Thursday 31 March 2022

எதில் எப்படி எங்கு எவ்வாறு .

 எதில் எப்படி எங்கு எவ்வாறு .

சந்தேகம் என்பது மிகப் பெரிய கொடிய நோய். இந்த சந்தேக நோய் எவ்விதக் கிருமிகள் இல்லாமலே ஒரு மனிதனுக்குப் பிறவியிலோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப் பெரிய விசக் கிருமி.
சந்தேகம் என்பது ஆறாத, ஒரு
புற்றுநோய். இது வளர்ந்து கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது, குடும்பம் தான்.
எத்தனை எடுத்துச் சொன்னாலும், பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை.
பின் உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ்நாள் முழுதும் வருந்திக் கொண்டு
இருக்கிறார்கள்.
இந்த சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும்
மரணக்குழி வரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டு என்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான செயல்.
ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே வீண் சந்தேகப்பட்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே
கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.
ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்.
நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்
''தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.. (.குறள்:510..)
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவு அடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும் என்கின்றார்.
ஆம் நண்பர்களே
நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள்.
நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்.
அனாவசியமாக மற்றவர்கள் மீது வீண்' சந்தேகம் வைத்து உங்களின் வாழ்க்கையில்
அல்லல்பட வேண்டாம்.

வாழிய பல்லாண்டு


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 30 March 2022

உற்சாகமும் மன உறுதியும்.

 உற்சாகமும் மன உறுதியும்.

தயக்கமே தோல்விக்குக் காரணம், துணிவு இருந்தால் வெற்றி வசமாகும்.
முடியாது என்பது மூடத்தனம்; முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னால் மட்டுமே முடியும் என்பது கர்வம்.
கடின உழைப்பால் வருவது வெற்றி. மனத் துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒவ்வொருவரும் சாதிக்கலாம்
ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர்.
கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்..
அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது
ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும், ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது.
ஓடையைச் சில சிறுவர்கள் எளிதாகத் தாண்டிக் குதித்துச் சென்றனர்.
ஆனால் ஒரு சில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள்
தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோ என்ற பய உணர்வில் தாண்டிக் குதிக்க மறுத்து விட்டனர்.
எதிர்க்கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும் அவர்கள் தாண்டிக் குதிக்கவில்லை.
அதற்கான முயற்சியைக் கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை
சிறிது தூரம் நடந்து சென்று தண்ணீர் குறைவாகச் சென்ற இடத்தில் இருந்து ஓடையைக் கடந்து மறுபக்கம் சென்றனர்,
சிறுவர்களில் பலர் அபாரத் துணிவு மிக்கவர்களாக காணப்பட்டார்கள்.
எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற மனத்துணிவு, தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இங்கே சில சிறுவர்களுக்குப் போதிய துணிவு அவர்களிடம் இல்லை .
நம்பிக்கையுடன் நாம் தாவிக் குதித்து விடுவோம் என்ற எண்ணம் ஏற்படாததால் அவர்கள் ஓடையைத் தாவிக் குதிக்க
முடியவில்லை..
ஆம் நண்பர்களே
வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மனஉறுதியுடன் செயல்பட வேண்டும். மன உறுதி பெறுவதற்கு எதிரியாக இருப்பது பயம்.
நாம் மன உறுதி பெறும் போது நம்மிடம் உள்ள பயம் நம்மை விட்டுப் பறந்தோடி விடுகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Tuesday 29 March 2022

எல்லையைத் தொடும் துணிவு

 எல்லையைத் தொடும் துணிவு

ஆத்திரத்திற்கு இடம் கொடுத்தால் மனம் பாழ்பட்டு போகும். நிதானம் தவறாமல் இருக்க வேண்டுமானால் நியாயமான கோபத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.
பரபரப்பும், பதற்றமும், பணிவையும், துணிவையும் உண்டாக்காது.
அப்படிப்பட்ட மனிதன் வலிமை மிக்கவனாக விளங்க முடியாது .
நாம் வாழ்க்கையில் உயர்ந்து முன்னேற வேண்டும் என்றால்,பணிவும், துணிவும் கொண்டு செயல்பட வேண்டும். இதுதான் நம்மை வெற்றி பெற வைக்கும்.
ஆம் நண்பர்களே
உயர்வுக்குத் துணையாக இருப்பது பணிவும், துணிவும். கோழைத்தனம் கூடாது. கர்வம் ஆகாது.
பணிவு பக்குவத்தை உண்டாக்கும். துணிவு எல்லையைத் தொடுகின்ற வல்லமையைத் தரும்.
பணிவும், துணிவும் இணைந்தால் சிறப்பாக நம் வாழ்வு அமையும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 28 March 2022

ஆணவமும் அகந்தையும் அகலட்டும்.

 ஆணவமும் அகந்தையும் அகலட்டும்.

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டுத், தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது.
மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.
கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொன்னது:
ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது.
அது, அவருடைய நிலம் என்பதால், 'பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே...' என்றேன்.
உடனே அவர்,
'நாசமாப் போக, மூணு மாசத்துக்குப் முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன?, விளையாட்டி என்ன...?' என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்று இருக்கிறார்;
இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்குக் காரணமாக இருக்கிறது.
ஆம் நண்பர்களே
"நானே பெரியவன்''. எனக்கு எல்லாம் தெரியும். என் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும்.
"என்னை வெல்ல எவருமில்லை''. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள்.
இது போன்ற நான் என்ற அகந்தை அகற்றுங்கள்.
"நான்'' என்ற ஆணவத்தை அகற்றினால் தான் உள்ளத்தில் மனிதாபிமானம் பிறக்கும்; மனித நேயம் சுரக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தீரர் சத்தியமூர்த்தி நினைவைப் போற்றுவோம்


 

பாராட்டி மகிழ்வோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்தலில் இன்று மாண்பமை நீதியரசர் கேஎன். பாஷா தலைமையில் நடைபெற்று அதன் புதிய நிர்வாகிகளாக பேராற்றல் மிக்க ஆத்தங்குடி ஏஆர். ராமசாமி அவர்கள் தலைவராகவும், சொக்கலிங்கம் புதூர் ராம. வீரப்பன் அவர்கள் செயலாளராகவும், தேவகோட்டை அரு. மெய்யப்பன் அவர்கள் பொருளாளராகவும், சென்னை வை. ஜெயராமன் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாழிய புதிய நிர்வாகிகளின் தூய பணி, வாழிய அறம் சார்ந்த வெற்றி. பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ

 


கல்வி அனுபவம் தேடல் கூட்டணி.

 கல்வி அனுபவம் தேடல் கூட்டணி.

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலைப் போல திசையறியாது மூழ்கிப் போகும்.
படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின் கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!,
அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்...
கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...
பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...
வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசைதான்..
அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைதான் பரிசளித்திருக்கிறது...
கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள், அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகத்தான் இருக்கும்...
இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லிக் கொடுக்காத பாடத்தை, ஒரு வருடத் தேடல் கற்றுக் கொடுத்து விடும்.
முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றிபெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...
உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்ட வேண்டும்.
தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்தத் தேடல் மாறிக் கொண்டே இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்.
ஆம் நண்பர்களே
தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களைத் தழுவும் வரை தேடிக்கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு. நேற்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பாட்டுச் செம்மல், தான் பிறந்த உலகம்பட்டியில் கடைக்கோடி மக்கள் கணினி அறிவியல் வரலாறு படைத்திட இலவச கணினி மையம் நடத்தும் நேர்மையாளர், சேலம் மாநகரில் லேனா போட்டோ லேப் நிறுவனம், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் உழைப்பாளி, சேலம் நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர், கூட்டுக் குடும்ப வாழ்வின் வழிகாட்டி என முன்மாதிரி மனிதராய்த் திகழும் லேனா. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


வாழிய பல்லாண்டு. நேற்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பாட்டுச் செம்மல், தான் பிறந்த உலகம்பட்டியில் கடைக்கோடி மக்கள் கணினி அறிவியல் வரலாறு படைத்திட இலவச கணினி மையம் நடத்தும் நேர்மையாளர், சேலம் மாநகரில் லேனா போட்டோ லேப் நிறுவனம், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் உழைப்பாளி, சேலம் நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர், கூட்டுக் குடும்ப வாழ்வின் வழிகாட்டி என முன்மாதிரி மனிதராய்த் திகழும் லேனா. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


Saturday 26 March 2022

அடிமையாக இருக்கக் கூடாது.

 அடிமையாக இருக்கக் கூடாது.

சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால்!, பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம்...
நம்மை உடலளவிலும், மன அளவிலும், பொருளாதார அளவிலும் மற்றவர்கள் நெருக்கடிக் கொடுக்கத் தொடங்குவார்கள்...நாம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு, அதில் சிக்காமல் நிதானித்துக் கொள்ள வேண்டும்...
ஏதேனும் ஓரிடத்தில் சற்றே நெகிழ்ந்து இடமளித்து விட்டால், அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு, நம்மை நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்...
நம் உடலிலும், மனதிலும் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. சுருங்கச் சொன்னால் தவறான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்...
ஒரு தவளையைப் பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே வரும்...
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்...
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்...
ஆனால்!, எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது...
ஏனென்றால்!, வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும்.
சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
எது அந்த தவளையைக் கொன்றது....?
பெரும்பான்மையினர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வார்கள்...
ஆனால்!, உண்மை என்னவென்றால்,
எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமைதான் அதைக் கொன்றது.
ஆம் நண்பர்களே
நாமும் அப்படித்தான், தேவையில்லாமல் பலரிடம் அனுசரித்துச் செல்கிறோம். அவசியம் இல்லாமல் சூழலுக்குக் கட்டுப்படுகிறோம். பின்பு நாமும் அவற்றுக்கு முற்றிலும் அடிமையாகி அதில் இருந்து மீண்டு வர நினைத்தாலும் முடியாத ஒரு எல்லைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.
நாம் எப்போது அனுசரித்துப் போக வேண்டும், எதற்கு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது எதிர் கொள்ள வேண்டும் எதற்கெல்லாம் போராட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்.
கப்பலுக்கு வெளியே இருக்கும் கடல் தண்ணீர், கப்பலை ஒன்றும் செய்து விட முடியாது. அந்தத் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால்தான் ஆபத்து. அதுபோல தான் ஆபத்துக்களும், சிக்கல்களும் நாம் அனுமதித்தால் ஒழிய அவற்றால் நம்மை அழிக்க முடியாது.
தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் விந்தை நம் கைகளில் தான் உள்ளது

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Friday 25 March 2022

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தகுதியானவர்களைப் பாராட்டுங்கள்.

 தகுதியானவர்களைப் பாராட்டுங்கள்.

எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தம்மைப் பாராட்டுவதுதான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும்பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்குப் பின் புகழ்ந்து பேசுகிறார்கள்...
அதனால்தான் உயிரோடு இருக்கும்பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய்விடுகிறது...
ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்...
நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டுகொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...!
நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்...
சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டிவிட வேண்டும்...
நேற்றைய உணவு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது...!
ஆம் நண்பர்களே
அடிக்கடி மற்றவர்களின் நற்செயலைப் பாராட்டுங்கள். அப்படியானால் உங்களைப் பலரும் நேசிப்பார்கள்.
சாதனை செய்பவரை மற்றவர்கள் முன்னால் வைத்துப் பாராட்டுங்கள், மற்றவர் முன்னிலையில் அவரது மதிப்பு உயரட்டும். அது நீண்ட நாட்களுக்கு நினைவிருக்கும். பாராட்டுகள் உறவுகளையும் வளர்க்கும்.
நீங்கள் தகுதியானவர்களைப் புகழ்ந்தால், நீங்களும் புகழ் பெற வாய்ப்பு ஏற்படும்.

Thursday 24 March 2022

உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

 உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் எவற்றைப் பாதுகாக்கத் தவறினாலும் நாக்கை அடக்கிக் காக்க வேண்டும்.
கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.
நாவை அடக்கிக் காக்காது, சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும்.
இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும் கூட உருவாக்கும் .
விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு. அடங்காக் கோபம் பல கேடுகளை உண்டாக்கி சிறைக் காவலில் இருக்க வைக்கும்.
நாக்கை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் நமது, உடலுக்கும், மனதுக்கும் நல்லது..
தேவையற்றப் பேச்சை எப்போதும், யாரிடமும் பேசாதீர்கள். நன்றாக சிந்தனை செய்து பேசினால் நன்மையே விளையும்.
ஆம் நண்பர்களே
பொதுமறையாம் வள்ளுவம் சொல்கின்றது.
” யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ”..என்று.
யாரிடமும், அவர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. அவ்வாறு பேசினால், அதற்கான துன்பம் வந்து சேரும்.
ஆம்..,பேசுவதாக இருந்தால் அளவோடு பேசுங்கள்
இனிமையாகவும், மற்றவர் மனம் புண்படாமலும் பேசப் பழகுங்கள்.
உங்களின் பேச்சு மற்றவருக்கு அமைதி தருவதாக அமையட்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 23 March 2022

நாலணாவுக்கு வழியின்றி இரவெல்லாம் நடந்த கண்ணதாசன்

 நாலணாவுக்கு வழியின்றி இரவெல்லாம் நடந்த கண்ணதாசன்.

‘அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்குத் தூண்டுகோள்தான்.
மனிதனின் மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்.
அதுவே முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள்தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது.
ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது.
ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது.
செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவுப் படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது…
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
ஆம் நண்பர்களே
அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கற்றுக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது
“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பழிவாங்கிட அல்ல... தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்குச் செய்து விடக் கூடாது என்பதற்காக.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கருடன் வழிபட்ட ஒன்பது சுயம்பு நரசிம்மர் இன்று 22 3 2022 செவ்வாய்க்கிழமை நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

 கருடன் வழிபட்ட ஒன்பது சுயம்பு நரசிம்மர் இன்று 22 3 2022 செவ்வாய்க்கிழமை நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

🍀🌺கருடன் வழிபட்ட ஒன்பது சுயம்பு நரசிம்ம மூர்த்திகள் பற்றிய பதிவு🍀🌺
1. அகோபில நரசிம்மர் :
உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.
2. பார்க்கவ நரசிம்மர்:
மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)
3. யோகானந்த நரசிம்மர்:
மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.
4. சத்ரவத நரசிம்மர்:
கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.
5. க்ரோத (வராக) நரசிம்மர்:
பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர்.
இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.
6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்:
மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.
7. மாலோல நரசிம்மர்:
"மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.
அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.
8. பாவன நரசிம்மர்:
பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.
9. ஜ்வாலா நரசிம்மர்:
மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.
சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.
இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர்.
அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.
இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
*யோக நரசிம்மரின் சிறப்பு
குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.
விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.
*பூஜை முறை
நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.
*பலன்கள்
பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

Tuesday 22 March 2022

உயர்ந்த மனநிலை.

உயர்ந்த மனநிலை.
இன்றைய உலகில் நல்ல எண்ணமும், தியாக உணர்வும் உள்ளவர்கள் தங்களை வெளிஉலகத்துக்குத் காட்டிக்கிறது இல்லை.
நமக்காகத் தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக் குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்; மகள் மகிழ்ச்சியாக வாழக் கடன் பட்டும்கூடஎல்லா வசதிகளும் செய்யும் பெற்றோர்களும், சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சில சமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்தது.ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒன்று முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,
இண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டை இட்டு குஞ்சு பொறிச்சிக்கிட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு சொல்லி விட்டது...
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக் குருவி. 'இடம் தானே....தாராளமா இருந்துக்கோ!'னு பெரிய மனசு பண்ணிச்சு அந்த மரம்.
ஒரேமாசம்தான்.. ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் ஆற்றில் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது...
ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த இண்டாவது ஆல மரம் நிலையா நிலைச்சு நின்னது...
முதல் ஆலமரத்தைப் பார்த்து குருவி,
'துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு கடைசியில் இந்த நிலைதான் ஏற்படும் என்று எல்லோரும் எண்ணுவதுபோல குருவியும் நினைச்சது..
ஆனால்,வெள்ளத்துல அடிச்சிட்டு போகும் அந்த முதல் ஆலமரம் குருவியைப் பார்த்து,
''என் வேரோட பலம் ஒரு மழைக்குக் கூட தாங்காது என்று எனக்கு நன்கு தெரியும்...
நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் என்ற நல்ல எண்ணத்தில்தான் உனக்கு இடம் தர மறுத்துட்டேன்... என்னை மன்னித்து விடு குருவியே..
ஆனாலும் நீ எங்கு இருந்தாலும் உன் குடும்பத்தோட மகிழ்ச்சியுடன் நல்லா இருக்கணும்!' என்று சொல்லி ஆற்றில் சென்றது..
ஆம் நண்பர்களே
பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்ட, எண்ணம் உடையவர்கள் தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.