Wednesday 10 November 2021

பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.

 பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.

குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.
“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்”
என்றான் வள்ளுவன்.
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.
பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.
இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.
ஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
அர்த்தமுள்ள இந்து மதம்.. துன்பம் ஒரு சோதனை..
ஆசிரியர்.. கண்ணதாசன்.

No comments:

Post a Comment