Saturday 17 April 2021

வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதா ரசிப்பதா.

 வண்ணத்துப் பூச்சியைப்

பிடிப்பதா ரசிப்பதா.
உண்மையில், வெற்றி என்பதும் தோல்வி என்பதும் மாயையே !
வாழ்வின் நிகழ்வுகளுக்கு நாமாகவே இட்டுக் கொண்ட பெயர்கள். மதிப்பெண் பட்டியலில் இந்த இடத்தில் இருந்தால் அது வெற்றி ! பொருளாதாரத்தில் இந்த நிலையில் இருந்தால் அது வெற்றி ! அலுவலகத்தில் இந்த நிலையில் எனில் அது வெற்றி ! கலைகளில் இந்த இருக்கையில் அமர்ந்தால் அது வெற்றி என்றெல்லாம் நாமே மைல்கற்களைப் போட்டு விடுகிறோம். நமது பயணம் அந்த மைல் கற்களின் வழியாய் போகவில்லையேல் அதைத் தோல்வி என முடிவு செய்து விடுகிறோம்.
வெற்றி என்பது இறைவன் தந்த ஒரு நாளை எப்படி நல்ல முறையில் நாம் செலவிட்டோம் என்பதில் இருக்கிறது. அதே நாளை பிறருக்குப் பயனற்ற வகையில் செலவிடும் போது அது தோல்வியாய் மாறிவிடுகிறது ! இப்படிப்பட்ட நாட்களின் கூட்டுத்தொகை நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை பறைசாற்றுகிறது.
ஒரு இடத்தை அடைவதே வெற்றி என முடிவு செய்து விட்டால், அந்தப் பயணத்தின் இடையில் நடக்கின்ற சுவாரஸ்யங்களை மொத்தமாய் இழந்து விடுவோம். மலையின் உச்சியில் ஒரு வீடு இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த உச்சியை அடைவது தான் உங்கள் இலட்சியம் என வைத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு விதமாக அணுகலாம்.
ஒன்று, போகும் வழியில் மலையை ரசித்து, மலையின் தலையில் தலையாட்டும் இலைகளை ரசித்து, கானகத்தின் காற்றோடு கதை பேசிச் சிரிக்கும் பெயர் தெரியா மலர்களை ரசித்து, கிளைகளில் தாவும் பறவையின் இறகுகளின் மென்மையை ரசித்து, சரசரக்கும் சருகுகளின் இசையை ரசித்து பயணிக்கலாம்.
அல்லது, வீட்டின் கூரையில் மட்டுமே பார்வையை பதித்து, அர்ஜுனர் வில் போல, கல் முள் எல்லாம் தாண்டி வீட்டை அடையலாம். போகும் வழியில் இருக்கின்ற அத்தனை சுவாரஸ்யங்களையும் நிராகரித்து விடலாம்.
இதில் முதலாவது மனிதன் அந்த வீட்டை அடையாவிட்டாலும் மனதுக்குள் குதூகலமாய் இருப்பான். அவனது பயணம் வெற்றி என அவனுக்குத் தோன்றும். இரண்டாவது மனிதனோ வீட்டை அடைந்தாலும் அது அவனுக்கு விருப்பமானதாய் இல்லை என விரைவிலேயே உணரத் துவங்குவான்.
வெற்றி என்பது வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதில் இல்லை!
அதை ரசிப்பதில் !

No comments:

Post a Comment