Friday 12 November 2021

இன்றைய இளைஞனுக்கு சாப்பாட்டைப் பற்றியும், தூக்கத்தைப் பற்றியும் இந்து மதம் கூறுகிறது...

 இன்றைய இளைஞனுக்கு சாப்பாட்டைப் பற்றியும், தூக்கத்தைப் பற்றியும் இந்து மதம் கூறுகிறது...

"அதிகமாக உண்பவனுக்கும் யோகமில்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் யோகம் இல்லை: தூக்கத்தில் அதிக விருப்பம் உடையவனுக்கும் இல்லை; தூங்காமலே விழிப்பவனுக்கும் இல்லை; அளவான உண்ணும், உழைப்புமுடையவனுக்கும், அளவான உறக்கமும் விழிப்புமுடையவனுக்கும் துன்பம் துடைக்கும் யோகம் கிட்டுகிறது".
"பகலில் திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால் இரவில் உணவு அளவு குறைந்ததாயும், சத்துக் குறைந்ததாயும் இருக்கட்டும். சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்குச் சஞ்சலத்தையும் கொடுக்கும் உணவை உட்கொள்ளாதே!
இழவு வீடுகளில் நடக்கும் சாப்பாட்டுக்கு போகாதே. புரோகிதத்தால் பிழைப்பவர் வீட்டிலும் சாப்பிடாதே. இறைவனுக்கு படைக்கக் கூடியது போன்ற சுத்தமான ஆகாரத்தையே சாப்பிடு".
ஆம். முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்பு; அடுத்து அளவான சுத்தமான உணவு: அடுத்தது அளவான உழைப்பும், உறக்கமும்.
நான் சின்ன வயதில் படித்த எல்லாப் பாடங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன.
அவை தான் இத்தனை ஆண்டுகளாக எனக்கு கை கொடுத்து வருகின்றன.
ஆனால், முறையற்ற உணவு, அதற்கு நேர்மாறான பட்டினி, அளவற்ற தூக்கம் - இவற்றால் என் உடம்பு கெட்டு விட்டது.
ஆரம்பத்திலிருந்தே உணவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வில்லையே என்று இன்று நான் வருந்துகிறேன்.
நல்ல வேளையாக இறைவன் எனக்களித்த வரம், அன்று நான் அர்த்தம் தெரியாமலே மனப்பாடம் செய்த பாடல்கள் அனைத்தும் என்ற அர்த்தத்தோடு வந்து உதவி புரிகின்றன.
ஆரம்ப படிக்கட்டுகளை இவ்வளவு அழகாக போட்டுக் கொண்டு விட்டால்,எதிர்காலத்தில் துன்பம் இருக்காது;சோர்வு இருக்காது; அவமானம் நிகழாது; சென்ற இடமெல்லாம் சிறப்பும் கிடைக்கும்.
நண்பர்கள் இருப்பார்கள்; எதிரிகள் இருக்க மாட்டார்கள்;
வரவறிந்து செலவு செய்யும் புத்தி வந்து விடும்.
வாழ்க்கை என்பது பங்கீடு செய்யப்பட்ட சாலை ஆகிவிடும்.
என்னை போல அடிக்கடி சோகப்பாட்டுப் பாட வேண்டியிராது.
வரவு செலவு பற்றிக் கூட நமது பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.
"ஒருவரிடம் கடன் வாங்கினால் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரே தவணையில் பணத்தை கொடுத்துப் பத்திரத்தை திருப்பி வாங்கி விடு. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டத் தொடங்கினால், அதன் வட்டி கணக்கு தலைமுறை தலைமுறைக்கும் வரும்".
ஆம், இதிலும் இன்றைய இளைஞன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கடைசியாக சாப்பாடு பற்றிய அனுபவம்.
எதை எதைச் சாப்பிடக் கூடாது என்று நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன்.
"தட்டைப் பயறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில் கொடியதோர் வாய்வு தோன்றும்
தொட்டுப் பாராதே என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!"
நமது மூதாதையர்கள் வாய்வு, உஷ்ணம், சீதம், சிலேட்டுமம், பித்தம் போன்ற நோய்களுக்கான காரணங்களேயே தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
இன்றைய இளைஞன் மர்ம நாவல்களை விட்டுவிட்டு, மத நூல்களைப் படித்தால், வாழ்க்கையில் சகல பகுதிகளுக்கும் வழி கிடைக்கும்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் " அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் இரண்டிலிருந்து இன்றைய இளைஞனுக்கு கூறிய அறிவுரை...
நன்றி கவியரசு கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment