Monday 19 April 2021

வாழக் கற்றுக் கொள்வோம்.

 வாழக் கற்றுக் கொள்வோம்.

இப்போதெல்லாம் பத்து பேர் முதல் பத்தாயிரம் பேர் வரை கூடும் கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகளில் `உங்களில் எத்தனை பேர் டென்ஷன் ஆகிறீர்கள்?’ என்ற சாதாரண கேள்வியைக் கேட்டால், தயங்கித் தயங்கி முதலில் ஒருசிலர் கையை தூக்குவார்கள். அவரைப் பார்த்து இவர், இவரைப் பார்த்து அவர் என்று பின்பு ஒட்டுமொத்தமாக அனைவரும் கையை உயர்த்திவிடுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் `அப்பாடா இந்த கூட்டத்தில் இருக்கும் அனைவருமே நம்மை மாதிரித்தான்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. எல்லோருக்கும் இரண்டு கைகள் என்பது இயற்கை. அதுபோல், எல்லோருக்கும் டென்ஷனும் இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா!
பெரும்பாலானவர்கள் தனக்கு டென்ஷன் ஏற்படும்போது, அதை தீர்க்கும் நிரந்தர வழியைத் தேடாமல், தற்காலிகமாக மனதை அதில் இருந்து திசைதிருப்பி, சிறிது நேரம் மனதை அமைதிப்படுத்தும் வழியைத்தான் தேடுகிறார்கள். அதனால் சினிமா பார்க்கும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் குறையும் டென்ஷன் சிறிது நேரத்தில் மீண்டும் பாதை திரும்பி சம்பந்தப்பட்டவர்களிடமே வந்து சேர்ந்துவிடும்.
மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக்கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.
மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்குச் செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம். அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர் களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.
இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!
ஆனால்..
– உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
– உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர்களுக்கும் கொடுக்க முடியும்.
அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.)

No comments:

Post a Comment