Monday 16 August 2021

கரம் கொடுக்கும் சேமிப்பு.

 கரம் கொடுக்கும் சேமிப்பு.

"சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று
சொல்வார்கள். சேமிப்பை நம் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்புப் பழக்கம்தான்...
தேனீக்கள்!, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்கள்...
ஒரு மனிதன் சேமிக்கப் பழகிக் கொள்ளும்போது சேமிப்பு எதிர்காலத்தில் பலவற்றுக்கு கரம் கொடுக்கும்...
வரவை மீறி கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு துன்பம் மட்டுமல்ல பெரும்பாலும் இழப்பைத்தான் கொடுக்கும். இதைத் தடுக்க, தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்...
உங்கள் குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்...
உங்கள் வருவாயைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்...
கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்துச் சம்பாதித்தது.அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்களே முடிவு செய்ய வேண்டும்...
சேமிப்பு என்பது உங்களின் வருங்கால வாழ்க்கையை எந்தவித தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பண சிக்கலில் இருக்கும்போது யாரும் உங்களுக்கு உதவப்போவதில்லை...
ஆம் நண்பர்களே
நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாயிருந்தால் நாளை பணம் உங்களை அசட்டைசெய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம்தான் நமக்கு உதவி செய்யும். வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது.
இது சுயநலமான உலகம். மற்றவர்கள்படும் துன்பத்தைப் பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் உலகம். சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே நீங்கள் எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment