Saturday 20 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மறப்போம்... மன்னிப்போம்..*
வெள்ளத்தின் அளவுப் படி மலர் உயர்வது போல, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நல்ல
எண்ணத்தின் அடிப்படையில் உயர்வு பெறுகிறான்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணைய துயர்வு
பொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்குகேடுகளை விடுத்தால் அறம்
உருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம்,மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும். எல்லாசமயங்களும் இப்பண்பையே மனித குலத்தில் உயர் பண்பாக கூறுகிறது. அறம் என்பது எழுதப்பட்டசட்டங்களில் இல்லை. கூறப்பட்ட மறைகளில் இல்லை. வாழும் வாழ்வின் ஆதாரத்தில் உள்ளது என்று இந்து சமயம் கூறுகிறது.
அன்பையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறியும் பண்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மகரயாழ் இறைவன் அனைத்து உயிரிடத்தும், பெற்றோர் பிள்ளைகளிடத்தும், காட்டும் அன்பில் பிழைஇருக்காது. தவறே இழைப்பினும் மறந்து, மன்னித்து விடும் பண்பு
நிறைந்திருக்கும். அன்பு என்னும் அச்சாணியைப் பற்றினால்
மன்னிக்கும் குணம் தானாக வந்தடையும். ஒவ்வொரு குழந்தை யும் முதலில் காணும் உலகம்
பெற்றோர்கள். பெற்றோர்களிடம் இருந்து ஆதார பண்புகளை கண்டு அறிந்து கொள்கிறது. ஆகையால் பெற்றோரே குழந்தைகளுக்கு அன்பு எனும் காற்றை சுவாசிக்க கற்றுத்தர வேண்டும்.
மறப்போம், மன்னிப்போம் என்னும் பண்பை முன்னுறுத்தினால், நல்ல சமுதாயத்தை
உருவாக்கலாம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறுவது போல், உயிர்களுக்கு உருகும் உள்ளம் இருந்தால், அங்கே ஊற்றுக் கண்ணாய் அன்பு சுரக்கும். உதடு எனும் கதவை, தேவையின்றி திறக்காமல் இருந்தால் பலஇன்னல்களிலிருந்து விடுபடலாம்.சகுனி, கூனி இருவருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற நற்குணங்கள் இல்லாமையாலும், பயனில்லா சொற்களைகூறியதாலும் இரு மாபெரும் யுத்தங்கள் ஏற்பட்டது.
திருமூலர் மனதில் உள்ளேவுள்ள மங்கல விளக்கு ஒளி பெற சினம் எனும் நெருப்பை விரட்ட வேண்டும் என்றார். காலச்சூழல், இடச்சூழல், புறச்சூழல் என பல சூழல்களினால் மனதில் பல இன்னல்கள் தோன்றினாலும் அன்பு எனும் குணம் விரிந்தால் போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பு மலரும்.மலரில் மணமும், காற்றின் அசைவும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும், பாடலில் பண்ணும், உறவில் வாழ்வும் போல மறப்பதில் மன்னிப்பும் அடங்கியுள்ளது.
முனைவர் ச.சுடர்க்கொடி

No comments:

Post a Comment