Friday 24 June 2022

சிந்துவெளி புகழ்காத்து

 சிந்துவெளி புகழ்காத்து

சீர்காத்து திறம்காத்து
தென்னாடு வந்தகுலமே
திருவுடைய சோழனவன்
செம்மாண் புகார்நகரில்
திருக்கோவில் கொண்டகுலமே
வந்தவழி மறவாது
வாய்மைநெறி தவறாது
வாழ்வாங்கு வாழ்ந்தகுலமே
வாணிபமும் மதநெறியும்
வளர்ந்தோங்கி நாள்தோறும்
வளமாக நின்றகுலமே
எந்தமிழர் நாடெங்கும்
இறைபணியே பெரிதென்று
எந்நாளும் செய்தகுலமே
என்னுடைய குலமென்பேன்
எல்லாமும் நீயறிவாய்
ஏற்றுக்கொள் தமிழர்நிலமே
காவிரியின் பெருமாட்டி
கவின்மதுரை நகர்தன்னைக்
கனல்சூழ வைத்தகதையும்
கண்ணகி என்றால் இந்த
மண்ணே அடிபணிய
கற்போடு வாழ்ந்தநிலையும்
நாவசையும் போதெல்லாம்
நாடசையும்படி நின்ற
நல்வளையா பதியின்கதையும்
நாடியவர்ப் பணியாது
மணிமேகலை என்ற
நன்மங்கை வாழ்ந்தகதையும்
காவியங்கள் ஐந்தினினும்
மூன்றினிலே தலைதூக்கிக்
காட்டுவதும் எங்கள்குலமே
கடுகளவுதான் சொன்னேன்
மலையளவு புகழுண்டு
காண்பாய்நீ தமிழர்நிலமே
கடலோடி மலைநாடும்
பிறநாடும் சென்றார்கள்
கப்பல் வராதபோதே
காற்றினிலே பாய்போட்டு
கடவுளையே துணைவைத்து
கலங்களெல்லாம் சென்றபோதே
நடமாடும் சிவமாக
திருநீறும் சந்தனமும்
நதிபோலப் பூசும்உடலே
‘நமசிவாயம்’ என்று
நாள்தோறும் சொல்லுமவர்
நயமான சிவந்தஇதழே
தடம்பார்த்து நடைபோடும்
தனிப்பண்பு மாறாத
தகைமிக்க தெங்கள்குலமே
தந்தகரம் அவராகப்
பெற்றவளும் நீதானே
சாட்சிசொல் தமிழர்நிலமே
ஆறாயிரம் பேர்கள்
கற்கின்ற கழகத்தை
அண்ணாமலை நாட்டினான்
அவனோடு போட்டியிட
அத்தனையையும் தான்தந்து
அழகப்பன் முடிசூட்டினான்
ஒராயிரம் தடவை
செட்டிமகன் நானென்று
உலகெங்கும் மார்தட்டினான்
உலகாளும் விஞ்ஞான
மருத்துவமும் கற்றவர்கள்
உண்டென்று பேர்காட்டினான்.
சேராத செல்வத்தைச்
சேர்த்தாலும் நல்லவழி
செலவாகும் எங்கள்குலமே
செந்திருவை சரஸ்வதியை
கேட்டேனும் உண்மைநிலை
தெரிந்துகொள் தமிழர்நிலமே
சாதிவெறி கொண்டேன்போல்
கவிதையிதை எழுதினேன்
தவறல்ல உண்மைசொன்னேன்
தர்மத்தைப் பாடுவது
சாதிவெறி யாகாது
தமிழுக்கே நன்மைஎன்பேன்
ஓதியொரு மொழிசொன்ன
ஒக்கூர்மா சாத்தியுமென்
உன்னதப் பாட்டிஆவாள்
உயர்ந்தசீத் தலைச்சாத்தன்
ஒருவகையில் வணிகனென்
உத்தமப் பாட்டனாவான்
ஆதிமுதல் தமிழிலே
அவர்வந்த வழியிலே
அடியேனைப் பெற்றகுலமே
அளவிலே சிறிதேனும்
செயலிலே பெரிதாக
அறிவாய்நீ தமிழர்நிலமே ...
கவியரசர் கண்ணதாசன் ...

No comments:

Post a Comment