Monday 18 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குணநலம் சான்றோர் நலனே.......
புகழ் பெற்று விளங்கிய நாடக ஆசிரியரைப் பாராட்டி விருந்தளிக்க விரும்பினார் அந்த நாட்டு அதிபர். நாடக ஆசிரியரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டார். விருந்து நாள் வந்தது. அழைக்கப்பட்டோர் அனைவரும் வந்து சேர்ந்தனர். நாடக ஆசிரியரும் வந்து சேர்ந்தார். ஆனால் வரவேற்பாளர்கள் அவரை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். அவர் விருந்துக்குரிய உடை அணிந்து வரவில்லை. அதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரும் அதனைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடியே, மீண்டும் வருவதாகக் கூறிச்சென்றார். உரிய ஆடை அணிந்து வந்த அவரை அனைவரும் வரவேற்றனர்.
விருந்து தொடங்கியது. அனைவரும் மதுக்கோப்பையைக் கையில் எடுத்தனர். மது அருந்தத் தொடங்கினர். போதை ஏறியதும் தள்ளாடியபடியே வாழ்த்தினர். நாடக ஆசிரியர் மது அருந்தவில்லை. நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். தனது விருந்துக்குரிய ஆடையைக் கழற்றி அதை மதுக்கிண்ணத்தில் தோய்த்தார். எல்லோரும் வியப்புடன் அவரைப்பார்த்தனர். அவர் சொன்னார். ‘‘இங்கே நான் வரவேற்கப்படவில்லை. இந்த ஆடைக்குத்தான் மதிப்பு. வரவேற்பு, எனவே இந்த ஆடையை விருந்தில் பங்கெடுத்துக்கொள்ளட்டும்.’’
‘‘நாம் நம் வாழ்வில் எதற்கு மதிப்பளிக்கிறோம்? திறமைக்கா? ஆடம்பரத்துக்கா? ஒருவரது நற்பண்புகள், மற்றும் அவரது திறமையை வைத்தே அவரை மதிக்க வேண்டும். அவரது தோற்றத்தைப் பார்த்து அல்ல! சிந்திப்போம் செயலாற்றுவோம்.
*குணநலம் சான்றோர் நலனே பிறநலம்*
*எந்நலத்து உள்ளதூஉம் அன்று.*
~திருக்குறள்🌹
சான்றோர் என்பவர்க்கு அழகு, அவருடைய பண்புகளால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேராது.

No comments:

Post a Comment