Monday 29 November 2021

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்.

 உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்.

அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாத சூழலிலும் மகாகவி பாரதி, கைவசமிருந்த அரிசியையும் தானியங்களையும் பறவைகளுக்கு வாரி இறைத்து காக்கை குருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பாடினான். எந்த வலைக்குள்ளும் அகப்படா சுதந்திரக்கலையே வாழ்க்கை.
இயல்பாய் இருங்கள் சிரிக்கும் புத்தர் சிலையைப்போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கப் பழகுங்கள். சிரிப்பின் சிறப்பு என்னவென்றால் அது இறப்பை வெல்லும்.
நாம் மட்டும் ஏன் இப்படி வாழ்கிறோம்? பல நேரங்களில் சகமனிதர்களின் புலம்பல்கள் புதிராய் இருக்கின்றன. மணித்துளிகளைப் பணித் துளிகளாகவும், பணத் துளிகளாகவும் மாற்றி வாழ்ந்தது போதும். மனத் துளிகளை ரசிக்கவும் இனி நம் காலத்தைச் செலவிடலாமே.
ஒரு சிறு நலம் விசாரிப்பு, ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு உதவி என மலர்ச்சி மயமாக்கலாமே! உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்தலின் அடையாளமாகாது. புன்னகையோடு தொடங்கும் நாள் மலர் மணத்தோடு இரவில் உறங்கச் செல்கிறது. கவலை மறந்த மனங்களில்தான் இறைவன் இருக்கிறான்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவரின் நெறி அற்புதமானதன்றோ!
சிரிக்க மறந்த நாள் இப்புவியில் வசிக்க மறந்தநாள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நல்லதை விதைத்திருந்தால் நல்லதே அறுவடையாகும். அன்பிற் சிறந்ததவமில்லை என்றார் பாரதி. அன்பை விதைத்து, உள்ளதைச் சொல்லி, நல்லதைச் செய்து ரசித்து வாழ்வோம்.

No comments:

Post a Comment