Tuesday 9 November 2021

கவிஞனைக் கண்டேன்!

 கவிஞனைக் கண்டேன்!

---------------------(5)---------------
"நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவியரசர் கண்ணதாசன், உங்களிடம் பேசுவார்!" என்று,
எங்கள் (பரமகல்யாணி) கல்லூரி மாணவர் பேரவைத் தொடக்கவிழாவில், நான் அறிவித்ததும் மாணவர்கள் கரவோசை செய்தார்கள்.
கவிஞர் இருக்கையில் அமர்ந்தபடியே, எதிரே இருந்த 'மைக்'கில் பேசத் தொடங்கினார்.
"உழுத மாடு ஊர்வழி போனால் அங்கேயும் பிடித்து உழுவார்களாம்!
ஓய்வாய் குற்றாலம் வரலாமேனு வந்தால், அங்கேவா! இங்கேவானு அழைத்து அன்புத்தொல்லை செய்கிறார்கள்!
நான் இப்போதெல்லாம் கல்லூரி விழா, கோவில் விழாக்களைத் தவிர வேறு எங்கும் போகிறதில்லை!
எத்தனையோ கல்லூரி விழாக்களில் கலந்திருக்கிறேன்.
மாணவர்கள் ஆசிரியர்களையும், ஆசிரியர்கள் மாணவர்களையும் வசை பாடுவதைத்தான் கேட்டிருக்கிறேன்!
மாணவர் தலைவர் நிர்வாகத்தை புகழ்வதும், நிர்வாகம் மாணவர்களைப் புகழ்வதையும் இங்கேதான் பார்க்கிறேன்!
(அனைவரும் கை தட்டுகிறோம்)
பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து, கவியரங்கத்திற்கு அழைத்தார்கள். போயிருந்தேன். பத்து நிமிடம்கூட பேசவில்லை!
எல்லோரும் என்னைப் புகழ்ந்து பேசுவதற்கே எல்லா நேரத்தையும் எடுத்துக்கொண்டார்கள். பிறகு நான் எங்கே பேசுவது?
என்னலாமோ பேசுகிறேன். என்னலாமோ எழுதுகிறேன். எல்லோரும் நல்லா இருக்கிறதுனு சொல்கிறாங்க!
என்கையில் எதுவும் இல்லை!
என்னை மாதிரி கோடி கோடியா சம்பாதிச்சவரும் இல்லை!
கோடி கோடியா விட்டவரும் இல்லை!
உடம்பு முன்னே மாதிரி இல்லை. முன்பெல்லாம் நாம் சொன்னதை எல்லாம் அது கேட்கும்.
இப்போம், அது சொன்னபடித்தான் நாம் கேட்க வேண்டியது இருக்கிறது!
வெளியே புறப்பட்டால் ஒரு மெடிக்கல் ஸ்டோரையே உடன் கொண்டு வர வேண்டியது இருக்கிறது!
எல்லாம் கெட்ட பிறகுதான் ஞானம் வருகிறது!
எனக்கு பல் எல்லாம் விழுகிறநேரத்தில் என் பையன் பல் டாக்டர் ஆகிறான்.
நான் பிரச்சினைகளில் இருந்து விடுபட்ட நேரத்தில் ஒரு பையன் வக்கீல் ஆகிறான்.
இதுதான் வாழ்க்கை!
நாம் நினைக்கிறது வாழ்க்கையில் நடக்கிறது இல்லை!
டைரக்டர் வருவார். ஒரு பாட்டு வேண்டும் என்பார்.
பாட்டு எப்படி இருக்கணும்னு கேட்பேன்.
அவர் மேல்சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு சிறுதுணியை எடுத்துக் காட்டுவார்.
(அதுபோல் கவிஞரும் செய்கையில் காண்பித்தார்)
"இது ஒரு 'சுவிம்மிங் டிரஸ்'. கதாநாயகி இதை போட்டுக்கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கிறாங்க! இதுதான் காட்சி. இதற்கு ஒரு பாட்டு எழுதுங்க!" என்பார்.
நானும் எழுதுவேன்.
படம் வெளிவரும். அந்த காட்சி இருக்கும். ஆனால் என் பாட்டு இருக்காது.
ஏன் என்று கேட்டால்? பாடல் ஆபாசமாக இருக்காம்!
(கூட்டத்தில் சி்ரிப்பலை)
இப்படித்தான் 'சென்சார் போர்டு' இருக்கு!"
இப்படியெல்லாம் ரசனையாக கவிஞர் பேசிக்கொண்டு இருக்கையில், எங்கள் துணை முதல்வர் ஜானகிராமன் பின்புறமாக
வந்து, என் தோளைப் பிடித்து அழுத்தினார்.
என் காதுக்கு அருகில் கிசுகிசுத்தார்.
ஒரு துண்டுச் சீட்டையும் எனது கையில் திணித்துவிட்டுப் போனார்.
அதைப் படித்துப் பார்த்தேன். என் காதில் கிசுகிசுத்ததே அதிலும் இருந்தது.
"ஒரு பாட்டு பாடச் சொல்லவும்!" என்று அதில் எழுதி இருந்தார்.
கவிஞரை இடைமறித்து, இந்த நேரத்தில் எப்படிச் சொல்வது?
தயக்கத்துடன் துண்டுச் சீட்டை கையில் வைத்துக்கொண்டு, கவிஞரின் முகத்தையே பார்த்தபடி இருந்தேன்.
எங்களுக்குள் நடந்த கிசுகிசுப்பை கவிஞர் புரிந்திருக்கிறார் போலும்!
பேசிக்கொண்டே இருந்தவர், ஒரு பொருத்தமான இடத்தில் அவரே பாடத் தொடங்கினார்.
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்!
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்! என்ற பாடலை ராகத்துடன் முழுவதும் பாடினார்.
கவிஞரின் பாடல்களில் 'காய்' பாடலும் (அத்திக்காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே), 'தேன்' பாடலும் புகழ்பெற்றவை. இலக்கிய நயம் மிக்கவை!
அணி இலக்கணத்தால் இந்தப் பாடல்களுக்கு கவிஞர் அணி சேர்த்து இருப்பார்.
அனைவரும் பலமுறைக் கேட்டதுதான், இத்'தேன்' பாடல்!
இருந்தாலும் பாடலில் தமிழ்ச் சொற்களை கவிஞர் கையாளுகிற நயத்தையும், அழகையும் மீண்டும் ஒருமுறை இந்தச்சூழலில் படித்துப் பாருங்களேன்!
படித்துவிட்டு முடிந்தால் 'யூ-டியூப்' சென்று, பி.பி.ஸ்ரீனிவாஸ்- பி.சுசீலா குரலில் தேனூரும் அப்பாடலை கேட்டும் பாருங்களேன்!
இதோ உங்கள் வசதிக்காக...
----------------பாடல் -----------
ஆண்:- பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்.
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்!
பெண்:- பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்!
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்!
ஆண்:- கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்.
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்.
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்!
பெண்:- பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்!
பெண்:- மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்.
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்.
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்.
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன்!
ஆண்:- பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்!
பெண்:- பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்.
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்.
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்!
---------------------
கவிஞர் எழுதிய பாடலை அந்தக் கவிஞரே பாட, அருகிலே இருந்'தேன்.' என் செவிகளில் பாய்ந்ததே செந்'தேன்'!
கவிஞருக்கு அழகாகப் பாடவும் தெரியும் என்பதை, அதன் பிறகன்றோ உணர்ந்'தேன்'!
நான் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டிருந்த எங்கள் மாணவர்களும் பார்வையாளர்களும் மெய்மறந்தார்கள் என்று சொன்னால்,
அது மெய்யே!
கவிஞர் தொடர்ந்து பேசினார்.
எங்கள் வீட்டில் பிள்ளைகள் 'டங்ஸ்டன்' பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்... என்று தொடங்கினார்.
நான் ஆர்வமானேன்!
நாம் பேசிய அந்த 'டங்ஸ்டன்' சொல்லை, கவிஞர் பயன்படுத்துகிறாரே! என்ன சொல்ல வருகிறார்? என்று உன்னிப்பாகக் கவனித்தேன்.
ஆனால் அதற்குள் வேறு ஏதோ பற்றி அவர் பேசத்தொடங்கிவிட்டார்! அது எனக்கு சிறு ஏமாற்றமாக இருந்தது!
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிப் பேசினார்.
"வாழ நினைத்தால்..." என்று கவிஞர் தொடங்க, "வாழலாம்!" என்று மாணவர்கள் முழங்க!
"வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா!"
என்று கவிஞருடன் மாணவர்களும் சேர்ந்து பாட
அந்த மகிழ்வான நிகழ்வை,
நான் இங்கே எப்படிச் சொல்ல? என்னிடம் வார்த்தைகளே இல்ல!
கவிஞர் தொடர்ந்தார்...
"கணக்கு எழுத என்னை அனுப்பினாங்க. நான் அங்கே கவிதை எழுதினேன்!
கடைசியில் கவிதைதான் எனக்கு சோறு போட்டது!
உனக்கு எது பிடிக்கிறதோ? அந்த வழியில் போ! அதுதான் உனக்கு வாழ்க்கையில் உதவும்!
தாயை வணங்கு!
தாயை மதிக்கிறவர்கள்தான், இன்றைக்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்!
யாரை நண்பர்களாக நினைத்தேனோ அவர்கள் எல்லாம் எனக்கு உதவவில்லை!
யாரை எதிரி என்று நினைத்தேனோ அவர்கள் உதவினார்கள்!
எனக்கு ஆஸ்தான கவிஞர் என்று பட்டம் தந்திருக்கிறார்கள். அமைச்சர் போல் அந்தஸ்து, கார்!
பத்துப் பவுனுல தங்கச் சங்கிலியும் பதக்கமும் அணிந்திருக்கிறார்கள்!
(கவிஞர் தனது, கழுத்தில் அணிந்திருந்த தமிழக அரசு முத்திரையுடன் கூடிய தங்க டாலரை எடுத்துக் காட்டுகிறார்)
நான் இறந்தால் என் உடலில் தேசியக்கொடி போர்த்தி, பீரங்கி வண்டியில் வைத்து கொண்டு போவார்கள்.
இருபத்தோறு குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கும்!" என்று இறுதிக் காலத்தைப் பற்றி பேசி, கூடி இருந்தவர்களை ஒருகணம், கண்கலங்கச் செய்துவிட்டார், கவிஞர்!
சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் விழாவில், கவிஞர் பேசினார்.
அடி பிறழாமல் அவற்றை எல்லாம் நான் எழுதிவிடவில்லை.
இளமையின் அறியாமையால், அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தத் தவறிவிட்டேன்!
விழா நடந்தது, 31-7-1978ஆம் நாள்!
ஆண்டாண்டுகளாய் அடிமனதின் ஆழத்தில் கிடந்து, ஆவியாகிப் போனது தவிர எஞ்சியிருந்த கொஞ்ச கொஞ்ச நினைவுகளை, ஒவ்வொரு கல்லாய் பொறுக்கிப் போட்டு நீரை மேற்கொண்டுவந்த காகம் போல், கொண்டுவந்து உங்களுக்கு பகிர்ந்து தந்து, மகிழ்ந்து இருக்கிறேன்!
கவிஞர் பேசிய வார்த்தைகள், அவர் கையாண்ட சொற்கள், இவைகளில் இருந்து நான் நழுவி இருக்கலாம். ஆனால் அவர் கூறிய கருத்துகளில் இருந்து வழுவவில்லை!
விழா முடிய இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது!
கால் மணி நேரம்கூட ஓரிடத்தில் நிற்காத மாணவர்களின் கால்களை, கவிஞரின் பேச்சு மணிக்கணக்கில் கட்டிப்போட்டு வைத்திருந்தது!
'அபூர்வ ராகங்கள்' படம், இரவில் மாணவர்களுக்குத் திரையிட்டோம்!
பெற்றகுழந்தை முகத்தைப் பார்த்ததும் பிரசவ வேதனையை மறந்த தாயைப்போல், விழா வெற்றி அடைந்ததை நினைத்து வேதனைகளை மறந்தோம்!
பேரவைத் துணைத் தலைவர் நண்பர் கண்ணன், என் கைகளைப் பற்றிகொண்டு "விழா சிறப்பாக இருந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க நல்லா பேசுனீங்க!" என்றார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது!
நண்பர்களோடு முதல்வரை பார்ப்பதற்காக காலையிலேயே ஆழ்வார்குறிச்சி அக்ரஹாரத்துக்குச் சென்றேன்.
வீட்டு முன்வாயில் படிக்கட்டில், வேட்டிமட்டும் கட்டிக்கொண்டு, மேல் சட்டை ஏதும் அணியாமல், முதல்வர் கே.எச்.நாராயணன் அமர்ந்து இருந்தார்!
நாங்கள் அவருக்கு வணக்கம் சொன்னோம்!
"விழா நல்லா இருந்ததுப்பா! நீயும் நல்லா பேசினே!" என்றார்.
கல்லூரி முதல்வர் ஆயிற்றே!
அது எனக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு!
இங்கே ஒன்றை நான் சொல்லியாக வேண்டும்!
தலைமைக்கு பேச்சுதிறனும் செயல்திறனும் வேண்டுமென்ற, எமது எதிர் அணி (தேர்தலின் போது) நண்பர்களையும், எங்களை ஏற்கத் தயங்கிய கல்லூரி நிர்வாகத்தையும் ஒரேமேடையில் ஒருசேர கைதட்ட வைத்தது, கவிஞரின் விழா!
இதற்காக நானோ, நாங்களோ தனியாகத் திட்டமிடவில்லை. எல்லாம் இயற்கையாகவே நடந்தது!
இந்தத் தொடரில் என்னைத் தொடர்ந்தும், உற்சாகப்படுத்தியும் வந்த நட்புகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
க.முத்துநாயகம்,
லாலாக்குடியிருப்பு.
புகைப்படம்:-
---------------------
விழா முடிவில் நண்பர் லோகநாதன் (பேரவைச் செயலாளர்) நன்றி தெரிவித்துப் பேசுகிறார்.
கவிஞர் கண்ணதாசனிடம் 'ஆட்டோகிராப்' வாங்க ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு, நான் உதவி செய்கிறேன்.

No comments:

Post a Comment