Wednesday 17 November 2021

இருப்பதும் இல்லாததும்.

 இருப்பதும் இல்லாததும்.

ஒருவர் தன்னைப் பற்றி மிகவும் தாழ்வான முறையில் சிந்தித்து, ‘நான் ஒன்றுக்கும் உதவாதவன்’ என்று எண்ணிச் செயல்பட்டால், அவரிடம் ‘தாழ்வு மனப்பான்மை’ (Inferiority Complex) இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அதேபோல், ஒருவர் தனது தகுதிக்குமீறி தன்னை மிகப்பெரியவராக மதிப்பீடுசெய்து செயல்பட்டால், அவரைத் ‘தற்பெருமை கொண்டவர்’ என இந்தச் சமுதாயம் முத்திரை குத்திவிடும்.
தன்னை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்வதும், மிக உயர்வாக எண்ணி ‘தற்பெருமை’ கொள்வதும் ஒரு மனிதருக்கு நிச்சயமாக பிரச்சினையை உருவாக்கும்.
பெரும்பாலும், வாழ்க்கையில் ‘நீயா? நானா?’ போட்டி ஏற்படுவதற்குக் காரணமாக ‘தற்பெருமை’ அமைந்துவிடுகிறது.
தற்பெருமைக்கும்(ego), சுய மதிப்பிற்கும் (Self Esteem) இடையே வேறுபாடுகள் உள்ளன.
ஒருவர் தனது சுயமதிப்பை மிகவும் தேவைக்கு அதிகமாக உயர்வாகக் காட்டிக் கொள்வதை ‘தற்பெருமை’ என அழைப்பார்கள். இது பல எதிர் விளைவுகளையும் (Negative Effects) ஏற்படுத்திவிடும்.
ஒருவர் தன்னை மதிப்பிட்டு இயல்பான மதிப்புடன் கருதிக்கொள்வதை ‘சுய மதிப்பு’ என குறிப்பிடுவார்கள்.
இயல்பாக ஒருவர் சுய மதிப்புடன் செயல்படும்போது பிறருக்கும், அவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுவது குறையும்.
பொதுவாக, தற்பெருமை கொள்பவர்கள் தன்னை எல்லோரும் எப்போதும் மதிக்க வேண்டும் என்றும், முக்கியமானவராக கருத வேண்டும் என்றும் விரும்புவார்கள். இதனால், நம்பிக்கை இழந்தவர்களாகவும், தனது பெருமைகளைப் பற்றியே பேசிக்கொள்பவர்களாகவும் மற்றவர்கள் கண்களுக்கு இவர்கள் தெரிவார்கள்.
‘மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும்’ என ஒருவர் விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எப்போதும் தன்னை மற்றவர்கள் உயர்வாகக் கருதி துதி பாடி, பாராட்டிப் புகழ வேண்டும் என நினைப்பதால்தான், தற்பெருமை கொண்டவர்கள் நிம்மதி இழந்து காணப்படுகிறார்கள்.
தற்பெருமை கொள்பவர்கள் பல நேரங்களில் வீண் பெருமை பேசுவார்கள். எப்போதும் பொறுமை இழந்தவர்களாகக் காணப்படுவார்கள். அடுத்தவர்களைப் பற்றி அடிக்கடி குறைசொல்லும் மனப்பாங்கோடு இருப்பார்கள். தான் செய்த தவறுக்கு தப்பித் தவறிக்கூட மன்னிப்பு கேட்கும் மனநிலை இல்லாதவர்களாக இருப்பார்கள். வீண் விவாதம் செய்வதை வாடிக்கையாக்கி மகிழ்வார்கள். அடுத்தவர்களிடம் சண்டை போடுவதை பொழுதுபோக்காக நினைப்பார்கள். இத்தகைய குணம் கொண்டவர்களிடம் சற்று எச்சரிக்கை உணர்வோடு பழகுவது நல்லது.
தன்னைப் பெருமையோடு நினைப்பதும், தனது பெருமைகளை பிறரோடு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பகிர்ந்து கொள்வதும் ‘தற்பெருமை’ ஆகாது. ஆனால், அதேவேளையில், தன்னிடம் இல்லாத திறமையையும், தன்னிடம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, மிகைப்படுத்தி வெளிப்படுத்தும்போது, ஒருவரின் ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’ குணத்தை மற்றவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.
இத்தகைய ‘தற்பெருமை’யைத் தவிர்க்க முயற்சி செய்வதின் மூலம், நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் ஏராளமாக பெற்று நிம்மதியுடன் சிறப்பாக வாழலாம்.

No comments:

Post a Comment