Wednesday 13 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் மீண்டும் ரூ. 5.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அமைந்துள்ள தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த முயற்சிக்கு உதவும் பொருட்டு, உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சக்தி மசாலா நிறுவனம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது.
முதல்வரின் தலைமையின் கீழ் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க் கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணியாற்றி வருவதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அனைவருக்கும் தனது வணக்கத்தையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் மே 11 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரூ. 5.10 கோடி நிதியைத் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.
இதுவரை சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வரின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிகைகளுக்காக மொத்தம் ரூ.10.10 கோடி நிவாரண நிதியாக வழங்கி அரசுக்கும் தமிழக மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் செய்திக்குறிப்பொன்றில் சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பு;தமிழகத்தில் இவர்களைவிட பெரும் செல்வந்தர்கள் உண்டு.இருந்தும்..?
சரி,தர்மம் செய்யாமல், அதாவது பிறருக்கு நல்காமல் சேர்த்துவைத்த செல்வம் என்ன ஆகும்?
பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்..
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!
மனமுவந்து தர்மங்கள் எதையும் செய்யாமல் சேர்த்துவைக்கப் பெற்ற செல்வங்கள்
சூனிய வித்தைகளுக்கும்
பேய்வழிபாடுகளுக்கும்
தாசிகளுக்கு (விலை மகளிர்) கொடுத்தற்கும்
வீண் செயல்களுக்கும்
கொள்ளை கொடுத்ததற்கும்
மதுவிற்கும்
அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
இறுதியாத்திரைக்கும்
கள்வர்களால் கவர்ந்து கொள்ளப் படுவதற்கும்
நெருப்பால் வெந்து அழிவதற்கும் உரியதாகும்
ஈயாமல் சேர்த்த செல்வம் பலவையிலும் பாழாகும் என்பதைப் பாடலாசிரியை உணர்த்துகின்றார்.
யார் அந்தப் பாடலாசிரியை?
நம் ஒளவைப் பாட்டிதான்!
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment