Monday 18 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ..?
‘’கிஸ்தி... திறை... வரி... வட்டி...’’ - சிவாஜியின் அனல் பறக்கும் இந்த வசனத்தை மறக்க முடியுமா? ரசிகர்களின் நாடி நரம்புகளைச் சூடேற்றிய இந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ காட்சியில் ஜாக்ஸன் துரையை கவனித்திருக்கிறீர்களா? யெஸ்... அவரேதான் இவர். நிஜப் பெயர், பார்த்திபன். பளீர் கலரில் மிடுக்கான துரையாக பட்டையைக் கிளப்பிய இவருக்கு இன்று 90 வயது . அவர் உற்சாகமாக நினைவு கூர்கிறார் அந்தப் பொற்காலங்களை...
‘‘வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த, கேதாண்டப்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். ராஜாஜியின் பரம்பரையில் வந்தவன் நான். அப்பா, சக்கரவர்த்தி ராமசாமி. அம்மா, ராஜலட்சுமி. சகோதர, சகோதரிகள் ஐந்து பேரில் நான்தான் மூத்தவன். எலிமென்ட்ரி ஸ்கூலில் படித்தபோதே என்னை நாடகங்களில் நடிக்க வைத்தனர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தபோதும் கல்லூரி விழாக்களில் நடித்தேன். எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் பளிச்சென தனியாகத் தெரிவேன். பலரும் ‘நீ யாரப்பா... சினிமாவில் நடிக்கிறவனா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். இதனாலேயே எனக்குள் நடிப்பு ஆசை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
ஆனாலும் குடும்பத்தின் வற்புறுத்தலால் 1953ல் தலைமைச் செயலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எஸ்.ஜே.ஆச்சார்யா என்பவர் கெஜட்டட் ஆபீஸராக இருந்தார். வேலை முடிந்தபிறகு அவரே இயக்கி நாடகம் நடத்துவார். ‘கோடையிடி’ என்ற அவரின் நாடகத்தில் முதல்முறையாக நான் ஹீரோவாக நடித்தேன்! பிறகு சேலத்தில் ‘மெட்ராஸ் செக்ரட்டேரியட் பார்ட்டி’ சார்பில் நடத்தப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தில் புதுக்கோட்டை மன்னர் வேடத்தில் நடித்தேன்.
சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு அரசாங்க வேலை பார்க்க முடியவில்லை. ஜெமினி ஸ்டுடியோவில் வேலை கேட்டு ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். தலைமைச் செயலகத்தில் அப்போது எனக்கு 82 ரூபாய் மாதச் சம்பளம். இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு ஏன் போக வேண்டும் என்று வீட்டில் வருந்தினார்கள். அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் ஜெமினி கணேசன் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டதால், உடனே எனக்கு அந்த வேலை கிடைத்தது. சம்பளம் 150 ரூபாய்.
1955ல் திலீப்குமார், தேவ் ஆனந்த் நடித்த ‘இன்சானியத்’ என்ற இந்திப் படத்தில் அம்ஜத் கான் வில்லனாக நடித்தார். அவரது வில்லன்கள் குழுவில் ஓர் ஆளாக நடித்தேன். முதன்
முதலில் கேமரா முன் தோன்றிய படம் அது. அப்போது மாதம் 300 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். கேன்டீனில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைத்தது. தினமும் ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்று வர கார் வரும். இப்படி முதல் படத்திலேயே எனக்கு சொகுசான வாழ்க்கை அமைந்தது. 1957ல் கலைஞர் வசனங்களால் புகழ்பெற்ற படம், ‘புதுமைப்பித்தன்’. இதில் டி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணனாக நடித்தபோதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாகப் பார்த்தேன்.
‘நல்லவன் வாழ்வான்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘தாலி பாக்கியம்’, ‘பறக்கும் பாவை’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘சங்கே முழங்கு’, ‘இதயக்கனி’, ‘நவரத்தினம்’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன்’’ என்கிறவர், மெல்ல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அனுபவத்துக்கு வருகிறார்...
‘‘1958ல் ஜாக்ஸன் துரையாக நடித்தபோது எனக்கு வயது 27. சாலிக்கிராமத்திலுள்ள நடிகை பானுமதியின் பரணி ஸ்டூடியோவில் இரவு நேரம் நடந்த ஷூட்டிங்கில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. ஒரே டேக்கில் நடித்தால் காட்சி தத்ரூபமாக அமையும் என்று டைரக்டர் எதிர்பார்த்தார். ‘ம்... நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?’ என்று நான் தொடங்க, பின்பு அனைத்து வசனங்களையும் நாங்கள் பேசி நடித்தோம்.
சிவாஜியுடன், ‘அவள் யார்?’, ‘இரும்புத்திரை’, ‘ஸ்ரீவள்ளி’ உள்பட நிறைய படங்களில் நடித்த நான், அவர் மகன் பிரபுவுடனும் ‘கோழி கூவுது’ படத்தில் நடித்தேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் என 120 படங்களில் நடித்திருக்கிறேன்.
கலைஞர், எம்.ஜி.ஆர் படங்களில் நடித்திருக்கிறேன்.ஜெயலலிதாவின் ‘வைரம்’, ‘மூன்றெழுத்து’, ‘அன்று கண்ட முகம்’, ‘மாட்டுக்கார வேலன்’ படங்களில் நடித்தேன். மூதறிஞர் ராஜாஜியின் கதையான ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்தில் நடித்தேன். பிறகு பேரறிஞர் அண்ணாவின் வசனத்தைப் பேசி, ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் நடித்தேன். தமிழில் என்.டி.ராமாராவ் தயாரித்த ‘ராஜசூயம்’ படத்தில் முனிவர் வேடத்தில் நடித்தேன். இப்படிப் பார்த்தால், 6 முதல்வர்களுடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்" என்றவர் மீண்டும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பற்றி கூறுகிார்.
ஒரு வருஷத்துக்கும் மேல ஓடின காவியம்யா அது. நம்மள்ல யாருக்கு கட்டபொம்மனைத் தெரியும்? இப்ப படிக்கிற பசங்களுக்கெல்லாம் சிவாஜிதான கட்டபொம்மன். ஆனா சும்மா சொல்லக்கூடாது, சிவாஜிக்கு கட்டபொம்மன் மேல அவ்வளவு மரியாதை. எனக்கும் அந்தப் படத்தாலதான் பேரு.
இதோ, 61 வருஷம் கடந்தும் எல்லாரும் நினைக்கிறாங்களே'' என்றவர், சில நிமிட மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்.
''அந்த படத்துல நடிச்சதுல நான் ஒருத்தன்தான் இன்னும் மிச்சமிருக்கேன் தம்பி. ஷூட்டிங்ல சிவாஜி...'' எதையோ சொல்ல வந்தவருக்கு அது நினைவுக்கு வர மறுக்க, ''90 தாண்டிடுச்சுல்ல, அதான் நினைவுல வரமாட்டேங்குது...'' என்றவர், ''ஆனா அந்த வசனம் எனக்கும் மறக்கலைய்யா... 'என்ன மீசையை முறுக்குகிறாயா... அது ஆபத்துக்கு அறிகுறி...' '' எனத் தான் பேசிய வசனத்தைச் சொல்லி சிரிக்கிறார்.
90 வயதான இவர் தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்துவருகிறார். முதுமையின் காரணமாக வாக்கர் உதவியுடன் நடக்கிறார்.
கிஸ்தி, திரை, வரி, வட்டி.. வேடிக்கை! வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா, ஏற்றமிறைத்தாயா... நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா... நாற்று நட்டாயா, களை பறித்தாயா அல்லது கழனி வாழ் உழவருக்கு கஞ்சிக் களையம் சுமந்தாயா... மானங்கெட்டவனே.''
தென்தமிழகத்தை ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருடன் இப்படி அழகு தமிழில் வாதிட்டிருப்பாரா எனத் தெரியாது. ஆனால் 'கட்டபொம்மன்' என்றால் தமிழகம் இந்த வசனத்தை என்றும் மறக்காது.
நான் என் சின்ன வயதில் இந்தப் படத்தில் ஜாக்ஸன் துரையை பார்த்து இப்படிதான் வெள்ளைகாரர்கள் இருப்பார்களோ என்றும்,வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபடாமல் இந்த வெள்ளைக்காரனை கொன்றுவிட வேண்டுமே என்று சாமியை வேண்டிக்கொண்டே படம் பார்த்ததும்,வீரபாண்டியன் பிடிப்பட்டதும் எப்படியாவது காப்பாற்று சாமி என்று மனதில் வேண்டிக்கொண்டதும்,தூக்கில் போட்டதும் அழுததும்,அந்தகால டூரிங் டாக்கீஸ் மணலில் என்னோடு அமர்ந்து படம் பார்த்த உறவினர்களின் நினைவும் வந்து செல்கின்றது.
அந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் ரிலீஸான நாள், மே 16. சரியாக 61 ஆண்டுகள் இன்று நிறைவடைந்திருக்கின்றன.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment