Friday 30 April 2021

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் கலை

 இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் கலை.

சிலருக்குத் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம் மற்றும் மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் நிறைவடைய மாட்டார்கள்...
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் மகிழ்ச்சி, அமைதி, மனநிறைவு இவைதான் தேவை...
ஆனால்!, இவற்றைப் பணயம் வைத்து, பணம் பதவியைத் தேடி ஓடுகிறார்கள்; புகழை நாடி பணம் தேடுகிறார்கள்...
ஆனால்! மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் மிகையாகச் சேர்ந்தாலும் இறுதிக் காலத்தில் உடன் வராது...
வாழ்க்கையில் மனநிறைவு இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்...
பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவிற்கு முடிவுரையாகும்...
ஒரு ஊரில் ஒருவர் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது...
ஆகவே!, அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும்போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்...
இதனைக் கேட்டவர், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலை தேட, பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றார்...
தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவரது நிழல் விழும் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தார்...
அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்தியவர் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்...
புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவரது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்தவர் அழுது புலம்பிக் கொண்டிருந்தார்...
அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவரது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவரைக் கண்டார்...
பின் அவரிடம்.. "உன்னிடம் இருப்பதை கொண்டு மகிச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம்தான் ஏற்படும்" என்றார்...
ஆம் நண்பர்களே.
நாம் பெறாத ஒன்றை நினைத்து துன்புறுவதை விட, நம்மிடம் உள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைவதே மேல்.
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.
அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

No comments:

Post a Comment