Monday 27 September 2021

பயிற்சியே பயனளிக்கும்.

 பயிற்சியே பயனளிக்கும்.

ஒரு சாதாரணத் திறமையை, வலிமை பொருந்திய ஆற்றலாக மாற்றுவது பயிற்சி. தெரு முனைகளிலே நாம் அனைவருமே கிரிக்கெட் அல்லது கால்பந்து ஆடிவிடலாம். ஆனால் அதை அடுத்த நிலைக்கு முன் நகர்த்துவது எது?
ஓடத் தெரிந்த ஒரு கோடிப் பேர்களில் ஒலிம்பிக்ஸில் ஓடுபவரை, பயிற்சி மட்டும்தான் தீர்மானிக்கும். பயிற்சி எடுத்துக் கொள்ளாததால் பலபேர் பாத்ரூம் பாடகர்களாகவே விளங்குகிறார்கள். எழுதும் திறமை இருந்தால் போதாது. பயிற்சி ஒன்றே ஒருவரை எழுத்தாளராக மாற்றும். சாதாரணமான பேச்சுத் திறமையை தகவல் தொடர்பு ஆற்றலாக மாற்றுவது எது? இன்னும் பொதுப்படையாகச் சொன்னால், ஒரு தனி மனிதனின் எளிய திறமையை, தொழில் முறைத் திறனாக (Professional Efficiency) உருவாக்கிக் காட்டுவதே பயிற்சி ஆகும்.
வளர்ந்து வரும் புதிய கார்ப்பரேட் சூழலில் (Corporate Culture), பணிபுரியும் அனைவருக்கும் அவ்வப்போது சிறப்புப் பயிற்சி முகாம்கள் (Special Training Camps)
அளிப்பது பணித் திறனை அதிகரிக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அதிலே தேக்க நிலை வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டிச் செல்லும் துணிவும் ஆர்வமும் வேண்டும். கபில்தேவ், தோனி போன்ற விளையாட்டு வீரர்கள் முதலில் பேட்ஸ் மேன் என்றுதான் பெயர் பெற்றார்கள். ஆனால் அந்தத் துறையிலே மட்டும் நிற்காமல் ஆல் ரவுண்டர் என்ற சிறப்பையும், பிற துறைப் பயிற்சிகளின் மூலம் பெற்றார்கள்.
கல்வி பயிலும் போதும், பணியில் சேர்ந்த பிறகும், மற்றவரை விட அதிகமாக என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணுபவர்களே முன்னேற்றம் காண விழைபவர்கள். அவர்கள் முழுமை தரும் பயிற்சி முறைகளை என்றும் கைவிட மாட்டார்கள்.
உங்கள் தனித்துவத்தைக் காட்டி வாழ்வில் வெற்றிச் சிகரங்களைத் தொட, பயிற்சியே பற்றுக்கோடாகும்..
முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடைப்பட்ட முதன்மைப் பாலம் பயிற்சியே.
Krishna Raman, Bsraja Raja and 1 other

No comments:

Post a Comment