Monday 23 August 2021

நம்பிக்கையும் துணிச்சலும்.

 நம்பிக்கையும் துணிச்சலும்.

ஒருநாளில் பத்து நிமிடமாவது உங்கள் மனதோடு பேசுங்கள், மனம் சொல்வதை நாம் கேட்கத் தொடங்கினால் அது தினமும் நமக்குப் புதிது புதிதாய் ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கும். துாங்கும் நேரத்தில் மனம் அமைதியடைவதால் தான் மருத்துவர்கள் நிம்மதியான எட்டுமணி நேர உறக்கத்தைப் பரிந்துரைக்கின்றனர். இசைகேட்டல், நல்ல புத்தகம் வாசித்தல், காலாற நடத்தல், நெருக்கமான நண்பர்களுடன் பேசுதல், யோகா செய்தல், தியானம் செய்தல் என்று நாம் நம்மை எப்போதும் உற்சாகமாய் வைத்திருத்தல் மனவளம் காப்பதற்கான வழி முறைகள்.இறுக்கமாக இருக்கும் நேரத்தை விட மகிழ்ச்சியான நேரத்தில் மனம் உற்சாகமாய் இருக்கிறது.
இருளைக் கிழிக்கும் வெளிச்சக் கத்தி நம் உற்சாகமான மனம்தான். அதை இருளுக்குள் தொலைப்பதும் வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துவதும் நாம்தான்.நம்பிக்கையும் துணிச்சலும் நம்மிடம் இருந்தால் இடிதாங்கும் படிகூட தடைகளை உடைத்து திறமோடு வாழலாம். கிடைத்ததை இழப்பதும் இழந்தது மீண்டும் கிடைப்பதும் வாழ்வின் நியதிகள்.
வெட்டியவர்களுக்கும் விறகு தரும் மரம் வெட்டும் முன் நிழல் தந்ததற்காக என்றாவது வருந்தியிருக்கிறதா? யார் என்ன செய்தாலும் இருக்கும் இடத்தில் வேர்பரப்பி கிளைபரப்பி இலைபரப்பி மலர்பரப்பி நிழல் பரப்பிப் புயலடித்தாலும் நம்பிக்கையோடு தலையசைக்கிறதே! நம்மிடம் இரண்டு கைகளோடு நம்பிக்கைகள் பலநுாறும் இருக்கிறவரை நம்மை எப்படிக் கைவிடப்பட்டவர்களாக நாம் எண்ணிக்கொள்ள முடியும்?
மழை அடித்தா மலை கரையும்? எதற்கும் கலங்காமல் மனஉறுதியோடு இருந்தால் வெற்றி நிச்சயம். மன நலம்தான் உண்மையில் பண பலத்தைவிடப் பெரியது.

No comments:

Post a Comment