிரான்னு நானும் அவங்க வீட்டுக்குப் போறதையே நிறுத்திட்டேன். திடீர் பணக்காரியான அவளுக்கே அவ்வளவு இருந்தா… பரம்பரைப் பணக்காரி எனக்கு எவ்வளவு இருக்கும்? அதனால அந்தச் சம்பந்தம் வேண்டாம்பா!’பார்வை என்பது புலன் அறிவு. எதிராளிக்குச் சற்று மாறுகண்ணாக இருந்தால்? அல்லது பதற்றத்தில் ஓடும் பெண்ணின் நெருக்கடியோ அல்லது அது சார்ந்த உணர்வோ நமக்குப் புரியாமல் இருந்தால்? வேறு ஒரு பிரச்சினைக்காக உங்களுடன் நடந்துவரும் நபரைத் தவிர்க்க, உங்களைப் பார்க்காமல் போயிருந்தால்? இப்படி நிறையக் காரணங்கள் இருக்கலாம்.
அல்லது இதற்குமுன் நீங்கள் அவசரத்தில் அவரைப் பார்க்காமல் போனதைத் தவறாக நினைத்து, அதை மனத்தில் வைத்துக்கூடத் தவிர்த்திருக்கலாம். ஒரு செயலைப் பார்க்கும் மனம், தன் தற்காலிக மனநிலைக்கு ஏற்ப பொருள் கொடுத்துக்கொள்ளும். அதனால் மனம் தரும் தகவல்களைத் தள்ளி நின்று கேள்வி கேட்டு ஆராய்வது நல்லது.
பலமும் பலவீனமும்
என் நோக்கம் மனத்தைத் தரக்குறைவாக மதிப்பிடுவது அல்ல. மனித மனத்தின் நுட்பமான அறிவுதான், இந்த உலகம் இவ்வளவு முன்னேற வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு சாதனையும் மனத்தின் வெற்றிதான்.
அதேநேரம் இங்கு நிகழும் ஒவ்வொரு அவலத்துக்கும் காரணம், மனித மனம்தான். இத்தனை கொலைகள், வல்லுறவுகள், வன்முறை நிகழ்வுகள், நோய்கள், கிளர்ச்சிகளுக்குக் காரணமும் மனித மனம்தான். உலகின் அத்தனை சாத்தியக்கூறுகளுக்கும் காரணம் மனித மனம்தான். அதனால் அதன் முழு வீரியத்தை அறிவதுபோல், அதன் அத்தனை வக்கிர குணத்தையும் பலவீனங்களையும் அறிவது முக்கியம். மனத்தை உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கும்போது மனமும் வாழ்க்கையும் சீரடையத் தொடங்கும். இது பேருண்மை.
தியானம் வெளியில் இல்லை
மனத்தை உள்நோக்கிப் பார்க்கச் சிறந்த வழி தியானம். தியானம் என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த வழிமுறை அல்ல. அதற்கு தெய்வ நம்பிக்கை அவசியம் அல்ல. ஏதோ ஒரு நம்பிக்கை உறுதியாக இருந்தால், பற்றும் பழக்கமும் விரைவில் ஏற்படும். அதனால்தான் இறை நம்பிக்கை உலகெங்கும் போதிக்கப்படுகிறது.
இறை நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒரு பெரிய நம்பிக்கை இருப்பது நல்லது. அது மனிதநேயமாக இருக்கலாம். அல்லது இயற்கையின் மீதான மதிப்பாக இருக்கலாம். அல்லது கலை, இலக்கியம், இசை மேலான ஆர்வமாக இருக்கலாம். அல்லது உங்களை நீங்கள் கரைத்துக்கொண்டு செய்யும் வேலையாக இருக்கலாம். எந்தச் செய்கையில் உங்கள் மனம் கரைந்து காணாமல் போகிறதோ, அதுதான் தியானம்.
மனத்தை அமைதிப்படுத்தி அதைக் காணாமல் போக வைப்பதன் மூலம்தான் ‘நேரம்’ எனும் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போவீர்கள். உங்கள் உடல் வேறு ஒரு தாள கதியில் இயங்கத் தொடங்கும். அந்தக் கணத்தில் உடலும் இல்லாமல் மனமும் இல்லாமல் உங்களை நீங்கள் உணர்வீர்கள்.
அந்த அனுபவம்தான் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இந்த அனுபவத்தை தரவல்ல தியான நிலை, உங்களுக்கு எந்தச் செயலில் கிடைக்கிறது என்று கண்டுகொள்வதுதான் நிஜமான அறிவு. அதைச் செய்யத்தான் நீங்கள் படைக்கப் பட்டீர்கள். அதில்தான் உங்கள் முழு ஆற்றலும் வெளிப்படும்.
தியானத்தை வெளியில் தேடி ஓடாதீர்கள். அதற்கு நீங்கள் உங்களோடு இருக்க வேண்டும். தன்னை மறந்த நிலையில்தான் உங்களையே நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். இதைச் சொற்களால் படித்துப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், செயல் அனுபவமாகப் பெறுவது ஆனந்தம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஜேசி இயக்கத்தின் முன்னோடி, ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, மருந்து வணிக தொழிலதிபர், மதுரை நகரத்தார் சங்கம் மற்றும் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், சுய உதவிக்குழு மூலம் மக்கள் பணி ஆற்றிடும் அலவாக்கோட்டை வி. சீனிவாசன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அண்ணாமலை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர், பல்வேறு அறப்பணிகள் ஆற்றிவரும் ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, பெருங் கொடையாளர், கானாடுகாத்தான் கதி. பழனியப்பன் அவர்கள நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


நிம்மதி நிலைத்திடும்.

 நிம்மதி நிலைத்திடும்.

நம் அன்றாடம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும்,அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான்.
இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச் சிறந்தது..
குருவிடம் வந்தான் ஒருவன்.
‘‘குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’
குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.
குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’
‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’
‘‘அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.
ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.
வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர் களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’
‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?’’ என்றார் குரு.
ஆம் நண்பர்களே
இருப்பதை வைத்து திருப்தி கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.
ஆம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 23 April 2022

மகத்தான மனிதர்கள் பங்கேற்ற திருமுறைக் காவலர் முபழ. கண்ணப்ப செட்டியார் கண. மனோன்மணி ஆச்சி 80 ஆண்டு முத்து விழா.

 மகத்தான மனிதர்கள் பங்கேற்ற

திருமுறைக் காவலர்
முபழ. கண்ணப்ப செட்டியார்
கண. மனோன்மணி ஆச்சி
80 ஆண்டு முத்து விழா.
இன்று காலை அழகர்கோவில் அருகில் உள்ள ஏகேஎன்கே பேலஸ்
பிரம்மாண்டமான அரங்கில் அறப்பணிச் செம்மல், சைவமும் தமிழும் தழைத்தோங்கிட நாளும் துணை நிற்கும் பெருங் கொடையாளர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், பல்வேறு ஆன்மிக அமைப்பின் முன்னோடி, ஸ்ரீ மங்கையர்க்கரசி ஆலை சேர்மன் பாகனேரி
முபழ. கண்ணப்ப செட்டியார்
கண. மனோன்மணி ஆச்சி
80 ஆண்டு முத்து விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
தலைமை குருக்கள், விகாஸ் ரத்னா
டாக்டர் பிச்சை குருக்கள் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மூத்த குருக்கள் ராஜா பட்டர் தலைமையில் பங்கேற்ற மெய்யன்பர்கள் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
ஓதுவார்களின் திருமுறை, நாதஸ்வர சிறப்பு நிகழ்ச்சியுடன்
வாழ்த்தரங்கம் நடைபெற்றது. மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் 42 நிமிடமும்
நகைச்சுவை அரசு
தேவகோட்டை எஸ். ராமநாதன்
38 நிமிடமும் தம்பதியரின் பல்வேறு சிறப்புக்களை எடுத்துரைத்தனர்.
மதுரை நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் வி. வயிரவன், செயலாளர் ஆர். மெய்யப்பன், அலவாக்கோட்டை சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
நகரத்தார் சமூகத்தின் முன்னோடிகள், ஆலை அதிபர்கள், பல்வேறு துறை பெருமக்கள், நண்பர்கள் உறவினர்கள் என அரங்கம் நிரம்பி இருந்து வாழ்த்துப் பெற்றும், வழங்கியும் மகிழ்ந்தனர்.
நேற்றும் இன்றும் இன்னொரு சித்திரைத் திருவிழா போல நடைபெற்ற நிகழ்வுகளை அவர்களது பிள்ளைகள் கண. முருகேசன் மங்களம், பழ. அங்கயற்கண்ணி பழனியப்பன் ரெ. மங்கை ரெங்கநாதன் குடும்பத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
முத்து விழாத் தம்பதியர் அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்தி மகிழ்வோம்.