Monday 20 June 2022

மமதையும் மனச் சஞ்சலமும்.

 மமதையும் மனச் சஞ்சலமும்.

தண்ணீரில் வாழும் மீன் பன்னீரில் வாழ நினைத்தால் செத்துப்போய்விடும். அப்படிதான் நாமும் மற்றவர்போல் வாழ நாமொன்றும் மற்றவரில்லை.
நாமாக நாமிருந்தால் நமக்கேது துன்பம்? குழந்தை ஊதுகிற சோப்புத்தண்ணீர் குமிழியாய் மாயம் காட்டிச் சட்டென்று உடைந்து மறைவதைப் போல் எந்தச் சுகமும் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து கிடைக்கப் போவதில்லை.
சுகமும் துக்கமும் கொஞ்சகாலம்தான்.எதுவும் நிலையில்லை எனும் எண்ணத்தோடு இதுவும் கடந்துபோகும் என நினைத்துவிட்டால் வெல்லும்போது மமதையும் தோற்கும்போது மனசஞ்சலமும் வராது.
எழுதல் என்பது விழுதலுக்கான எதிர்வினை, எனவே எழுச்சிக்காகவே வீழ்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
புரியாமையின் மொழி புலம்பலாகவே இருக்கும்! புலம்பல் உங்கள் பலவீனத்தின் அடையாளம், எனவே பொருளற்ற புலம்பலை நிறுத்துங்கள்.
இறைவன் ஒருமுறை மட்டுமே வாழ வரம் தந்திருக்கிறான். அதை ஏன் நரகமாக மாற்றவேண்டும்? மற்றவர்களைத் திருப்திப்படுத்தவே நாம் பிறப்பெடுத்திருக்கிறோமா? நமக்காக நாம் வாழப்போவது என்று? கேட்டுப்பாருங்கள் உங்களிடம் தெளிவுபிறக்கும் உள்ளொளியாய். ஆயிரம் கைகள் தடுத்துநின்றாலும் வெற்றிப் பாயிரம் பாடவேண்டும் என நீங்கள் முடிவுசெய்துவிட்டால் உங்களை யாராலும் தடுக்கமுடியாது.
காற்றுப்போன பலூனாய் தோற்றுப் போகிறோமே என்ற வருத்தம் வந்ததுண்டா? தகர்த்தெரியுங்கள் தாழ்வு மனப்பான்மையை. அது வைக்கோற்போருக்குள் மறைத்துவைக்கப்பட்ட கங்குபோன்றது. எரியச் செய்து எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும். கடந்த காலத்தையும் நடந்த சோகத்தையும் நினைத்துக்கொண்டே இருந்தால் நிம்மதி அப்பால்போகும்,நிகழ்காலமும் நரகமாகும். காலம் இன்னும் காலமாகாமல் காத்திருக்கிறது உங்களுக்காக.

No comments:

Post a Comment