Friday 26 November 2021

அமைதியும் காத்திருப்பும்.

 அமைதியும் காத்திருப்பும்.

மனதில் மிகுந்த கவலையும் பயமும் குழப்பமும் நிறைந்த ஒருவர் புத்தரைக் காண வந்திருந்தார்.
“குருவே,என் மனது அதிகமான கவலைகளாலும் பயத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருக்கிறது எவ்வளவு தீவிரமாக முயன்றும் அமைதியாக்க முடியவில்லை.இதை அமைதியாக்க ஏதேனும் வழிமுறைகளை எனக்கு கூறுங்கள்.”என புத்தரிடம் பணிந்தார் வந்தவர்.
“நீங்கள் பத்து நாட்கள் ஆசிரமத்தில் தங்கவேண்டும்”எனக் கூறினார் புத்தர்.
ஒருநாள் ஆசிரமத்திற்கு அருகே உள்ள குளம் ஒன்றில் குரங்குகள் விளையாடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் மரத் துண்டுகளை உடைத்தெறிந்து கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்த புத்தர் தனக்கு குளத்திலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறினார். குளம் அருகே சென்ற சீடர் நீர்நிலை களங்கி இருப்பதைக் கண்டு களங்கிய நீரைக் குருவுக்கு எவ்வாறு கொடுப்பது என ஆலோசித்துவிட்டு தண்ணீர் எடுக்காமல் ஆசிரமத்திற்கு திரும்பினார்.
வெறும் கையோடு திரும்பி வந்தவரை “ஏன் தண்ணீர் கொண்டு வரவில்லை?” என வினாவினார். தண்ணீர் களங்கி இருந்ததை விளக்கினார் சீடர். மீண்டும் “சென்று தண்ணீர் எடுத்து வா”எனக் கூறினார் புத்தர்.
குளத்தருகே சென்றவர் தண்ணீர் தெளிவதற்காக காத்திருந்தார்.சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் தெளிந்திருந்தது.மண்பானையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு மடத்திற்கு திரும்பலானார்.
“குளத்தில் தண்ணீர் தெளிவதற்காக நீ என்ன முயற்சி செய்தாய்?” திரும்பி வந்தவரிடம் புத்தர் வினாவினார்” நான் சிறிது நேரம் காத்திருந்தேன் தண்ணீர் தானாகவே தெளிந்தது பிறகு தண்ணீர் நிரப்பிக்கொண்டு திரும்பினேன்”
எனப் பதிலளித்தார் வந்தவர்.
“நீ தேடி வந்தபிரச்சனைக்கான தீர்வு உனக்கு கிடைத்துவிட்டது” என பதிலளித்தார் புத்தர்.
“என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தயவுகூர்ந்து விளக்கமாகக் கூறுங்கள்” என்று பணிவுடன் கேட்டார் வந்தவர்.
“எப்பொழுதெல்லாம் உன் மனது அதிகமான கவலைகளாலும் பயத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருக்கிறதோ அப்போதெல்லாம் மனதை அடக்க தீவிரமாக முயலாதே! சிறிது நேரம் அமைதியாக காத்திரு! அமைதி தானாகவே உனக்குள் ஊடுறுவும்.மனம் தனது இயல்பு நிலையான அமைதியையும் சாந்த நிலையையும் தானாகவே அடையும். மேலும் உனது தீவிரத்தன்மையே உனது அமைதிக்கு எதிராக அமைவதை உன்னால் தவிர்க்கமுடியும்”என சாந்தமாக விளக்கினார் புத்தர்.
நன்றி கூறும் வகையில் கைகூப்பி வணங்கி மௌனமாக நகர்ந்தார் வந்தவர்.

No comments:

Post a Comment