Monday 13 September 2021

இருப்பு சக்தியின் திருவிளையாடல்.

 இருப்பு சக்தியின் திருவிளையாடல்.

ஒரு சிங்கமோ, புலியோ இன்னொரு சிங்கத்தையோ, புலியையோ பார்த்து....
"சே.....நீ எவ்வளவு வேகமா துரத்தி எப்படி லாவகமா அந்த மானை வேட்டையாடினே. உன் வீரமும், ஆற்றலும் மெச்சுதற்குரியது. நீ மேலும் மேலும் நிறைய மான்களை வேட்டையாடி, விரைவில் சதம் அடிக்க உனக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்"
எனப் பாராட்டுவதில்லை.
ஏனெனில் திறமையாய் வேட்டையாடுவது என்பது அதன் இயல்பு. அது இயற்கை. அவ்வளவுதான். இதில் பாராட்டுவதற்கு ஏதுமில்லை.
பூவலகில் எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.
நதியோரம் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திலுள்ள குரங்குகள் அந்த மரத்தின் பழங்களைச் சாப்பிடுகின்றன. சில பழங்களை அவை முகர்ந்து பார்த்துவிட்டு நதியில் வீசிவிடுகின்றன.
அதற்காகவே காத்துக்கிடக்கும் மீன் கூட்டம் ஒன்று அந்தப் பழங்களை உணவாகக் கொள்கின்றன.
பின்பு சமவெளியில் நதியின் ஓட்டத்தோடு நீண்ட நெடுந்தூரம் பயணித்து வேறோரு இடத்தை அடைகின்றன. அங்கு கழிவுகளை வெளியேற்றுகின்றன.
கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் அம்மரத்தின் விதைகள் கரையொதுங்கி புதிய நிலத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. அந்த மரத்தின் சந்ததி நிலைபெறுகிறது.
இதில் யார் யாரைப் பாராட்டுவது? இந்த மரத்தின் சந்ததியை நிலைபெறச் செய்யும் பணியை நாம் செய்கிறோம் என அந்தக் குரங்களுக்கோ, மீன்களுக்கோ அல்லது அந்த ஆற்றிற்கோ தெரியுமா?
இது இருப்பு சக்தியின் திருவிளையாடல். அதன் பேரறிவு மயமான திட்டம். குரங்கு, மரம், மீன், ஆறு என அனைத்துமே வெறும் கருவிகளே.
இவை எதுவும் அந்த மரத்தைத் தான் நட்டதாக பெருமை பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.
மனிதனும் அது போலத்தான். இந்த பூமியில் அவன் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து செல்லும் ஜீவன். தனியாக ஆகாயத்திலிருந்து குதித்துவிட்டவனல்ல. அவனும் பிற ஜீவன்களோடும், சக மனிதர்களோடும் ஒத்துதவி வாழ்பவன்.
இது புரியாமல் ஒருவரையொருவர் பொய்யாய்ப் புகழ்ந்து தள்ளி, அகங்காரத்திற்குப் பெருந்தீனியிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
புகழ் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அது கற்பனையானது. அது ஒரு மாயை. அது ஒரு போதை. அது ஒரு மனநோய்.
துன்பப்படும் ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அத்துன்பத்திலிருந்து வெளிவந்தவர் மிகவும் தளர்வாக உணர்கிறார். அந்தத் தளர்வு நிலையை தனக்குக் கொடுத்துதவியவர் மீது அவர் ஆன்மாவிலிருந்து நன்றியுணர்வு பெருகுகிறது. உயிரிலிருந்து வாழ்த்துகிறார். இது ஆறாவது அறிவின் காரணமாய் எழுந்த நன்றியுணர்வு. அதன் வெளிப்பாடு. இதுவே உயர் புகழ். இதில் அகங்காரத்திற்கு இடமில்லை.
மற்றெல்லாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட வேடங்களே. அவை தந்திரமான உள் நோக்கங்களைக் கொண்டவை. மிகுந்த ஆபத்தானவை. அகங்காரத்தை வளர்ப்பவை. மனித குலத்தின் சாபக்கேடுகள்.
ஆகவே புகழ்வதும், புகழ்ச்சிக்கு அடிமையாவதும் மனிதனை பல்வேறு துன்பங்களுக்குள் அழைத்துச் செல்பவை என உணர்ந்து, இங்கு நாம் அனைவரும் ஒத்துதவி வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து, இறைநிலையில் பேரறிவு மயமான திட்டத்தில் நாம் அனைவரும் சாதாரணக் கருவிகளே எனத்தெளிந்து, அகங்காரம் தொலைத்து ஆனந்தமாய் வாழ்வோம்.

No comments:

Post a Comment