Saturday 3 February 2024

பேரறிஞர் உருவானார்.

 பேரறிஞர் உருவானார்.

ஒரு வகுப்பைப்
பார்வையிடுவதற்காக
கல்வி அலுவலர் ஒருவர் வந்திருந்தார். சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் வழக்கம் போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அதிகாரி மாணவர்களிடம் பாட சம்பந்தமாகச் சில கேள்விகளைக் கேட்டார்.
பின்பு ஒவ்வொரு மாணவரிடமும்
தனித் தனியாக “நீ வருங் காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறாய்" எனக் கேள்வி கேட்டார். ஒவ்வொரு மாணவரும் சம்பிரதாயமாக ஏதோ சொல்லிச் சமாளித்தனர். சிலர் மௌனமாக திருதிருவென விழித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வகுப்பில் ஒரு சுட்டி மாணவன் மட்டும் தைரியமாகப் பதில் கூறினான்.
"ஐயா நான் உறுதியாக ஒரு பேரறிஞனாக வருவேன்
என நம்பிக்கை உள்ளது. அது தான் என் இலட்சியம். அதை அடைவதற்கு நான் இப்போ திருந்தே உழைக்கிறேன்” என எல்லா வகுப்பு மாணவர்களின் முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறினான்.
அந்த மாணவனின் இந்தப் பேச்சு அதிகாரிக்குக் கூட ஆச்சரியமாக இருந்தது. சற்று அதிகப் பிரசங்கித்
தனமாகப் பேசுகிற சேட்டைக்கார மாணவனோ என எண்ணிக் கொண்டார். சக மாணவர்களும், ஆசிரியரும் அந்தப் பதிலை அத்தனை அழுத்தமானதாக நினைக்கவில்லை.
காலங்கள் கடந்தன. அந்த மாணவனுக்கு, தான் எத்தனையோ வருடத்திற்கு முன்பு எடுத்த லட்சிய உறுதிமொழியை நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியது. நம் தேசத்தின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் அடைய முடிந்தது.
அந்த மாணவன் யார், பின்னாளில். ‘சர்வபள்ளி' என்ற அடைமொழி தாங்கி இந்த உலகமே போற்றிப் புகழ்கிற டாக்டர் - இராதா கிருஷ்ணன் தான். இது ஒரு சிறிய உதாரணம். இதைப் போல் இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு.
மற்ற மாணவர்கள் என்ன கேலி செய்வார்களோ, வகுப்பு ஆசிரியரும், அதிகாரியும் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் அந்த மாணவனிடம் இல்லை. சிலரைப் போல் வெறும் எண்ணத்தை மட்டும் ஆசையாக மனத்தில் வைத்துக் கொண்டு கற்பனைக் கடலில் நீந்தி முத்தெடுக்கிற மனப்பிரமையும் இல்லை. முடியுமோ முடியாதோ என்ற இரு தலைக் கொள்ளி நிலையும் எடுக்கவில்லை.

No comments:

Post a Comment