Thursday 22 April 2021

ராமாயணத்தில் அனுமாரும் உண்டு, அணிலாரும் உண்டு. இருவரும் ராமருக்குச் சேவை செய்தவர்கள். ஆனால், அவை ஒரே மாதிரியான சேவைகள் அல்ல.

 ராமாயணத்தில் அனுமாரும் உண்டு, அணிலாரும் உண்டு. இருவரும் ராமருக்குச் சேவை செய்தவர்கள். ஆனால், அவை ஒரே மாதிரியான சேவைகள் அல்ல.

அனுமார் வானர குல இளவரசனான சுக்ரீவனை ராமருக்கு அறிமுகப்படுத்தினார். சீதையைத் தேடி எங்கெங்கோ திரிந்தார். கடல் தாண்டி இலங்கையில் புகுந்தார். பல ஆபத்துகளைத் தாண்டி சீதையைச் சந்தித்தார். ராமர் நலமாக உள்ளார், விரைவில் வருவார் என்ற செய்தியைச் சொல்லி அவருடைய உயிரை மீட்டுத் தந்தார். பின்னர் இங்கே ராமரிடம் திரும்பி வந்து சீதையைப் பற்றிய விவரத்தைச் சொல்லி இவருடைய உயிரையும் மீட்டார்.
யுத்தத்தில் வீரத்தோடு போரிட்டார். லட்சுமணன் தாக்கப்பட்டு வீழ்ந்தபோது மருந்து மலையைச் சுமந்து வந்து உயிர் காத்தார். பரதன் உயிர் துறக்கத் தயாரானபோது ராமர் வரும் செய்தியைச் சொல்லி அவருடைய உயிரையும் காப்பாற்றினார்.சுருக்கமாகச் சொன்னால், ராமாயணத்தில் ராமருக்கு உற்ற தோழர் அனுமார்தான். அவரது உயிரை, அவரது மனைவி, தம்பிகள் இருவர் உயிர்களையும் பல சந்தர்ப்பங்களில் காத்திருக்கிறார்.
போரில் ராமரைத் தன்மீது சுமந்து திரிந்த வீரர். சிறந்த தொண்டராக எப்போதும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்.இதோடு ஒப்பிட்டால், அணிலார் செய்தது மிகவும் குறைவு. ராமர் இலங்கைக்குப் பாலம் கட்டும்போது, தன் உடலைக் கடலில் நனைத்துக்கொண்டு, அதில் ஒட்டிக்கொண்ட மணலைப் பாலத்தில் சென்று உதிர்த்தது. அவ்வளவுதான்.கம்ப ராமாயணத்தில் அந்தப் பாலத்தின் அளவு எத்தகையது என்று விவரிக்கும் ஒரு பாடல்:
எய்து யோசனை ஈண்டு ஒரு நூறுடன்
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை என்று செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே!
பாலம் கட்டி முடித்த வானரர்கள் உலகுக்கே அரசனாகிய ராமன் முன்னால் சென்று நிற்கிறார்கள், ‘நூறு யோசனை நீளம், ஐ இரண்டு, அதாவது, பத்து யோசனை அகலத்தில் ஒரு பாலத்தைக் கட்டிவிட்டோம்’ என்று சொல்கிறார்கள்.
உண்மையில் அது பாலமே அல்ல, கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட ஓர் அணை. நூறு யோசனை நீளம், பத்து யோசனை அகலம் என்றால் அது எத்தனை பெரிதாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
அத்தனை பெரிய பாலத்தில், ஓர் அணில் உதிர்த்த மணல் துகள்கள் எத்தனை இருக்கும்? ஒருவேளை அந்த அணில் அங்கே இல்லாவிட்டாலும் அந்தப் பாலம் கண்டிப்பாகக்
கட்டப்பட்டிருக்கும் அல்லவா?ஆனால், ராமர் அப்படி நினைக்கவில்லை. அந்தச் சிறிய அணில் தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. அந்த உதவியை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். நன்றி தெரிவிக்கும்விதமாக அந்த அணிலைக் கையில் எடுத்து வருடிக்கொடுத்தார்.
கம்ப ராமாயணத்தில் அணில் வருவதில்லை. ஆனால், இந்த இனிமையான காட்சி பல மக்கள் இலக்கியங்களில்
அருமையாக
விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தக் கதையைச் சொல்லி மகிழ்வார்கள் மக்கள்.அனுமார், அணிலாரை ஒப்பிட்டு அவரவர் அளவில் அவரவர் உதவி பெரியது என்று சொல்லும் அழகிய குழந்தைப் பாடல் ஒன்று,
அனுமாருக்கும் வால் அதிகம்,
அணிலாருக்கும் வால் அதிகம்,
அதனால்தான் ராமாயணத்தில்
அவ்விருவருக்கும் பேர் அதிகம்!
அனுமார் அரிய பணி செய்தார்,
அணிலார் ஆன பணி செய்தார்,
ஆனால், ராமர் இருவரையும்
அகிலம் புகழும்படி செய்தார்!
ராமாயணத்தை ‘ராம அயணம்’ என்று அறிய வேண்டும். அதாவது, ராமன் காட்டும் பாதை. அவரைப்போல் நம் வாழ்வில் ‘அரிய பணி’ செய்தவர்களுக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தங்களால் ‘ஆன பணி’ செய்வோருக்கும் தரவேண்டும்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !!!
படித்ததில் பிடித்தது
நன சித்தர்கள் வாழும் பூமி



No comments:

Post a Comment