Friday 13 August 2021

குறைவாக கவலைப்படுங்கள்

 குறைவாக கவலைப்படுங்கள்.

இன்று ஊரெங்கும் மருந்துவமனைகளாக மாறி விட்ட காலம் இது. உடலிற்கு என்ன ஆனாலும் மருத்துவர் சரி செய்து விடுவார் என்று உறுதியாக இருக்கிறீர்களா.. .?
மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். மனக்கவலை பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு காரணமாகிறது...
'அவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு... ஆனாலும்!, மன உறுதி அதிகம் அதனால். மீண்டு வந்திட்டாரு' என்று கூறக் கேட்கிறோமல்லவா...!
'உள்ளம் உறுதியாக இருந்தால் நோயிலிருந்து மீள்வது எளிது' என்று மருத்துவர்களும் கூறுகிறார்கள்...
அன்றாட நடவடிக்கைகளுக்கும் உடல் நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
உடல்நலத்தைக் காத்துக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்...?
கொஞ்சமா கவலைப்படுங்க.
அனைவருக்கும் ஏதோவொரு சிக்கல் இருக்கத் தான் செய்யும். அவரவர் நிலைக்கேற்ப அறைகூவல் இருக்கும். கவலையே இல்லாதவர் என்று எவருமே கிடையாது...
'கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாது' என்பார்கள். எவ்வளவு பெரிய இழப்பென்றாலும் மனமுடைந்து போகக்கூடாது என்பதே அதன் பொருள்...
சிக்கல் எழுந்தால் மனமுடைந்து போகாதீர்கள். உறுதியாக எதிர்கொள்ளுங்கள்; துணிந்து போராடுங்கள்; குறைவாகக் கவலைப்படுபவர்கள் நீண்ட காலம் வாழ்வார்களாம்...
மன்னிச்சிருங்க; மனசு லேசாயிரும்.
'எனக்கு இப்படிப் பண்ணிட்டாரே. இருக்கட்டும்!, எனக்கும் காலம் வரும். அப்போ பார்த்துக்கறேன். 'இந்த வகை மன உறுதி மனதை பாரமாக்கி விடும்...
பயனுள்ள வகையில் எதையும் செய்ய இயலாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்போம்.. ஆகவே!, துரோகங்கள், கிடைத்த தருணம் அத்தனையையும் புறந்தள்ளி விட்டு முன்னேறுங்கள்...
உணர்வுபூர்வமான சுமைகள் முன்னேற்றப் பயணத்தில் பாரமாக இருக்கும். மனதை வருத்தக் கூடிய நம்பிக்கை துரோகச் செயல்களை மன்னித்து விடுங்கள்...
மனம் இளகும். உடலும் நோயற்ற நிலையிலும் இருக்கும்...
சாதகமற்ற சூழலில் தைரியமாயிருங்க.
சூழ்நிலை எதிராக இருந்தால் மனமுடைந்து போகாதீர்கள். குறை முயற்சியில் சோர்ந்து போனால் உழைப்பு வீணாகி விடும்...
சிரமப்பட்டு கூட்டைக் கிழித்து வெளியே வரும் வண்ணத்துப்பூச்சியே வானை அலங்கரிக்கிறது...
ஆகவே!, தடைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலைப்பட்டு கலங்கினால் முயற்சி மட்டுமல்ல; உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும்...
விருப்பமானதைச் செய்யுங்க.
அச்சம், சினம், வெறுப்பு, குற்றவுணர்வு இவை அனைத்துமே செயல் வேகத்தை முடக்குபவை. இந்த உணர்வு தளைகளைக் கடந்து சாதனை உச்சத்தை தொடுவதற்கு உங்களுக்கு விருப்பமான பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்...
அவை மனதை முடக்கும் உணர்வுகளை கடக்க உங்களுக்கு உதவும். மனம் மட்டுமல்ல, உடலும் வளமாக விளங்கும்...
"முடியாது'ன்னு மட்டும் சொல்லாதீங்க...!"
உங்கள் குறிக்கோள் காண்பதற்கு பெரிதாகத் தெரியலாம். ஆனால்!, சரியான திட்டமிடல் இருந்தால் அதை அடைந்திட இயலும்...
'இதையா, நானா?' என்று மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடாதீர்கள். பதற்றமடையாதீர்கள். நிதானத்துடன் விவேகமாக முடிவெடுங்கள்.
ஆம் நண்பர்களே
நம்மைத் தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும் போது துவண்டு விடாதீர்கள்.
அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்.
அதையும் மீறி நம்மால் முடியும்,, எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றிப் பயணம்.

No comments:

Post a Comment