Wednesday 18 August 2021

நம்மீது நம்பிக்கை வேண்டும்.

 நம்மீது நம்பிக்கை வேண்டும்.

''சந்தேகம் என்னும் நோய்'' எவ்விதக் கிருமிகளும் இல்லாமலே ஒரு மனிதனுக்குப் பிறவியிலோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப் பெரிய விசக் கிருமி...
சந்தேகம் என்பது ஆறாத ஒரு புற்று நோய். இது வளர்ந்து கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப் படுவது குடும்பம்தான்...
எத்தனை எடுத்துச் சொன்னாலும், பலர் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பின் உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ் நாள் முழுதும் வருந்திக் கொண்டு இருப்பார்கள்...
இந்தச் சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும் மரணக் குழிவரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டுஎன்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்...
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது வளமான செயல். ஆனால்!, நம்மில் பலர் தொடர்பின்றி வீண் சந்தேகப்பட்டு வாழ்வை தொலைத்தவர்கள் அதிகம்...
இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக் குறியாக்கி கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு...
ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்...
சந்தேகப்பட வேண்டியதுதான். அது எந்த மாதிரியான நிகழ்வுக்கு என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு, இதனால் எவ்வித பாதிப்புகள் வராதா...? என்பதை அறிந்தபிறகு சந்தேக நோக்கத்துடன் ஆராய்வது நலம்...
காரணங்கள் இன்றி சந்தேகப்பட்டு, நாமும் மனமுடைந்து மற்றவர்களையும் ஆயுதம் இல்லாமல் துன்புறுத்தி வேதனைப்படுவதில் நியாயம் இல்லை. இதனால் யார்க்கும் பயனில்லை சந்தேகப்படுவரும், சந்தேகத்திற்குரிய நபரும் மொத்தத்தில் இருவருக்கும் பாதிப்பே...
ஆம் நண்பர்களே
மனிதர்கள் ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்!, எல்லோருடைய மனமும் ஒன்று போல் சிந்திப்பதில்லை. எப்போதும் சந்தேகம், யாரைக் கண்டாலும் சந்தேகம், என்று தான் வாழ்க்கையைப் போராட்டத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
சந்தேகப்படுவது ஓர் நல்ல செயல் அல்ல, முதலில் நம்மீது நம்பிக்கை வேண்டும். நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லையென்றால் எதன் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
எனவே!,யார் மீதும் தேவையில்லாமல் சந்தேகப் பட வேண்டாம், நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள். நம்பிக்கையோடு இனிதே வாழ்வை தொடங்குங்கள். அவசியமின்றி மற்றவர்கள் மீது வீண் சந்தேகம் வைத்து உங்களின் வாழ்க்கையில் அல்லல் பட வேண்டாம்.

No comments:

Post a Comment