Monday 31 July 2023

ரசனையும் மகிழ்ச்சியும் . .

 ரசனையும் மகிழ்ச்சியும் . .

*"எதுவும்
நம்மைத் தாண்டி இல்லை.
அனைத்து சக்தியும் திறமையும் நமக்குள் தான் இருக்கு;
அதைத் தட்டி எழுப்புவோம்"*
*கடவுளை நினைத்துச்
செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் அதிகம். அறியாமல் செய்தாலும் அதற்கும் பலன் அளிக்கிறார்.*
*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகாது.*
*குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல்,
பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.*
*மனதில்
எழும் ஆசைகளைச்
சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.*
*தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.*
*யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது.*
*அனைவரிடமும்
கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.*
*ரசனையோடு எதையும்
அணுகும் போது
அதனால்
கிடைக்கும் சந்தோஷம்
இரட்டிப்பாக இருக்கும்.*
*குட்டையைப் போல ஓரிடத்தில் தேங்கிடாமல்*
*ஆற்றைப்போல் நிற்காமல் ஓடு*
*வெற்றி எனும் பெருங்கடலை
அடையும் வரை.*
*வார்த்தைகளாய்
துளிர் விடும்
அக எண்ணங்களுக்கு
நிறைவு என்பதே கிடையாது*
*வாழ்க்கை
எனும்
நாடக மேடையில்
நல்லவர்களை விட நடிப்பவர்களை தான் நம்புகிறார்கள். *
*அழுவதை
விட அழாமல் இருப்பதே கடினம். *
*சிறந்த பக்குவம் என்பது
சொல்லுவதற்கு பதில்கள் நிறைய இருந்தும்,*
*புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனமாக இருப்பதே. *
*எதைப் பற்றியும்,
எவரைப் பற்றியும்
நம் தேவைக்கு அதிகமாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதே
நம் நிம்மதிக்குச் சிறந்த வழி…*

வாழிய பல்லாண்டு


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

சரியானதை நோக்கிச் செல்லுங்கள்.

 சரியானதை

நோக்கிச் செல்லுங்கள்.
முன்னேற்றமே
இல்லாமல் இருக்கிறதே என்ற மனோபாவத்தை விட்டொழியுங்கள்.
மெதுவாக முன்னேறுவது
எவ்வளவோ மேல் என்ற நிலையில் பயணத்தைத் தொடருங்கள்.
ஆளைக் கொல்லும்
கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
எளிதானதை நோக்கிச் செல்லாதீர்கள். சரியானதை நோக்கிச் செல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு அற்புதப் பரிசு அதை மகிழ்வாய் வாழ முயற்சி செய்யுங்கள்.

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...

 பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜
2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜
9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன. 🦜
10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. 🦜
11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்கையிலிருந்து பெற்று கொள்கின்றன. 🦜
12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன. 🦜
இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம்

நம்பிக்கை . . . .

 நம்பிக்கை . . . .

*விடை தெரியாத வரை தான் வினாக்களுக்கு
ஒரு சுவாரசியம் இருக்கும்.*
*எதிர்காலம் அறியாத வரை தான் நிகழ்காலத்திற்கு உயிர் உண்டு.*
*மற்றவருக்கு
நம்பிக்கையாக இருங்கள்.*
*ஆனால், ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க.*
*நாம் தெரிந்த நியாயம் இது என்று விவாதிக்கலாம் தவறில்லை.*
*ஆனால், நமக்குத்
தெரிந்தது மட்டும் தான் நியாயம்
என்று விவாதிப்பது தான் தவறு.*
*கொடுத்தால் மறந்து விடுங்கள். கிடைத்தால் நினையுங்கள்.*
*பிறருக்கு வருவதை நீங்கள் தடுக்க நினைத்தால் உங்களுக்கு வருவது தானாக நின்று விடும்.*
*நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள்
கெட்டது நடந்தால் அதை அனுபவமாக்குங்கள்.*
*இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.*
*ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கிச் சுமக்கின்றோம்.*
*உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.*
*உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாகத் தெரியும்.*
*இறைவனின் கரங்களுக்குச் சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.*
*அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.*
*உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.*
*ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..*
*இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,*
*நேர்நிலையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.*
*உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.*
*இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு
வாழ்த்துகள்
*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

Saturday 29 July 2023

வாழ்க்கைக்குச் சிறந்த வழி.

 வாழ்க்கைக்குச் சிறந்த வழி.

சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.
உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்புப் பற்றிக் கூறும் போது, இப்படிச் சொல்கின்றார்,
"உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப் போக மீதியைச் செலவு செய்யுங்கள்"
*சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான்.* வளங்களை வீணடிக்காமல், திறமையாகக் கையாள்வதை இது குறிக்கும்.
அதாவது அவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது
பொதுவாக, செலவு செய்வதைக் கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
கஞ்சத்தனம் என்பது,
அவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
*சிக்கனம் என்பது,*
*தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.*
மூன்றாவதாக ஆடம்பரம் என்பது,
மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதிக்கு மீறிச் செலவு செய்வது.
நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது,
கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளைச் செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
சேமிப்புப் பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இப்பழக்கத்தைச் சரியாகச் செய்தனர். பணத்தை மட்டும அல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர்.
இன்றையக் காலகட்டத்திலும் நம் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இருக்கும் போதே சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நாமும் பழக வேண்டும்.
*குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும்..*
*இன்று வரை
சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை*.
*இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள்.*
*சிக்கனமும், சிறு சேமிப்பும் தான் மகிழ்வான வாழ்விற்கு வழி வகுக்கும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கருமுத்து தியாகராஜன் நினைவைப் போற்றுவோம்


 

வாழிய பல்லாண்டு


 

Thursday 27 July 2023

*நிறைகளைப் பாராட்டுவோம்.*

 *நிறைகளைப் பாராட்டுவோம்.*

ஒரு நாட்டின் அரசனுக்கு ஒரு காலும்,
ஒரு கண்ணும் ஊனமாக இருந்தது.
அரசன் நாட்டில் உள்ள அனைத்து ஓவியர்களையும் அழைத்து தன்னை
அழகாக வரையும்படி கேட்டுக் கொண்டான்.
அனைவரும் ஊனமுற்ற அவனை அழகாக வரைய முடியாது எனக் கூறி விட்டார்கள். அதனால் மன வருத்தத்துடன் இருந்தான் அரசன்.
சில மாதங்கள் கழித்து ஓவியன் ஒருவன் அரசனிடம் உங்களைப் போன்றே தத்ரூபமான ஓவியம் வரைந்து
காட்டுகிறேன் அரசே எனக் கூறினான்.
அரசன் வேட்டையாடுவதற்கு குறி
பார்ப்பது போன்ற காட்சி. அரசன் ஒரு கண்ணை மூடிக்கொண்டு , ஒரு காலை மடக்கிக்கொண்டு வேட்டையாட குறி பார்ப்பது போன்ற மிக அழகிய காட்சி
மிகச் சிறப்பாக வரையப்பட்டிருந்தது.
அரசனின் அவையில் இருந்த அனைவரும் அந்தத் திறமையான ஓவியத்தை பார்த்து வியந்தார்கள்.
கதை எளிமையாக இருந்தாலும்
Concept அற்புதமானது.
நாம் எல்லோருமே மற்றவர்
குறைகளையே பார்த்துப் பழகிவிட்டோம்.
நிறைகளை பாராட்டும் பக்குவம் ஏனோ சட்டென்று நமக்கு வருவதில்லை.
சற்று மாற்றி யோசிப்போம்.
நட்பு,
உறவுகளில்
குறைகளை பார்க்காமல்,
அவர்கள் நிறைகளைப்
பாராட்டக் கற்றுக் கொள்வோம்.
இது அவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, நம்மோடு அவர்களை ஆத்மார்த்தமாக இணைக்கும் பாலமாக இருக்கும்.
நம் வாழ்வும் சிறக்கும்.
இரு தரப்பினருமே
ஒத்தும்,
உதவியும்
வாழ வழிவகுக்கும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய தம்பதியர் வாழியவே. இன்று காலை 27.07.2023 எனது இளைய அண்ணன் ஆர். சம்பந்தன் அவர்கள் மைத்துனர், காரைக்குடி கருத்தான் செட்டியார் வீடு, கரூர் வைஸ்யா வங்கி நா.நாச்சியப்பன் (எ) பஞ்சு செட்டியார்- காவேரி ஆச்சி அவர்களது 59 ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா திருக்கடையூரில் அபிராமி அம்மன் கோவிலில் நடைபெற்றது. தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள்


 

அப்துல்கலாம் நினைவைப் போற்றுவோம்


 

Wednesday 26 July 2023

உருத் தெரியாமல் போகும்.

 உருத் தெரியாமல் போகும்.

புறங்கூறல், புறணி, வீண் பேச்சு, வம்பு அரட்டை, புரளி, வதந்தி, செல்லமாய் ‘காஸிப்’... உடன் இல்லாத இன்னொருவரைப் பற்றி அங்கே கூடியிருப்பவர்கள் இட்டுக்கட்டிப் பேசுவது என்பது ஒரு காலத்தில் திண்ணையிலும் புழக்கடையிலும் புழங்கியவைதான்;
இன்று சமூக வலைதளங்களின் புண்ணியத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த புறங்கூறலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்.
எளிமையான உபாயம் புறம்பேச்சை, அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுவதுதான். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில், அது சுற்றிச் சுற்றி வந்தாலும், அதன் உண்மையான இலக்கு நீங்கள்தான். உதாசீனப்படுத்தினால் உருத்தெரியாமல் அழிந்துவிடும்.
மாறாக ‘என்னைப் பற்றி இப்படியொரு அவதூறா...’ என்று வெகுண்டு நீங்கள் கிளம்பும்போதுதான், அந்த வதந்தி உயிர்பெறும்.
மாறாக, உலா வரும் வதந்தி பற்றி கவலையில்லாததாய்க் காட்டிக்கொண்டு, அதேசமயம் அமைதியாய் அதை ஊன்றிக் கவனியுங்கள். இதை யார் கிளப்பி விட்டது, கிளப்பியவருக்கும், பரப்பியவருக்குமான ஆதாயம் என்ன... என்ற கேள்விகளுக்கான பதில்கள், உங்களுக்குப் பயன்படலாம். சில சமயம் வதந்தியின் பாதியில், நீங்கள் கவனிக்க மறந்த ஒரு உண்மையும் ஒளிந்திருக்கலாம். இவ்வகையில் அவர்கள் மெனக்கெட்டு உங்கள் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். மெச்சிக் கொள்ளுங்கள்.
மாறாக, உலா வரும் வம்பு உங்கள் இருப்பை, நடமாட்டத்தை, இயல்பைப் பாதிக்கும் அளவுக்குக் கடுமையான மன உளைச்சலைத் தருகிறதா, தாமதிக்காமல் உங்கள் சுயவிளக்கத்தை பகிரங்கமாகவும், தன்மையாகவும் வெளிப்படுத்துங்கள்.
எல்லோருக்கும் உள்ளது போல இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய பிரச்சினை, இதைத் திடமாக எதிர்கொள்வேன் என்பதோடு முடித்துக்கொள்ளுங்கள். பதில் விஷமப் பரப்புரையோ, சவடாலோ வேண்டாம். இதை எதிர்பார்த்து இன்னுமொரு கும்பல் காத்திருக்கக் கூடும்.
இந்த வகையில் மற்றவர் ஒளித்து வைத்துப் பரப்பும் கிசுகிசு மீது நாமே வெளிச்சம் பாய்ச்சினால், அதன் மீதான சுவாரசியத்தைச் சுற்றியுள்ளவர்கள் இழப்பார்கள். அத்தோடு கிசுகிசு பிசுபிசுத்துவிடும்.
திருவள்ளுவர் இதனை அழகாக கூறி உள்ளார்.
*புறங்கூறிப் பொய்த்துயிர்
வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.*
*விளக்கம்:*
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Tuesday 25 July 2023

சுறுசுறுப்பு.

 சுறுசுறுப்பு.

தவறான திட்டமிடல்களே காலதாமதத்தின் முக்கியக் காரணி, "எதையுமே பிளான் பண்ணிப் பண்ணனும்", னு ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாகக் கூறினாலும், அதுதான் உண்மை.
ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றியத் தெளிவான திட்டமிடல் வேண்டும்.
சரியாகத் திட்டமிட்டு, நேர்மையான செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்தக் காலத்துக்குள் செய்து முடிக்க முடியும்.
ஒரு சில அரசு அலுவலர்கள், உயரதிகாரிகள் ஆகியோர்கள் எந்த வேலையும் குறித்த காலத்தில் செய்யாமல் காலதாமதமாகவே செய்கின்றார்கள்.
இந்தக் காலதாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்கின்ற போது அவர்களுக்கு ஒருவித கவனக்குறைவான மனப்பான்மை உண்டாகிறது.
சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் காலதாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவப் பாடத்தைக் கொடுக்கும்.
காலம் தவறாமை என்பது தலைமைப் பண்புகளில் மிக முக்கியமானது.
ஒரு இடத்திற்கு மேலதிகாரிகள் சரியான நேரத்துக்கு வந்தால் தான், அவருக்குக் கீழே வேலை செய்பவர்களும் குறித்த நேரத்திற்கு வருவார்கள்.
ஆம் முதலில் பொறுப்பில் உள்ளவர்கள் காலம் தவறாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சிக்கலகள் இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதைச் சரி செய்து விட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும்.
காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி "தள்ளி வைத்தல்".
எந்த ஒரு செயலையுமே தள்ளி வைத்தால், நிச்சயமாக
அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும்.
எதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ இந்த விநாடி தான்.
சுறுசுறுப்பு என்கிற மருந்தே, ''தாமதம் என்ற வியாதியை'' வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி.
நோய்க்கு மருந்து உண்பதைக் காட்டிலும், தடுப்பூசி போடுவதே அறிவாற்றல் அல்லவா.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வ.உ.சி.வாலேஸ்வரன் நினைவைப் போற்றுவோம்


 

வாழிய பல்லாண்டு


 

வாழிய பல்லாண்டு


 

சின்ன வெங்காயத்தின் பலன்கள்.:

 சின்ன வெங்காயத்தின் பலன்கள்.:

வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும். காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.

Monday 24 July 2023

ஆறாம் அறிவு.

 ஆறாம் அறிவு.

ஒவ்வொரு உயிரினங்களையும் இயற்கை எதோ ஒரு ரூபத்தில் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
அதன் செயல்பாடுகள் அனைத்துமே உற்று நோக்கு கொண்டுள்ளது.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்மறையான செயல்வினை நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் நல்லது நினைத்தால் உங்களுக்கு திரும்ப நல்லதே கிடைக்கிறது.
கெட்டதை நினைத்தால் கெட்டதே நடக்கிறது.
இதெல்லாம் எங்கிருந்து எப்படி நம்மை நோக்கி வருகிறது என்று யோசிக்கும்போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
இயற்கை இந்த பூமியில் நம்மை உருவாக்கத் தொடங்கிய முதலே நேரடி கண்காணிப்பில் வந்து விடுகிறோம்.
அதற்கும் மனித மூளைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
இயற்கை மனிதன் மூளையில் கட்டளையிடுகிறது.
இயற்கை தன்னை சரி செய்து கொள்ள மனிதனை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளது.
அதுவே நம் ஆறாம் அறிவு என்கிறோம்.
பிரபஞ்சத்தின் தெய்வம் ஏதோ ஒரு சக்தி அனைத்து ஜீவராசிகளையும் தொடர்பு கொள்கிறது கொண்டுள்ளது.
இந்த சக்தியை மனிதர்கள் உணர்ந்து கொள்ள முழுமையாக தவம் இருக்க வேண்டும் அல்லது தியான பலன் மூலமாக அறிய வேண்டும்.
அதற்கு மெய்ஞானம் மிக மிக முக்கியம் சாதாரணமாக மனிதன் பக்குவ நிலையை அடைந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை உணர முடியும்.
அது ஆன்ம பலமும் தெய்வ பலம் என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அதற்காக உருவாக்கப்பட்டது மத வழிபாடுகள், எந்த மதத்தை வழிபட்டாலும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இறுதியாக செல்வது இயற்கையை உருவான பிரபஞ்சத்திடம் தான்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு தத்துவார்த்தமான உண்மையைச் சொன்னார், நீங்கள் என்னிடம் பேசும் போது அந்த ஒலி அலைகள் கூட பிரபஞ்சத்திடம் சென்று கொண்டு தான் என் செவிகளுக்கு வருகிறது
உதாரணமாக பிரபஞ்சத்திலிருந்து தான் எனக்கு கிடைக்கிறதே தவிர உங்களின் வாயிலிருந்து ஓசை ஒலி எனக்குக் கேட்பதில்லை, இதுவே உண்மை என்றால் சற்று சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கும் அது சரி என்று தெரிகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் அருள்மிகு மதுக்கார நாச்சியம்மன் கோவில் 33 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா.

 புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் அருள்மிகு மதுக்கார நாச்சியம்மன் கோவில் 33 ஆம் ஆண்டு

வருஷாபிஷேக விழா.
நேற்று காலை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட செவலூர் அருள்மிகு மதுக்கார நாச்சியம்மன் கோவில் 33 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் மனிதத்தேனீ பங்கேற்று 2024 ஆம் ஆண்டு இங்கு நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பணிகளை சிறப்பிக்க வேண்டும் என பங்கேற்ற 13 ஊர் நகரத்தார் 456 புள்ளிகளின் குடும்பத்தினர் மத்தியில் சிற்றுரை ஆற்றினார்.
இன்று மிகச் சிறப்பாக காலை முதல் நடைபெற்ற இந்த விழாவில் ஜெபம், ஹோமம், கோ பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஏலம் நடைபெற்றது. அதிக அளவில் ஏலப் பொருட்கள் இருந்ததும், அதனை எடுப்பதற்கு பேரார்வத்துடன் நகரத்தார்களின் பங்களிப்பு இருந்தது.
வருபவர்களை அழைத்துச் செல்ல வேன் வசதி, கோவிலில் இருந்து உணவு ஏற்பாடு செய்துள்ள மண்டபத்திற்கு ஆட்டோ வசதி என இலவசமாக செய்திருந்தனர்.
1000 பேர் பங்கேற்று வணங்கிய இந்த விழாவின் மிகச்சிறந்த ஏற்பாடுகளை மிதிலைப்பட்டி மோகன் நடராஜன், நடப்பு காரியக்கார் கொத்தமங்கலம்
கேஎம். முத்துக்கருப்பன், திருப்பணிக் குழுத் தலைவர் காரைக்குடி எம். வீரப்பன் உள்ளிட்ட நகரத்தார் செய்திருந்தனர்.
ஏலம் விடுதல் முதல் உணவு பரிமாறும் பணி வரை அனைத்திலும் 13 ஊர் நகரத்தார்கள் முழு ஈடுபாட்டுடன் இதற்கான பணிகளை நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
வாழிய அறப்பணிகள் வாழியவே.