Saturday 18 September 2021

குடும்ப உறவுகள் மேம்பட.

 குடும்ப உறவுகள் மேம்பட.

ஒரு மனிதனுடைய வாழ்க்கை ஒரு குடும்ப அமைப்புடனே தொடங்குகிறது. அதன் பிறகே அவன் ஒரு குடிமகனாக சமூகம் சார்ந்து அடையாளப்படுத்தப்படுகிறான். இந்த உலகமே உறவு, நட்பு, அன்பு, பாசம், கடமை என்ற அடிப்படையில் தான் சுழலுகிறது. யாரேனும் நம் மனதை புண்படுத்தினால் பதிலுக்கு நாம் அவரின் மனம் நோகச் செய்யாமல் அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதே உண்மையான மனமுதிர்ச்சி.
குடும்பச் சக்கரம் நன்முறையில் சுழல இம்முதிர்ச்சி மிக மிக அவசியம். குடும்பம் என்னும் அமைப்பு அதிக நன்மைகளும் கொஞ்சம் குறைபாடுகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு.
உலகப் புகழ்பெற்ற சிறுகதை ஒன்று உண்டு. அந்த கணவனிடம் மதிப்புமிக்க கைகடிகாரம் இருந்தது. அதற்கு தங்க பட்டி வாங்க அவனிடம் பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகிய நீண்ட கூந்தல் உண்டு. அதை முடித்து வைக்க தங்க 'கிளிப்' வாங்க அவளுக்கு ஆசை. ஆனால் வசதியில்லை. முதல் திருமண நாளில் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த கைகடிகாரத்தை விற்று மனைவியின் கூந்தலுக்கு தங்க 'கிளிப்' வாங்கி வந்தான் கணவன். மனைவியோ தன் பேரழகான கூந்தலை வெட்டி விற்று கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய அவன் கைகடிகாரத்துக்கு தங்கப் பட்டி வாங்கி வருகிறாள். ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்க முனையும் போது அங்கு அன்பு வலுவடைகிறது.
இது போன்ற சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் அர்த்தம் பெற்று ஆழச் செல்கிறது குடும்ப ஒற்றுமை.நண்பர்கள் போல அமைந்த உறவுகளும் உறவினர் போல அமைந்த நட்புகளும் கிடைப்பது வரம் என்பார்கள். ஆக, யார் மனதும் புண்படாத வகையில் பேசிப் பழகுவோம். சகமனிதர்களிடம் பேசும்போதும் அவர்கள் நலம் சார்ந்த நேசிப்பை வெளிப்படுத்துவோம்.
நம்முடைய ஆட்சேபனைகளைக் கூட அன்பாக அழகாக முன்வைப்போம். கோபங்களை கூட பக்குவமாக வெளிப்படுத்துவோம். விவாதங்களின் போதும் விழிப்புணர்வோடு செயல்படுவோம். விரக்தி சூழும் போதும் நம்பிக்கை கொள்ளுவோம். குடும்ப உறவுகள் வலுப்பெறும்.

No comments:

Post a Comment