Wednesday 15 September 2021

விதைக்கப்படும் எண்ணம்.

 விதைக்கப்படும் எண்ணம்.

மனம் ஆரோக்கியமாக மலர்ந்தால் மட்டும் அவர்கள் எண்ணிய நற்பலன்கள் வாழ்க்கையில் கிடைக்கிறது.
நல்ல உடல் நிலை, அமைதியான குடும்ப சூழ்நிலை, லாபகரமான தொழில், சமூகத்தில் நன்மதிப்பு ஆகியவை மனதில் உதயமாகும் உற்சாக நிலையைப் பொறுத்தே அமைகிறது.உன்னத உற்சாகத்தை உருவாக்குவதற்கு மனதை மதிக்கத் தெரியவேண்டும். தங்களது மனதில் விதைக்கப்படும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பிரகாசமான
பலன்கள் இருக்கிறது என்பதை உளமாற உணரவேண்டும்.இதன் தொடர்ச்சியாக மேலும் எவ்வாறு நடந்துகொள்வது என யோசிப்பவர்களுக்கு இதோ சில எளிய வழிமுறைகள்:
காலையில் கண் விழிக்கும் வேளையில், இன்று இது எனது நாள், நான் மகிழ்ச்சியோடு இருப்பேன் என்று தீர்மானித்துக் கொண்டு அந்த நாளுக்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
அதிகாலையில் மனதிற்கினிய மெல்லிய இசையையோ, மனதை அமைதிப்படுத்தும்
நறுமணத்தையோ, இயற்கையைப் பார்த்து சுவாசிக்கும் சூழ்நிலையையோ உருவாக்கிகொள்ள வேண்டும்.
மனஅமைதியைப் பாதிக்கின்ற கோபம், வெறுப்பு, பழிவாங்கும் குணம் போன்றவற்றினை தவிப்பதற்காகச் சிறு நிமிடங்கள் அமைதியாக தியானித்தால் மிகவும் நல்லது.
உற்சாகமாக இருப்பதை உங்களின் தனிப்பட்ட உரிமையாக தீர்மானித்துக் கொள்ளுங்கள், இதைச் சீர்க்குலைக்க அல்லது தடுத்து நிறுத்த எவரையும் அனுமதிக்கமாட்டீர்கள் என்று மனதில் பதியவையுங்கள்.
மன அழுத்தத்தைக் குறைத்து கொள்வதற்காகப் புத்தகம் வாசித்தல் மற்றும் எழுதும் பழக்கத்தை கற்றுகொள்ளுங்கள்.
தேவையானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் உதவிகளைப் பெற்றவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை உணர்வுடன் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதில் இருக்கும் அழுத்தங்கள் கலைந்து புது நம்பிக்கையை உற்சாகத்தோடு அளிக்கும்.
இறுதியாக எல்லா வாழ்க்கை சூழ்நிலையிலும் மாபெரும் வெற்றி அடைவீர்கள் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் ஆழமாக பதித்துவிடுங்கள்; அது மிகப் பெரிய வெற்றியாக மலரும்.
உற்சாகத்தை உருவாக்குவோம் உற்சாகம் என்றுமே ஏற்றம் தரும் என நினைத்து வாழத் தொடங்கினால் வாழ்க்கையில் வெற்றி ஜோதி பிரகாசமாக ஒளிரும்.
உற்சாகத்தை உருவாக்கும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் உற்சாகத்தைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. நமது மனதைப் பக்குவத்தோடு பாதுகாத்து நமக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவதில் தான் உற்சாகத்தை உருவாக்கும் திறன் வெளிப்படும்.

No comments:

Post a Comment