Saturday 20 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கரோனா காலத்திலும் ஆரோக்கியத்துடன்
இன்று
102 ஆது பிறந்தநாள் காணும் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுமணியகாரர்.
உலகமே கொரனா தொற்றினால் பாதிப்புற்று வரும் வேளையில் அதுவும் முதியோர்கள் அதிகமானார் பாதிக்கப்படும் இச்சூழ்நிலையில் எவ்வித பதட்டமுமின்றி நோய்நொடியுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தனது 102 வயதினை தொட்டுள்ளார் முதிய இளைஞர் பொன்னுமணியகாரர்.
இன்றும் திடகாத்திரமாக,மனோ வலிமையுடன் தனது மனைவி 87 வயதான கண்ணம்மாளுடன் தேவையம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் வசித்து வரும் இவர் 1918 இல் பிறந்தார்.தனது அனைத்து அன்றாட பணிகளை தானே செய்து கொள்ளும் இவர் பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளியில் முடித்த இவர் பின்னர் குன்னூரிலுள்ள தனியார் பள்ளியில் சேர்பிக்கப்பட்டார்.
அப்போது அங்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்த காந்தியடிகளைச் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.அப்போது காந்தியடிகளின் சுற்றுப்பயணத்திற்கு பொறுப்பேற்ற சுதந்திரப்போராட்ட தியாகியும்,ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவனருமான தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாருடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அவருடன் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பெரியநாயக்கன்பாளையத்தில் பூமிதான இயக்கம்,தீண்டாமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஈடுபட்டார்.
அப்போது வித்யாலயத்திற்கு வருகை தந்த வினோபாஜி,ஆச்சார்யா கிருபளானி,ஜெயபிரகாஷ் நாராயணன்,பாபு ராஜேந்திர பிரசாத்,லால் பகதூர் சாஸ்திரி,பத்வத்சலம்,காமராஜர்,சர்தார் வேதரத்தினம் பிள்ளை,சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகியவர்.காந்திய நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட இவர் நேபாளம் மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சென்று கிராமப்புற வளர்ச்சிப்பணிகள் குறித்து அறிந்துள்ளார்.தனது ஆரோக்கியத்திற்கு சைவ உணவுதான் முக்கிய காரணம் என்று கூறும் இவர் 1960 முதல் நாயக்கன்பாளையத்தின் மணியகாரராக நியமிக்கப்பட்டார்.
அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அறம் அவர்களின் உதவியுடன் தொடக்க,உயர்நிலைப்பள்ளிகள்,சர்வோதயா இல்லங்களை கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளார்.கோவையில் விவசாயிகள் மாட்டுவண்டி போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டு சுமார் 1 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.இந்திய சீன யுத்தத்தின்போது தனது பென்சன் தொகையை அரசுக்கே திருப்பித் தந்த இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்வை குறைபாடிற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இன்றும் தன்னை சந்திப்பவர்களை உடனடியாக கண்டுகொள்ளும் இவர் தனது வீட்டு வளாகத்திலே ஆதரவற்றோர் இல்லத்தையுடன் நடத்தி வந்தார்.இதில் படித்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று அரசின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர்.
தனது 102 வயதை தொடும் இவரிடன் தற்போதைய கரோனா நிலை குறித்து கேட்டபோது.கோவை மலேரியா நோய் பரவலால் பாதிக்கப்பட்டபோது அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.கோவையில் வசித்த பலர் அந்நோய்க்கு பயந்து பெரியநாயக்கன்பாளையத்தில் குடியேறினர்.பொதுவாக இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடித்தால் கரோனா மட்டுமல்ல. எவ்விதநோய் கொடிய நோயும் நம்மை அண்டாது.குறிப்பாக புலால் மறுத்து,சிறுதானிய உணவுகள்,இயற்கை காய்கறிகள்,மஞ்சள்,கருமிளகு,சீரகம் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் எவ்வளவு வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
முதியோர்களுக்கு மனோவலிமை முக்கியம்.மனதில் இளமையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.தனக்கு எந்த இடர்பாடும் நேராது என்ற தைரியம்,நல்ல உறக்கம்,தன்பணிகளை தானே குறித்த நேரத்திற்கு செய்தல் போன்றவை நம் உடலை நல்ல முறையில் பேணுவதற்கு உதவியாக இருக்கும்.வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் மட்டும் உண்டு.புகையிலை சேர்க்க மாட்டேன்.மற்றபடி எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லை.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேல் பெ.நா.பாளையம் வட்டாரத்தில் உள்ள கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டேன்.அதுதான் எனக்கு மனநிம்மதி என்றார்.
பல்வேறு தொற்றுநோய்களினால் இளம் வயதினரே பாதிக்கப்படும் இந்த நவீன சூழ்நிலையில் இன்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையினால் 102 வயதிலும் நல்ல உடல் திறனுடன் இருக்கும் பொன்னுமணியகாரர் போன்றவர்கள் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கத்தக்கவர்களே என்றால் அதுமிகையில்லை.
ஆசி பெறுவோம்.
- தினமணி விஜயகுமார்.

No comments:

Post a Comment