Tuesday 13 February 2024

அன்புச்சொந்தங்களே! வணக்கம்.மனிதத்தேனி திரு.சொக்கலிங்கம் அவர்களின் திருமகன் சொ.ராம்குமார் திருமணம்

 அன்புச்சொந்தங்களே! வணக்கம்.மனிதத்தேனி திரு.சொக்கலிங்கம் அவர்களின் திருமகன் சொ.ராம்குமார் திருமணம் நேற்றைய தினம் (11-02-2024) மிகச்சிறப்பாக காரைக்குடியில் நடை பெற்றது. நேற்று மாலை பள்ளத்தூரில் நடைபெற்ற திருமண வரவேற்பில் (பெண் அழைப்பு நிகழ்வில்) கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி மகிழும் நல் வாய்ப்பினைப் பெற்றேன். திருமண வரவேற்பு நிகழ்வினை, நன்கு திட்டமிட்டு, திட்டமிட்டதோடு நின்றுவிடாமல், களத்தில் தனியொரு மனிதராக நின்று, அனைத்து ஏற்பாடுகளும், வந்திருந்தோரை கவரும் வகையில் மிகச் சிறப்பாக இருந்தது என்றால் அதற்கு முழுமுதற்க்காரணம் தேனிக்கும் சுறுசுறுப்பை கற்றுக்கொடுத்திருக்கும் "மனிதத்தேனி" "மனித நேயம் மிக்கவர்","பண்முக ஆற்றல் கொண்டவர்" திரு.ரா.சொக்கலிங்கம் என்பது மிகச்சரியாக இருக்கும். வரவேற்பு நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை,சிரித்த முகத்தோடும்,எளிமையின் வடிவத்தோடும், கைகுவித்து வணங்கி வரவேற்று, கைத்தறி ஆடை அணிவித்து, மணமக்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார்கள். இது போன்றதொரு வரவேற்பைக்கண்டு,

விருந்தாளிகள் வியந்து போனார்கள். பம்பரம் கூட சிலநொடிகள் சுற்றி விட்டு,ஓய்வு எடுத்துக் கொள்ளும், ஆனால் மனிதத்தேனி திரு.ரா.சொக்கலிங்கம் அவர்கள்,நொடிப்
பொழுது கூட ஓய்வெடுக்காமல், அங்கும் இங்கும் ஓடி ஓடி வந்த விருந்தினரை உபசரித்த விதம் போற்றுதலுக்குரியது.
அவர் இரண்டு நாட்களாக தூக்கத்தைக்கூட தொலைத்திருப்பார் என நினைக்கிறேன். அன்போடும்,பண்போடும்,பாசத்தோடும் பழகும் அந்த மனிதரின் உழைப்பு ஒவ்வொரு நிலையிலும் தெரிந்தது. திருமண வரவேற்பில் கலந்து கொண்ட விருந்தினர் களுக்கு அன்பளிப்பாக 256 பக்கங்கள் கொண்ட "ஆனந்த அமுதம்" என்ற புத்தகத்தைப்பரிசாக கொடுத்தார்கள். இரவு உணவு எப்படி ருசியாக இருந்ததோ அதைவிட படிக்க படிக்க இன்பத்தைத்தந்தது "ஆனந்த அமுதம்"என்ற புத்தகம். மணமக்களை வாழ்த்தி பல்வேறு பதிவுகள் வந்திருக்கும். ஆனால் அன்பளிப்பாக வழங்கிய புத்தகத்தைப் பற்றிய மதிப்புரை எனது பதிவாகத்தான்இருக்கும் என நினைக்கிறேன்.
பொதுவாக நகரத்தார் திருமணங்களில் புத்தகங்கள் பரிசாக அளிப்பார்கள். அவைகள் பெரும்பாலும் புகழ்பெற்ற பதிப்பகங்கள்வெளியிட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார்கள். சிலர் பக்திப்புத்தகங்களை கொடுப்பார்கள். சிலர் கடவுள் வழிபாட்டுப் பாடல்களை தொகுத்து அச்சிட்டுக்கொடுப்பார்
கள். இவையெல்லாமே சுமார் 80 பக்கங்களுக் குள் தான் இருக்கும். ஆனால் மனிதத்தேனி அவர்கள் எப்படித் திருமண ஏற்பாட்டை மூன்றுமாத காலமாக செய்து வருகிறாரோ அதுபோல புத்தகத்தின் உருவாக்கத்திற்காக கடுமையாக பணியாற்றி உள்ளார் என்பது புத்தகத்தை படிக்கின்ற பொழுதே உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகப்பணி இனிது வெளிவர பெரிதும் துணை நின்றுள்ளார் நல்லறிஞர் புலவர் திரு.கி.வேலாயுதன் அவர்கள்."ஆனந்த
அமுதம்" என்ற புத்தகத்தின் முதல்பகுதி, தேன்துளிகள்', ,ஆகும். இதில் வாழ்வியல் குறித்து பல்வேறு அறிஞர் பெருமக்களின் நன்மொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி
"பொழிவின் பிழிவு" ஆகும். இதில் மனிதத்தேனி அவர்கள் 25000 க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சில முத்துக்களை தேர்வுசெய்து,அவற்றை பதிப்பித்துள்ளார்கள். மூன்றாவது பகுதி "நல்லவண்ணம் வாழ்வோம்"ஆகும். இதில் கடவுளை பிரார்த்தனை செய்வதற்கு தேவையான திருமுறைப்பாடல்களைத்தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ளார்கள். நான்காவது பகுதி "உள்ளமும் உடலும்" ஆகும். இதில் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கும் என்பதற்குத்தேவையான வழிமுறைகளை பதிவு செய்துள்ளார்கள். மொத்தத்தில் மனிதன் வாழ்வியலைப்புரிந்து கொண்டு,நல்ல சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டு கடவுளை நல்ல பாடல்களால் பாடிக் கொண்டு, மனதை நல்லபடியாக வைத்துக்கொள்ளும் வழிகளை அறிந்து கொண்டு வாழ வழி சொல்கிறது இந்நூல்.
"தேன்துளி" என்ற தலைப்பு "தேன்துளிகள்" என்று அமைத்திருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். புத்தகத்தின் அடுத்த பதிப்பில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன். இதனை திருமண அன்பளிப்பாக வழங்கிய மனிதத்தேனி அவர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். பல்லாண்டு பல்லாண்டு அவர்கள் அனைவரும் நலமுடன் வாழ, நாளெல்லாம் நான் வணங்கும் எனது குலதெய்வம் இராங்கியக்கருப்பன் அருள வேண்டுகிறேன். மிக்க நன்றி.
அன்பு நட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா.
12-02-2024.


No comments:

Post a Comment