Saturday 27 November 2021

கவனம் சிதறாமல் இருக்கட்டும்.

 கவனம் சிதறாமல் இருக்கட்டும்.

வாழ்வில் வெற்றி பெறுவதன் மறைபொருள்(இரகசியம்) என்ன...? வாழ்க்கையை மனத் திண்மையோடு அதன் போக்கில் எதிர்கொள்ளுதலே வாழ்வில் மறைந்திருக்கும் மறைபொருளும் அதைத் தொடர்ந்து வரும் வெற்றியும்...
நாளும் நாம் செய்யும் நம் வேலைகளில் எது முதன்மையானது...? எது அதன் பின் வருவது...? என்று வரிசைப்படுத்தி நம் மனதைக் குவித்து ஈடுபட பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...
இது நடக்குமோ?, நடக்காதோ! என்கிற எதிர்மறை எண்ணங்களை அறவே ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்...
இது தொடர்பாக ஒரு கதை இதோ...
கருவுற்றிருந்த மான் ஒன்று பிரசவிப்பதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்து, ஒரு நதிக் கரையில் அடர்ந்த புல்வெளியொன்றைத் தேர்ந்தெடுத்தது...
அது பாதுகாப்பான இடமாக அதற்குத் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்ததும் அதற்குப் பிரசவ வலியும் ஆரம்பித்து விட்டது...
வலியினூடே அக்கம் பக்கம் நோட்டம் விட்டது...
இடதுபக்கம் ஒரு வேடன் கையில் வில் அம்புடன் மானைக் குறி பார்த்தபடி நிற்கிறான்...
வலது பக்கம் பசியோடு ஒரு சிங்கம் எந்த நேரத்திலும் மானின் மேல் பாயத் தயாராக இருந்தது...
தலைக்கு மேலோ கருமேகங்கள் சூழ்ந்து பளீரென ஒரு மின்னல் தாக்க உடனே காட்டு மரங்கள் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டது...
கருவுற்றிருக்கும் மானால் என்ன செய்ய முடியும்...? அதுவோ பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது...
இப்போது என்ன நடக்கும்...? மான் பிரசவித்து ஒரு குட்டி மானை ஈனுமா...? அந்த குட்டி மான் உயிர் பிழைக்குமா...?
இல்லை!, காட்டுத்தீ எல்லாவற்றையும் எரித்து விடுமா...? இல்லை!, வேடனின் அம்புக்கு மான் இரையாகிவிடுமா...? ஒரு வேளை சிங்கத்துக்கு பலியாகி மாய்ந்து விடுமா...?
மான் அந்த விநாடியில் தான் என்ன செய்யவேண்டும் என்பதை உடனே தீர்மானிக்கிறது...
எதைப் பற்றியும் அஞ்சாமல், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முடிவு செய்து, எந்தவித எதிர்மறை எண்ணங்கள் தன்னை அணுக விடாமல் தன் முழுக் கவனத்தையும் பிரசவிப்பதில் செலுத்தி அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது...
அடுத்த விநாடி, அடடா!, என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன அந்தக் காட்டில்...
மற்றொரு மின்னல் அடிக்க, வேடனின் கண் பார்வை பறி போகிறது. அவனுடைய குறி தவறி சிங்கத்தின் மேல் அம்பு பாய சிங்கம் பரிதாபமாக மாய்ந்து போகிறது...
கருமேகங்கள் குவிய பெருமழை ஆரம்பிக்கிறது. காட்டுத் தீ மெதுவாக அணைந்து போகிறது.
ஆம் நண்பர்களே.
சக்தி வாய்ந்த நேர்மறை எண்ணங்கள் ஆபத்தான தருணங்களிலும் நம்மை எவ்வாறு வழி நடத்தி நம்மைப் பாதுகாக்கின்றன என்பதற்கு அந்த மான் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது.
படிப்பு, அலுவலக வேலை, வீட்டு வேலை எதுவாக இருந்தாலும் சரி கவனம் சிதறாமல் ஒன்று குவிக்கப்பட்ட மனம் மட்டுமே தேவை.
அந்த நேரத்தில் நம் கையில் இருக்கும் செயலில் நாம் முனைப்போடு முழுக் கவனத்தோடு செயல்பட்டோம் என்றால், அந்த ஈடுபாடே நமக்கு முழு நம்பிக்கையைக் கொடுத்து அந்தச் செயல் வெற்றி பெற உதவும்.
இதை நாம் அந்த மானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment