Thursday 29 February 2024

தேவையானது தேவையற்றது . .

 தேவையானது தேவையற்றது . .

*_உங்கள் வாழ்தலில்_*
*_மகிழ்ச்சி வேண்டுமெனில்.._*
*_தேவையானதை_*
*_தேடி செல்லாதீர்கள்..!_*
*_உங்களிடம் இருக்கும்_*
*_தேவையற்றதை விலக்குங்கள்..!!_*
சில சமயங்களில்
நாம பேசறதை காது குடுத்து கேட்க யாராவது இருக்க மாட்டாங்களான்னு ஏங்கியிருப்போம். அப்படி ஏங்கியவர்களுக்குத் தெரியும் நமக்குன்னு ஒருத்தவங்க இருக்குறதோட அருமை.
எதுனாலும் முதலில் அவங்களிடம் சொல்லி விடுவோம். சந்தோஷப்படுறதோ, அழறதோ முதலில் அந்த நபரிடம் பகிர்ந்து கொள்வோம். அது யாராக வேணுமோ இருக்கலாம், தோழியோ, தோழனோ, சொந்தமோ, பந்தமோ. ஆனால் அப்படி ஒரு நபர் நம் வாழ்வில் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்.
இதை எதுக்காக இங்கே சொல்றேன்னா, சில பேர் பிரச்சனைகளை மனசிலேயே போட்டு வைச்சிப்பாங்க. வெளியில சொல்ல மாட்டாங்க. ஆனால் எல்லோர்கிட்டேயும் சிரிச்சி நல்லா பழகிட்டிருப்பாங்க.
நமக்கு என்னைக்கோ ஒரு நாள் அவங்க பிரச்சனை தெரிய வரும் போது ஆச்சர்யமாயிருக்கும். எப்படி இவ்வளவு கவலையை வைச்சிக்கிட்டு சிரிக்க முடிஞ்சுதுன்னு. அதைப்போல இருப்பவர்களை பார்க்கும் போது எனக்கு மன வேதனையாக இருக்கும். அதுவும் அவங்க நமக்கு தெரிஞ்சவங்களாயிருந்தால்
இன்னும் வேதனை.
ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருத்தவங்களுக்கு நீங்க உதவி செய்யுறது முக்கியமில்லை. குறைந்தபட்சம் அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டாலே போதுமானது. ஆறுதல் வார்த்தைகள் சொல்வதால் எவ்வளவு பெரிய வேதனையிருந்தாலும் அப்படியே பறந்துடும். இப்படி ஒருத்தவங்களுக்கு சப்போட்டிவாக இருப்பது ரொம்ப முக்கியம்ன்னு நான் நம்புறேன்.
நம்ம கஷ்டத்தை ஷேர் பண்ண கூட யாருமேயில்லையேன்னு வருந்தப்படும் போது கண்டிப்பா நியாபகம் வைச்சிக்கோங்க. நான் இருக்கேன். என்கிட்ட சொல்லலாம். நான் சப்போட்டிவாக இருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப நாளாவே இதை சொல்லனும்னு நினைச்சேன். இன்னைக்கு சொல்லிட்டேன். இப்படி சொல்லிப் பாருங்கள்.
*"நான் இருக்கேன்"* இந்த வார்த்தையை சோகமாக இருக்கும் யாரிடமாவது சொல்லி பாருங்களேன். உடனே அவங்க முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். நம்பிக்கை கொடுக்க கூடிய மந்திர வார்த்தை. எனவே நீங்களும் உங்களால முடிஞ்ச அளவு எத்தனை ஆயிரம் வாட்ஸ் பல்புகளை எரிய வைக்க முடியுமோ எரிய வைக்கலாம்.
வாழ்க்கையில்
வரும் ஒவ்வொரு நபரும்
ஒரு பாடத்தை கற்பித்து விட்டுத் தான் செல்கிறார்கள்.
உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்காதீர்கள். அந்த வழியில் நீங்கள் செல்லப் போவதில்லை.
நீங்கள் கடக்கும் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். மறு நாளைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், அது விதியின்
கைகளில் உள்ளது.
மகிழ்ச்சியை
சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 28 February 2024

மன நிறைவும் நிம்மதியும் . .

 மன நிறைவும் நிம்மதியும் . .

_*மற்றவர்களைப் பற்றிய பொய்யான குற்றச் சாட்டை இங்கும் அங்கும் பரப்ப வேண்டாம்.*_
_*அனுபவம் என்பது ஒரு நல்ல பள்ளிக் கூடம். அனுபவம் வெற்றி பெற வழி காட்டும்.*_
பத்தாயிரம் சம்பாதிக்குற
ஒரு நபரிடம் போய்க் கேளுங்கள்,
நீங்க வாழ்க்கையில் நிம்மதியா சந்தோஷமா இருக்கீங்களான்னு, இல்லைன்னு பதில் வரும். அவனுக்கு அங்கு தேவை பணமாக இருக்கும். நிறைய பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம் என்ற நினைப்பிலேயே காலம் பூராவும் வாழுவான். இங்கு நிறைய பேர் அப்படித் தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவே ஒரு லட்சம்
சம்பாதிக்கும் ஒரு நபர் நிம்மதியாக இருப்பாரா என்று கேட்டால் அங்கேயும் நிம்மதி இருக்காது.
அவரால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்க முடியும். அவருடைய எல்லா ஆசைகளையும் பணத்தை வைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஆனால் அதெல்லாம் நிலையான சந்தோஷத்தையும்
நிம்மதியையும்
தந்து விடுவதில்லை.
இங்கே வாழ்க்கையில்
நிம்மதி கிடைக்க
பணம் தான் முக்கிய தேவை என்ற எண்ணம் சுத்தப் பொய்.
அப்போ எது தான் நிம்மதியும் சந்தோஷமும் தரும்.
உங்க மனசுக்குள்ள ஒரு ஆசையிருக்கும். அது உங்களோட நார்மலான வாழ்க்கையில் இருந்து மாறுப்பட்டு இருக்கலாம். அதையெல்லாம் செஞ்சா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு அதை மனசுலேயே மறைச்சி வைச்சி வாழ்ந்துக்கிட்டிருப்பீங்க.
உதாரணத்துக்கு
எனக்கு ஊர் ஊரா சுத்தணும்னு
ரொம்ப ஆசையிருக்கு.
ஒரு டீ கடை ஆரமிச்சி படிப் படியா டெவலப் ஆகணும்னு ஆசையிருக்கு.
ஒரு ஐ.டி வேலை பாக்குறவனுக்கு விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கலாம்.
இப்படி நமக்கு பிடிச்சதை செஞ்சி
அந்த லைப்பை வாழும் போது தான் நமக்கு மனநிறைவும் மனநிம்மதியும் கிடைக்கும்.
நீங்க தூங்கும் போது எந்த யோசனையும் கவலையும் நினைவில் வராமல் தூக்கம் வந்தால்
நீங்க மனநிறைவான
நிம்மதியான
வாழ்க்கை வாழறீங்கன்னு அர்த்தம்.
நீ புரிந்து கொண்டாய் என்பதற்காக உன்னுடன் இருக்கும் எல்லாரும் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமல்ல, இங்கு திறக்க முடியாத பூட்டுகள் பல இன்னும் இருக்கின்றன.
நேற்று தேவைப்பட்டார்கள் என்பவர்களை விட, நாளை தேவைப்படுவார்கள்
என்பவர்களுக்கே
இன்று முக்கியத்துவம் அதிகம்.
ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால், அவர்களைப் பார்த்து கோபப்படுவதை விட
அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்துக் கொள்வதே நல்லது.
மனிதர்கள் கற்றுத்தரும்
பாடத்தை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் தேர்ச்சி அடைந்து விடலாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

Tuesday 27 February 2024

முட்களும் கற்களும் . .

 முட்களும் கற்களும் . .

ஒரு பிச்சைக்காரன்,
ஒரு துறவியின் இருப்பிடத்திற்கு
சென்றான்.
துறவியோ,
சொகுசு மெத்தையில்,
அழகுக் கூடாரத்தில்,
தங்கக் கட்டிலில் இருந்தார்.
இதைக் கண்ட பிச்சைக்காரன் அதிர்ச்சியடைந்து,
'இது என்ன அநியாயம்'
என்று கூவினான்.
பின்னர் அவரிடம்
"ஐயா, மதிப்பிற்குரிய துறவியாரே
உங்கள் ஞானம் பற்றியும்,
துறவு பற்றியும்,
பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன்...
ஆனால்,
உமது இந்தக் கோலம்
சொகுசான சுற்றுப்புறம்
என்னைக் குழப்புகிறதே"
என்றான்.
துறவி சிரித்துக் கொண்டே
சொன்னார்.
"இவைகளை எல்லாம்
இப்படியே விட்டுவிட்டு
உன்னுடன் வர நான் தயார்.
இப்பொழுதே தயார்..."
சொல்லியபடியே துறவி
உடனே எழுந்தார்...
விறுவிறுவென
பிச்சைக்காரனுடன் நடந்தார்...
செருப்பைக் கூட அணியவில்லை...
சிறிது தூரம் சென்றவுடன்
பிச்சைக்காரன் பதைபதைத்துக் கூறினான்...
"என்னுடைய பிச்சைப் பாத்திரத்தை,
உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன்...
அது இல்லாமல் என்ன செய்வேன்
தயவு செய்து கொஞ்சம்
இங்கேயே இருங்கள்...
நான் போய் கொண்டு வந்துவிடுகிறேன்!"
துறவி பெரிதாகச் சிரித்தார்...
பின் கூறினார்:
"என் நண்பனே!
என் கூடாரத்தில் உள்ள தங்கக்
கட்டில் பூமியின் மேல்தான் நிற்கிறது...
என் இதயத்தின் மேல் அல்ல.
ஆனால், உன் பிச்சைப் பாத்திரம் உன்னை இந்த துரத்து துரத்துவதாக இருக்கிறதே!"
துறவு என்பது 'பொருள்கள்'
சம்பந்தப்பட்டது அல்ல...
'எண்ணங்கள்' சம்பந்தப்பட்டது..
துறவு 'வெளியே' சம்பந்தப்பட்டதல்ல...
'உள்ளே' சம்பந்தப்பட்டது...
துறவு 'உலகம்' சம்பந்தப்பட்டதல்ல...
'ஒருவன்' சம்பந்தப்பட்டது...
"உலகத்தில் இருப்பது பற்று இல்லை...
உன் மனதில்
உலகம் இருப்பதுதான் பற்று...
உன் மனதிலிருந்து உலகம் மறைந்துவிட்டால்...
*அதுதான் துறவு."*
வார்த்தைகளின்
மதிப்பு தெரிந்தவரோடு வாதம் செய்யுங்கள், மதிப்பு தெரியாதவரிடம் மெளனமாக இருங்கள்.
உங்களுக்குப் பிரச்சினை வரும் போது, உங்களுக்குக் கோபம் வரும் போது, உங்களை வெறுக்கும் போது , உங்களை விட்டு பிறர் விலகும் போது,
உங்களோடு யாரும் பேசாத போது, நிகழ்கால வாழ்க்கையை நிம்மதியாக யாருக்கும் துரோகம் செய்யமால் வாழ்ந்து காட்ட வேண்டும்.
முட்களும் கற்களும் நெருடிக் கொண்டேதான் இருக்கும்,
ஆனாலும் வாழ்க்கை
அதன் பாதையில் சென்று கொண்டுதான் இருக்கும்.
வாழ்க்கை
ஒரு தலை சிறந்த ஆசிரியர்.
நீங்கள் வாழ்க்கையில் ஒரு பாடத்தைக் கற்காத போது அது அந்தப் பாடத்தை திருப்பி நடத்துகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எழுத்தாளர் சுஜதா நினைவைப் போற்றுவோம்


 

ஸ்ரீ தாயுமானவர் கருணை இல்லத்தில் புதுமணத் தம்பதியர். 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எங்கள் மகன் சொ. ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா திருமண நாள் அன்று காரைக்குடி தாயுமானவர் கருணை இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டு நிகழ்வில் மகிழ்ந்தோம். அதன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள இன்று மாலை அங்கு சென்ற புதுமணத் தம்பதியர் அங்குள்ள பெருமக்களுக்குப் பரிசும் இனிப்பும் வழங்கி மகிழ்ந்த தருணம். உடன் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், இல்லத்தின் நிர்வாகி ஆனந்தி தங்கவேல் குடும்பத்தினர். வாழிய நிர்வாகிகள் வாழியவே.







 

வாழிய மணிவிழாத் தம்பதியர்.

 வாழிய மணிவிழாத் தம்பதியர்.

இன்று இரவு காரைக்குடி செஞ்சை
தினா வள்ளி மகாலில் நடைபெற்ற அருமை நண்பர், காரைக்குடி தமிழ் இசைச் சங்கச் செயலாளர், மருத்துவத் துறை வழிகாட்டி, சமூக ஆர்வலர், எப்போதும் துடிப்போடு இயங்கும் உழைப்பாளி, எஸ் எம் எஸ் வி மேல்நிலைப் பள்ளி மேனாள் ஆசிரியர், சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்
எனப் பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர் வி. சுந்தரராமன் - கிரிஜா
அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில்
நீதியரசர் கற்பக விநாயகம் தலைமையில், சிக்ரி மேலாண்மைக் கழகத்தின் தலைவர் கலைச் செல்வி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் மற்றும் முதல்வர் சேதுராமன், நகரத்தார் பெருமக்கள் அழகப்ப செட்டியார், பெரியணன், எஸ் எம் எஸ் வி பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில்
மனிதத்தேனீ
சிறப்புரை ஆற்றிய மகிழ்வான தருணம்.
அருகில் அலமேலு சொக்கலிங்கம், புதுமணத் தம்பதியர்
சொ. ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா உள்ளனர்.
கலைநிகழ்ச்சிகள், உரையரங்கம், சிறப்பு நாதஸ்வரம், பரத நாட்டியம் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை வித்யா லெட்சுமி தொகுத்து வழங்கினார்.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் மகிழ்ந்தனர்.
வாழிய சுந்தரராமன் கிரிஜா
தம்பதியர் வாழியவே.





























Monday 26 February 2024

காலில் விழுவது

 காலில் விழுவது

வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல.
விஷயம்இருக்கு.
பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, கோயிலில் விழுந்து கும்பிடுவது, யோகிகளைப் பார்த்தால் உடனே பாதத்தை தொட்டு நமஸ்கரிப்பது போன்ற வழக்கங்கள் கலாங்கலமாக இருந்து வருகின்றது. அறிவியல் ரீதியாக இதில் ஏதாவது அடிப்படை உள்ளதா.
காலைத் தொட்டு வணங்குவது நம்முடைய கலாசாரமாக மட்டுமல்ல, இதில் அறிவியல் ரீதியான சில காரணங்களும் உண்டு. கலாசாரம் என்று பார்த்தால் மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.
பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூல காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாதத்தை தொட்டு வணங்குகிறோம்.
அறிவியல் ரீதியாக உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று உறுப்புகளாகப் பார்க்கலாம். உடல் என்பது நம்மை ஆட்டுவிக்கும் ஒரு சக்தி. இந்தச் சக்திதான் நம்மை எல்லாவிதத்திலும் செயல்பட வைக்கிறது.
நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம். ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவதற்கான வழிமுறைகள் உண்டு. அதை அறிந்து அவர்களின் பாதத்தை பற்றினால், அவர்களிடம் இருக்கும் சக்தியை நாம் பெறமுடியும். யோகிகள் சிலர் பாதத்தைப் பற்றுவதற்கு அனுமதிப்பதில்லை.
மேலும், கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு. நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் கடவுள் சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக்கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாகவும், பெண்கள் என்றால் 5 உறுப்புகள் படும்படியாகவும் தரையில் விழுந்து வணங்க வேண்டும். இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது யோகாசனத்தில் முக்கிய நிலையாகும். சூரிய நமஸ்காரத்தில் இது மிக முக்கிய நிலையாகும். நாம் இந்த யோகாசனத்தை அனுதினமும் வழக்கத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தரையில் விழுந்து வணங்குவதை நம்முடைய கலாசாரமாக கொண்டுள்ளோம்.
ஆனால், இப்போது உள்ள இளம் தலைமுறையினர் பெரியோர்களின் காலில் விழுவதை அவமானமாகக் கருதுகின்றனர். காலில் விழுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாக இதில் உள்ள உண்மைகளையும், நன்மைகளையும் நாம் கட்டாயம் உணர வேண்டும்.

அழகானது வாழ்க்கை .

 அழகானது வாழ்க்கை . .

_*உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்களை*_
_*பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...*_
_*பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.*_
_*ஆழ்கடலில் தொலைத்த*_
_*மழை துளியை*_
_*ஆகாயம் தேடி என்ன பயன்.*_
குரங்கை
குட்டிக்கரணம் அடிக்க வைத்து
கூத்தாடி என்பவர்.
சுற்றியுள்ள ஜனங்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்கு
ஆவல் கொள்வது போன்றது அல்ல வாழ்க்கை.
அப்படி நினைத்துக் கொண்டிருந்தால்தான் சுற்றியுள்ள ஜனங்கள் நம்மைப் பார்த்து திருப்தியடைந்து பாராட்ட வேண்டும் என்று நினைப்பது.
"வாழ்க்கையில் 100% யாரையும்
திருப்தி பண்ண முடியாது"
காட்டாற்று வெள்ளம்
தன்னிச்சையாய் மேடுகளைக் கடந்து பள்ளங்களை நோக்கிப் பாய்வது போன்ற அழகானது வாழ்க்கை.
நமது சுயத்தோடு மகத்தான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.
சுற்றியுள்ள மனிதர்கள் அந்த காட்டாற்றை நோக்கி தனது தாகம் தீர்க்கவும் வரலாம். தனது உடலைச் சுத்தம் செய்யவும் வரலாம்.
வரட்டுமே அதனால் என்ன உலகுக்கு பயன் என்று நமது வாழ்க்கை இருந்துவிட்டுப் போகட்டுமே.
*திருப்தி என்பது நமக்கு நாமே அடைந்தால் போதும். *
*_வார்த்தையால் பேசுவதை விட_*
*_வாழ்ந்து காட்டுவதே சிறப்பு._*
*_தனியே நின்றாலும்_*
*_தன்மானத்தோடு_*
*_நிற்பதில் தவறில்லை._*
_*உங்களுக்கானது உங்களை வந்தடையும் எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள்.*_
_*தளராத நம்பிக்கை,
இடை விடாத முயற்சி
ஆகிய இரண்டையும் எப்போதும் வழித்துணையாகக் கொள்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

புதுமணத் தம்பதியரை வாழ்த்தி மகிழ்ந்த எங்கள் திருநகர் பெரியவர், தியாகராஜர் மில்லில் நீண்ட காலம் பணியாற்றியவர், பள்ளத்தூர் பிஎல். சுப்பையா குடும்பத்தினர் இன்று இரவு இனிய தருணம்.


 

புதுமணத் தம்பதியரை வாழ்த்தி மகிழ்ந்த அருமை நண்பர், ஓய்வறியா உழைப்பாளி, மதுரை கப்பலூர் டோல்கேட் அருகில் உள்ள பிரம்மாண்டமான ஹரீஸ் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் எல். ஈஸ்வர மூர்த்தி தனது இளைய மகள் டாக்டர் ஹரிணி ஆகியோர் இன்று பிற்பகல் சந்தித்த தருணம்.



 

முதல் நாள் மாலை 3-45 மணிக்கு பள்ளத்தூரில் நடைபெற்ற புதுவயல் ப. பெ. அரு. ராம. வீர. பங்காளிகள், ஐயாக்கள் வீடு சார்பில் நடைபெற்ற மாம வேவு. ஆறாயிரம் பெருமக்கள் வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ மகன் சொ. ராம்குமார் ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழ வீடு வ. சி. சிவப்பிரகாசம் மகள் நாச்சம்மை தேவி பூஜா மணவிழா. 11-02-2024 அன்று காலை மற்றும் மாலை வரவேற்பு மற்றும் முதல் நாள் இரவு என ஆறாயிரம் பெருமக்கள் நேரில் வருகை தந்து வாழ்த்திய திருவிழா. மேலும் விரிவான செய்தி மற்றும் படங்கள் விரைவில் பதிவாகும். இது நான்காவது பதிவு. எங்கள் நெறியான வாழ்வின் சிறப்பினை கருத்தில் கொண்டு மகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். படங்கள் :சோனா விஷன் எஸ். சோமு