Friday 23 April 2021

நந்தி தொடர் - 3.

 நந்தி தொடர் - 3.

♥
♥ திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன. இந்த 8 நந்திகளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரத்தை கடந்ததும் ஐந்தாவது பிரகாரத்தில் கால் மாற்றி அமர்ந்து தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி ஒரு நந்தி உள்ளது. இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது. பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பிற்கு காரணம் ஒரு முகலாய மன்னன்.
♥ முகலாயர்கள் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை கோவிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றினான். அவன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தபோது 5 சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், ‘‘எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், “இது எங்களது ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்கள்.
♥ இதை கேட்டதும் முகலாய மன்னனுக்கு கோபம் வந்தது. “நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் வந்து அதை ஒன்றாக சேர்க்க முடியுமா?” என்று ஏளனமாக சொன்னான். அதோடு மாட்டை இரண்டு துண்டாகவும் வெட்டினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர்.
♥ அப்போது அசரீரி ஒலித்தது. “வடக்கு திசை நோக்கி செல்லுங்கள். அங்கே என் பக்தன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி அமர்ந்து இருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அசரீரியில் அண்ணாமலையார் கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.
♥ அவனைப் பார்த்ததும் சிவ பக்தர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. “இந்த சிறுவனா வந்து காளை மாட்டுக்கு உயிர் கொடுக்க போகிறான்” என்று நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் சிவ பக்தர்களுக்கு அந்த சிறுவன் மீது நம்பிக்கை வந்தது.
♥ அண்ணாமலையார் ஆலயத்துக்குள் நடந்ததை கூறினார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
♥ இதை கண்ட முகலாய மன்னன் சிவ பக்தர்களை பார்த்து, “இந்த வாலிபன் ஏதோ சித்து விளையாட்டு விளையாடுகிறான். இதை நான் நம்ப மாட்டேன். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன்” என்றான்.
♥ அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலே அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுபடி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிசங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
♥ இதையும் முகலாய மன்னனால் நம்ப முடியவில்லை. ராஜகோபுரம் அருகில் உள்ள நந்தி அருகில் வந்தான். அந்த நந்தியை பார்த்தவன், “இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும் அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.
♥ இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது.
♥ இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
♥ அவனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது.
♥ அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வீரேகிய முனிவர் இருக்கும் வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது.
♥ ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்த நந்தியை வல்லாள மகாராஜன் அமைத்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. இந்த நந்தியை சுற்றி நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.
♥ மாட்டுப் பொங்கல் அன்று இந்த நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்வார்கள். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும்.
♥ பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் சேரும், பதவி உயர்வு கிடைக்கும்.
நன்றி சித்தர்கள் வாழும் பூமி

No comments:

Post a Comment