Saturday 20 November 2021

வெற்றிக்குத் தேவை

 வெற்றிக்குத் தேவை

இரு சொல் உத்தி-
'உழைப்பும் பிழைப்பும்'.
இதில் முதல் உத்தியான உழைப்பு ஒன்றே வெற்றியைக் கொடுக்கும். நீடித்த திட்டமிட்ட உழைப்பு ஒன்றேதான் வெற்றியை உறுதி செய்யும். அதற்கு மாற்று வழி ஏதும் கிடையாது. குறுக்கு வழியும் கிடையாது. கனவு காணுங்கள். ஆனால் கனவு காண்பது மட்டும் வெற்றியை எட்டிப் பிடிக்க போதுமானதன்று. கனவை நனவாக்க தேவையான வினைகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும்.
அந்த வினைகளைத் திட்பமாக்காமல் வாகை சூடுவது இயலாது. அதில் தொய்வு ஏற்பட்டால், கண்ட கனவு கலைவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு கனவு கலைந்தால் அதனை விட பெரிய கனவை எட்டும் வழிகள் பலஉண்டு என்பதை உணரவேண்டும். கலைந்த கனவை நினைத்து சோர்ந்து போய்விடாமல் மாபெரும் கனவை எட்டுவதற்குரிய வாயப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளை தேடிப் போக வேண்டும்; அல்லது கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்திக் வேண்டும்.
இரண்டாவது உத்தியான 'பிழைப்பு' என்பது கொண்ட குறிக்கோளில் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கண்ட கனவிற்காகவே பிழைத்திருப்பது. உயிர் வாழ்வதை மட்டும் குறிப்பதன்று. அது தோல்விகளைத் தாண்டி இலக்கை நோக்கிய பயணத்தில், அதனை எட்டுவதற்காகவே பிழைத்திருப்பது.
அனுபவத்தைப் பொருத்த வரை தோல்விகளைத் தடைகளாகப் பார்க்கத் தேவையில்லை. அவற்றை ஒரு மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும் அவை தொடர்ச்சியாக வருவதில்லை. ஒரே வடிவத்திலும் வருவதில்லை. ஒரு தடையைக் கடந்த உடன், புதியதடை(கள்) வேறுவடிவத்தில் வருகின்றன. அவ்வாறு தொடர்ந்து வந்தாலும், அவை வேறு ஒரு வெற்றியை எதிர்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றன. அடுத்து வரும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிகாட்டியாகவே அமைகின்றன.
இங்கு, தடைகளைத் தாண்ட முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற முக்கியக் கேள்வி எழுகிறது. அதற்கு உண்மையான நேர்மையான விடை என்ன வென்றால், முதல் உத்தியைக் கையில் எடுப்பதுதான். அதாவது கடினமாக உழைப்பது தான். இவற்றிற்கு மாற்றான வழிகளோ, குறுக்கு வழிகளோ ஏதும் கிடையாது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்கான மனப் பக்குவத்தை அடைவது மிகமுக்கியமானது. அந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எந்த இலக்கையும் எட்டிவிடலாம்.

No comments:

Post a Comment