Saturday 18 June 2022

பேச்சில் பொய், புறம், அவதூறு கூடாது.

 பேச்சில் பொய், புறம், அவதூறு கூடாது.

காரணமின்றி வளவளவென்று பேசுபவர் உண்டு. உடன் இல்லாத இன்னொருவரைப் பற்றிப் புறம் கூறுபவர் உண்டு. இங்கு பேசுபவர் விதைக்கிறார். கேட்பவர் அறுவடை செய்கிறார். பேச்சுதான் மனிதனின் மதிப்பை வெளிப்படுத்துகிறது. எனவே, மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
அதிகப்பேச்சு பல நேரங்களில் ஆபத்தை உண்டாக்கி விடுகிறது. பல உறவுகள் முறிந்துள்ளது. வீண் பேச்சு பேசிக்கொண்டு திரிந்தால் வாழ்வில் முன்னேற்றம் தடைப்படுகிறது. மேலும் யாருக்கும் எந்தப்பயனும் இல்லை.
வீண் பேச்சு நம் வாழ்வை விழுங்கி விடுகிறது. கவனமின்றி பேசியதால் பதவி இழந்தவர், பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பலர். சொல் சிக்கனம் அவசியம் தேவை. மற்றவர் மனது புண்படுவதை, மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதை தவிர்க்க சொல் சிக்கனம் உதவுகிறது.
நம் பேச்சில் உண்மை, நேர்மை, அழகு, கனிவு, நியாயம், கண்ணியம் இருக்க வேண்டும். நம் பேச்சில் பொய். புறம் அவதூறு இருக்கக்கூடாது. எந்தத் தொழிலிலும் சில தவறான ஆட்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல. பேசியே கெட்டவர்கள் ஏராளம். நல்ல மனிதர்களைப் பற்றிய தவறான தகவல்களை உடனடியாக நம்புவதற்கு பலர் இருக்கவே செய்கிறார்கள்.
மற்றவர்களைக் குறை கூறுமுன் நாம் சரியானவர்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். நகரும் கடிகார முள் நம் ஆயுளை குறைத்துக் கொண்டிருக்கிறது. ஆணி போன்ற கூரான வார்த்தைகள் மனக்காயத்தை ஏற்படுத்தி ரத்தம் வழிந்தோடச் செய்கிறது. வீண்பேச்சால் குடும்பங்களில் இருந்து பிரிந்தவர்கள் உண்டு.
வீண் பேச்சால் அரசுப் பணிகளில் பணியிட மாற்றத்துக்கு ஆளாகி பந்தாடப் பட்டவர்கள் உண்டு. நட்பை, உறவுகளை இழந்து ஆதரவின்றித் தவிப்பவர்கள் உண்டு. தேவையற்ற சண்டைச் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் உண்டு. தொழிலில் இறக்கங்களைக் கண்டவர்கள் உண்டு.
நல்ல உதவிகளைக் கெடுத்துக் கொண்டு அல்லாடுபவர்கள் உண்டு. முன்னோர்கள் சொல்வதுண்டு. அடிச்சா வலி மறந்தோ மரத்தோ போய்விடும். ஆனா வார்த்தைய கொட்டுனா அள்ள முடியாதுன்னு, வீண் பேச்சைத் தவிர்ப்போம். உறவுகளுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment