Friday 17 June 2022

எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு

 எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு

நேற்று ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய கசப்புகள் அவ்வப்போது உண்டு, ரயில் பயணிகள் பற்றி.
எனக்கு மிகப்பெரிய குறை உள்ளது நம் குழந்தைப் பயணிகள் பற்றி. அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே இக்குறை உள்ளது. முன்பெல்லாம் ரயிலில் வரும் குழந்தைகள் புத்தம்புதிய அனுபவத்தின் திகைப்பில் அல்லது பரவசத்தில் இருக்கும். தயங்கியபடி, உத்வேகம் கொண்டபடி தந்தையிடமோ தாயிடமோ மெல்லிய குரலில் ஐயங்கள் கேட்டுக்கொண்டிருக்கும். கொஞ்சம் கழிந்ததும் சலிப்படைந்து மெதுவாக தூங்கிவிடும்
இப்போது வரும் குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. இரண்டு அடிமைகளை உடனழைத்துவரும் மனநலம் குன்றிய எஜமானன் போலிருக்கின்றன நம் குழந்தைகள். காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை நள்ளிரவில் சோடா வேண்டும் என்று கூவி அழுதது. கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது வெறிகொண்டு கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. எர்ணாகுளத்தில் அதன் அப்பா வெளியே ஓடி மூச்சிரைக்க திரும்பி வந்து ஒரு கோக் புட்டியை அதற்கு கொடுத்தார். அதை ஒருவாய் குடித்துவிட்டு வேண்டாம் என்றது. ரயில் கிளம்பி பத்தே நிமிடத்தில் லேய்ஸ் வேண்டும் என்று கூச்சல்.
நேற்று நாகர்கோயில் ரயிலில் ஒரு குழந்தை மேல் பெர்த்தில்தான் படுப்பேன் என கூச்சலிட்டது. இரண்டு வயதுதான் இருக்கும். அதன் அப்பாவும் அம்மாவும் கெஞ்சிக்கொண்டே இருந்தனர். பொறுமையை மிகமிகத் திரட்டிக்கொண்டேன். எனக்கு நல்ல சளி பிடித்திருந்தது. பகலில் தூங்கவில்லை. ஆகவே தூங்கிவிட்டேன். ஆனால் நள்ளிரவில் அந்தக்குழந்தை மீண்டும் கூச்சலிட்டபோது விழித்துக்கொண்டேன். அது தூக்கு என்னை தூக்கு என்று கூவியது. அதை அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். தூக்கி உள்ளே கொண்டுசெல் என்று மீண்டும் கூச்சல்.
இந்தப்பெற்றோர் குழந்தைகளை ஏதோ அரிய பொக்கிஷம் என நினைக்கிறார்கள். அப்படி நாமும் நினைப்போம் என நம்புகிறார்கள். ஒரு சிறு முகச்சுளிப்பு எழுந்தால்கூட திகைக்கிறார்கள். உலகுக்கே அரிய செல்வமான தங்கள் குழந்தைமேல் ஒருவர் அதிருப்தி கொள்ளக்கூடுமா என்ன?
குழந்தைகளை இந்த அளவுக்கு கொஞ்சி, அவற்றுக்கு அடிமைப்பணி செய்யும் சமூகம் வேறெந்த நாட்டிலாவது உருவாகியிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. நானும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இதோ ஒருமாதம் அமெரிக்காவின் சாலைகளிலேயே வாழ்ந்துவிட்டு மீண்டிருக்கிறேன். அமெரிக்காவில் எங்கும் இப்படி ஒரு குழந்தையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே ஒரு குழந்தை சற்று சத்தம்போட்டால் ‘உஷ், இங்கே மற்றவர்கள் இருக்கிறார்கள்’ என்றுதான் தந்தையோ தாயோ சொல்கிறார்கள். குழந்தை அமைதியாகிவிடுகிறது. இங்கே இக்குழந்தைகள் மற்றவர்களை தொந்தரவு செய்யும்பொருட்டே கூச்சலிடுகின்றன, கவனத்தை கவர நினைக்கின்றன என நன்றாகவே தெரியும். ஏனென்றால் கூச்சலிடும்போது அவை நம்மைத்தான் பார்க்கின்றன.
எண்ணிப்பார்க்கிறேன், நான் வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையிடம் எனக்கு சோடா வேண்டும் என்று அடம்பிடித்திருக்க முடியுமா? அவரிடம் ‘எனக்கு போர் அடிக்கிறது’ என்று சொல்ல முடியுமா? திகைப்பிலேயே மனிதர் மண்டையைப்போட்டிருப்பார். இன்று குழந்தைகள் பெற்றோரிடம் ‘என்னை குஷிப்படுத்து’ என ஆணையிடுகின்றன. பெற்றோரும் கோமாளிக்கூத்து அடிக்கிறார்கள். ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களின் கோமாளித்தனம் இன்னமும் கூடியிருக்கிறது. குழந்தைக்கு ‘எல்லாவற்றையும்’ அளித்துவிட துடியாய் துடிக்கிறார்கள். அது எதையாவது கேட்டால் பதறிவிடுகிறார்கள். அது எதையாவது தூக்கி வீசினால் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுகிறார்கள்.
பெரும்பாலான குழந்தைகளின் முகங்கள் எப்போதும் அதிருப்தியும் சிணுங்கலும் கொண்டவையாக இருக்கின்றன. இந்த உலகத்தையே அளித்தாலும் அவற்றால் மகிழ்ச்சி அடைய முடியாது என்று தோன்றுகிறது. நான் அந்தக்குழந்தைக்காகவே பரிதாபப்படுகிறேன். நாகர்கோயிலில் ஒரு பையன் பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை என்பதனால் தற்கொலை செய்துகொண்டான் என்று படித்தேன். அது ஓர் உச்சநிலை. ஆனால் அதற்கு முந்தைய நிலையில்தான் பல குழந்தைகள் இருக்கின்றன. எண்ணியவை எண்ணிய உடனே கைக்கு வந்தாகவேண்டும். ஏன் வரவேண்டும்? எப்படி வரமுடியும்? அந்த யதார்த்தத்தின் மேல் முட்டிக்கொள்ளும்போது அவை அடையப்போகும் துயரின் அளவை கற்பனைசெய்து பார்க்கிறேன். உலகமே தனக்குச் சேவை செய்யவேண்டும், தான் இன்னொருவருக்காக எதுவும் செய்யவேண்டியதில்லை என எண்ணி வளரும் குழந்தை உறவுகளை எப்படி கையாளும்?
நேற்று என் அருகே படுத்திருந்த ஒருவர் எழுந்து கூச்சலிட்டார். “ஏம்மா புள்ளைய கொஞ்சம் பேசாம இருக்க வைக்கிறியா? நாங்க கொஞ்சம் தூங்கணும்”
பிள்ளையின் அம்மா சீற்றமடைந்து “அவன் சின்னப்புள்ளை” என்றாள்.
“சின்னப்புள்ளைன்னா தூக்கி வெளியே கொண்டுட்டு போ… இனிமே இங்க சத்தம் கேக்கப்பிடாது”
இன்னொருவரும் பொறுமையிழந்திருந்தார்போலும். அவர் “சார், இப்பல்லாம் ரயில்வேயிலே அஃபிசியலா அறிவிச்சிட்டான். சின்னப்புள்ளைங்க சும்மா சும்மா கத்தினா கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்… பேரண்ட்ஸை எறக்கி விட்டிருவான்… கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க”
அதில் அந்த குழந்தையின் அம்மா கொஞ்சம் பயந்துவிட்டாள். “அவன் அப்டித்தான்… சொன்னா கேக்கமாட்டான்…”
“நாங்களும்தாம்மா புள்ள வளத்திருக்கோம்… அப்ப புடிச்சு பாக்குறேன். என்னமோ கொஞ்சிட்டே இருக்கீங்க” என்றவர் சட்டென்று அந்தக்குழந்தையிடம் “டேய் மறுபடி சத்தம்போட்டே அறைஞ்சிருவேன் பாத்துக்க” என்றார்.
குழந்தை திகிலுடன் அமைதியடைந்தது. அதன்பின் காலைவரை அமைதி. ‘அப்பன் அடிக்காதவனை ஊர் அடிக்கும்’ என்ற மலையாளப் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.
நிஜமாகவே இந்திய ரயில்வே அண்மையில் அறிவித்திருக்கிறது, ரயிலில் தூங்கவிடாமல் குழந்தைகள் கூச்சலிட்டால் முறைப்படி புகார்கொடுக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் எழுதியே வைத்திருக்கிறார்கள்.
வியப்பாக இருந்தது. இந்தியா முழுக்க இதுதான் நிலைமை. எத்தனை ஆயிரம் புகார்கள் வந்திருந்தால் ரயில்வே இப்படி ஒரு விதியை உருவாக்கும். எத்தனை நூறுபேர் பொறுமையிழந்திருந்தால் ஒருவர் புகார் கொடுப்பார் என எண்ணிப்பார்த்தால் இது எத்தனை பெரிய பிரச்சினை.

No comments:

Post a Comment