Friday 12 November 2021

புரிதல் மட்டுமே திறவுகோல்.

 புரிதல் மட்டுமே திறவுகோல்.

பொதுவாக “மனம்போல் வாழ்வு”, “கெடுவான் கேடு நினைப்பான்” என்பது போன்ற பழமொழிகளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்? நம்மை நல்லவர்களாக வாழவைக்க நம் முன்னோர்கள் சொல்லி வைத்த நெறிமுறைகள் என்றே நினைக்கிறோம். ஆனால், நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி நேரடியாகவே பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் பூர்வமாக மேலை நாட்டவர் நிரூபித்து வருகின்றனர்.
நம் சிந்தனைகளை நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு வித சிந்தனைகளும் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக வருபவைதான். அவற்றை அடையாளம் கண்டு இனம் பிரிப்பதில்தான் நம் திறமை உள்ளது. அன்பு, பாசம், நட்பு, மகிழ்ச்சி, பெருமை, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்றவை நல்ல சிந்தனைகள் என்றும், கோபம், வெறுப்பு, பகை, அச்சம், கவலை, துக்கம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுய பச்சாதாபம், போன்றவை கெட்ட சிந்தனைகள் என்றும் கொள்ளலாம்.
தவறான சிந்தனைகளின் பிடியில் இருக்கும்போது, அதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணம் முதலில் நமக்கு எழவேண்டும். அதன்பின், நமக்கு மிகவும் பிடித்தமான, நல்ல விஷயங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக நம் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.
உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்கள் விளையாடிய நினைவுகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம், அருவியில் நீராடிய அனுபவம், நண்பர்களுடன் பொழுது போக்கிய நினைவுகள், நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணங்கள், இப்படி எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், உடனடியாக ஒரு நல்ல பாடலைப் போட்டுக் கேட்கலாம். அல்லது உங்கள் சிந்தனையைத் தொடரமுடியாத விதத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம். இதன்மூலம் தவறான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும்.
எண்ணங்களின் போக்கிற்கும், நம் வாழ்க்கையின் போக்கிற்கும் உள்ள நேரடித் தொடர்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வாழ்க்கை இன்பமயமாக மாறி விடும்.
ஆக, விதியின் போக்கை மாற்றும் வல்லமை உங்கள் எண்ணங்களுக்கு உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிதல் மட்டுமே உங்கள் நல்வாழ்க்கைக்கான திறவுகோல். அதைக் கடவுள் உங்களிடமே கொடுத்துள்ளார். பயன்படுத்தக் கொஞ்சம் பயிற்சி மட்டும் தேவை. அதையும் இன்றே தொடங்குங்கள்.

No comments:

Post a Comment