Saturday 25 June 2022

தொழிலில் தனித் தன்மை.

 தொழிலில் தனித் தன்மை.

ஒருவன் ஒரு தொழிலில் முன்பு பெற்ற அனுபவமே அவன் தொழில் திறனை வளர்க்க உதவும்.
முன் அனுபவங்களைக் கொண்டு தொழிலின் போலித் தன்மையையும், உண்மைத் தன்மையையும் பிரித்து அறிந்து தொழிலில் ஈடுபட்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம்.
ஒரு தொழில் தொடங்கும் போது அந்தத் தொழிலில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற சரியானவர்களைக் கண்டு அறிந்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முந்தைய அனுபவமே ஒருவருக்கு எல்லா வகையிலும் உதவும். தொழில் முன்அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.
ஒரு விவசாயி அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என் தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார். ‘
இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான இளைஞனை அனுப்புகிறேன்’ என்றார் ஞானி..
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத் தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார்.
தனக்குக் கிடைத்த பணியாளர் மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது கால் படாமல் நடந்து கொண்டு இருப்பதையும் கண்டு மனம் மகிழ்ந்தார் அந்த விவசாயி.
ஞானியிடம் சந்தித்து நன்றி சொல்லி விட்டு,,''எதற்காக இவரை அனுப்ப உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.
நான் உரிய நபரைத் தேர்ந்தெடுத்து மூன்று மாதங்கள் காகிதப் பூக்கள் செய்கிற தொழிற்சாலைக்குப் பணிக்கு அனுப்பினேன்.
அங்கே வாசனை அற்ற பொய் மலர்களைப் பார்த்தவனுக்கு உயிர் உள்ள மலர்களுடன் பழகுவதில் களிப்பும், ருசியும் ஏற்பட்டது.
அவன் இந்த அழகிய பூ, செடிக்கு மட்டுமே சொந்தம் எனக் கருதி அதைப் பறிக்காமல், வாட விடாமல் செடிகளைப் பாதுகாத்தான்.
ஆம்.,போலியிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ளும் போது தான் அது வரமாக வாய்க்கிறது’ என்றார் ஞானி.
அனுபவமும் எந்த செயலிலும் முக்கியம்... அனுபவங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்பவரும் இருக்கவே செய்கின்றனர். உண்மை தான்.
அனுபவம் மட்டும் இருந்தால் போதாது தான். அதைத் தொடர்ந்து உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும்.
நாம் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment