Monday 27 June 2022

தெரிந்ததும் தெரியாததும்.

 தெரிந்ததும் தெரியாததும்.

நம்மவர்களுக்கு தெரியாததைச் சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா?, தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை.
தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அழகிற் கேடாம், இழிவாம், அவமானமாம், மானக்கேடாம்...!
ஆனால்!, இப்படி இல்லவே இல்லை.எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யைப் பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்.
அறியாமை வெட்கப்பட வேண்டியதல்ல; அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது.
பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
வாழ்க்கை என்பது அனுபவங்களானது. ஒவ்வொரு மணித்துளிகளும் நாம் கற்றுக் கொள்ளவும், வருவதை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகும்.
ஆகவே!, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால்!, அப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அவசியமுமில்லை. அப்படி இருக்கவும் முடியாது.
நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம். தெரியாததை தெரியாது என்போம். இது தவறொன்றும் இல்லை. அவமானமில்லை.
நம்மால் செய்ய முடிகின்ற செயலை முடியும் என்போம். முடியாததை என்னால் இயலாது என்போம்.
அப்படி ஒப்புக்கொள்வது என்பது மோசமான தன்மை அல்ல, நேர்மையான பண்பாகும்.

No comments:

Post a Comment