Wednesday 28 April 2021

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

நம் காலத்தில் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வசதிகளை,நம் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்...
எந்த வசதியும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்ல எண்ணம் இருப்பதில்லை...
நம் வேலையானால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற குறிக்கோளற்ற பாங்கு தான் பலரிடமும் மேலோங்கி உள்ளது...
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் வரும் உலகம் இன்பமயமாகி விடும்...
ஒருவர் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது, பருகுவதற்கு தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தார்...
தாகத்தால் உயிர் இழந்து விடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது...
அந்த இடத்திற்கு அவர் சென்றார். அங்கு ஒரு கையால் அடித்து இயக்கும் விசையால் இயங்கும் நீரெடுப்பான் (water pump) மற்றும் அதன் அருகில் ஒரு குவளையில் குடிநீரும் இருந்தன
ஒரு அட்டையில் எவரோ ஒருவர் எழுதி வைத்து இருந்தார்கள்...
அதில்!, "குவளையில் இருக்கும் தண்ணீரை அந்த நீரெடுப்பானில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டுப் பின்னர் மறுபடியும் அந்தக் குவளையில் தண்ணீரை நிரப்பி விட்டுப் போகவும்" என்று இருந்தது...
அந்த நீரெடுப்பான் மிக மிகப் பழையதாக இருந்தது. அது வேலை செய்யுமா?, தண்ணீர் வருமா? என்பது அய்யப்பாடாக இருந்தது. அது வேலை செய்யா விட்டால் அந்தக் குடிதண்ணீர் வீணாகி விடும்...
அதற்குப் பதில் அந்தக் குடிதண்ணீரைக் குடித்து விட்டால் தாகம் தணியும் மேலும் உயிர் பிழைப்பதற்கு உறுதியும் இருக்கும். அவர் ஆலோசித்தார்...
குடிதண்ணீரைக் குடித்து விடுவதே அறிவான செயல் என்று அறிவு கூறியது...
ஒரு வேளை அதில் எழுதி வைத்து இருப்பது போல் அந்தப் நீரெடுப்பான் இயங்குவதாக இருந்து, அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக நேருமே, அதற்கு நாமே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது...
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.
தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்தக் குவளையில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவரது மனம் நிறைந்திருந்தது...
ஆம்.,நண்பர்களே...!
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப் பெரிய பரிசு; விருது.
நல்லது அல்லாததை செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் மன நிறைவை விட பெரிய வாழ்த்து, பாராட்டு, விருது ஏதாவது இருக்கிறதா.
இப்படி மனநிறைவைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது நியதி. எனவே!, எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ!, அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள்.
செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவருக்குக் கொடுங்கள். உறுதியாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும். கொடுத்து மகிழ்வோம்.

No comments:

Post a Comment