Monday 15 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...
எங்கேயிருந்து வருகிறது மகிழ்ச்சி
மகிழ்ச்சி.... தேடுதல்கள் நிறைந்த மனித வாழ்க்கையில் மனிதனால் இன்றுவரை, முழுமையாக தீர்வு காணாத விஷயம் மகிழ்ச்சி. மனதை மகிழ்ச்சிப்படுத்துவது எப்படி? என்பதை விட கிடைத்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வது எப்படி எனஎல்லா மனிதர்களிடமும் இந்தத் தேடல் நீளுகிறது.
பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரணி எனில், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் புத்தர் தேடியதற்கான காரணம் என்ன? இன்று கூட பொருளாதாரம் சார்ந்த வசதிகளில் பெரும் நிறைவு கொண்ட நோய்வாய்ப்பட்டவர்களிடமும், முதியோர் இல்லத்திலுள்ளவர்களிடமும் 'உங்களிடம் மகிழ்ச்சி உள்ளதா? என்று கேட்டால், 'இல்லை' என எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள். எனவே மகிழ்ச்சிக்கு பொருளாதாரமும் பணமும் அவசியமல்ல. அப்படி இருக்க எதுதான் மகிழ்ச்சி, எப்படித்தான் அதை தக்கவைத்து கொள்வது என்ற தேடல் இன்றுவரை இருந்துவருகிறது
இன்று வேலை கிடைத்தது, இன்று புதுவீடு கட்டினேன், இன்று கார் வாங்கினேன், இன்று புது உடை உடுத்தினேன் என அன்றன்று கிடைத்த, நம்மால் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் அந்நாளின் மகிழ்ச்சி. அடுத்த நாளோ அடுத்த வாரமோ அவை பெரும் மகிழ்வை தருவதில்லை. உதாரணமாக, அன்று வரை கார் வாங்க வேண்டும் என்பதை என் மகிழ்ச்சிக்கு உரிய நிகழ்வாக பார்த்த நாம், கார் வாங்கிய பிறகு வேறு ஒரு இலக்கால் மகிழ்ச்சியை அடைய நினைக்கிறோம். மகிழ்ச்சிக்கு இறுதி இலக்கே இல்லை. இப்படி மகிழ்ச்சியைத் தேடும் காரணிகள் மனித வாழ்வில் மனம் மாறிக்கொண்டே போகிறது என்பதே உண்மை. அதனால்தான் தான் மகிழ்ச்சியடைந்த தருணங்களை புகைப்படங்களாக்கி நினைவுறுகிறோம்.
நம் மனம் எந்த நேர்மறை எண்ணத்தை முழுமையாக ஏற்று சுற்றியுள்ள நிகழ்வுகள் அனைத்தையும் மகிழ்ச்சியின் காரணிகளாக நினைக்கிறதோ அந்த நேர்மறை எண்ணம்தான் மகிழ்ச்சியை கொடுக்கும் சக்தி.
தினசரி நம் வாழ்வில் எவ்வளவு மன நிறைவுடன் இருக்கிறோம், நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியையும் உணரமுடியும். ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதியான மனமும் நிறைவும் பெரும்பாலும் மாறாத வகையில் இருந்தால் அதுவே மகிழ்ச்சியை தரவல்லது.
வாழ்வில் சுறுசுறுப்பு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான மனநிலை, சுகாதாரமான சுற்றுப்புறம், நகைச்சுவை உணர்வு, உண்மையான உறவுகள், அளவான செல்வம், பிறர் நலம் பேணுதல், போன்ற எல்லா காரணிகளும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. அப்படியாகப்பட்ட மகிழ்ச்சிதனை தன் வாழ்வில் பெறுவது மற்றுமின்றி பிறரையும் மகிழ்விப்பதுதான் மகிழ்வின் உச்சமே.
மனநிறைவுடன் நேர்மறை எண்ணங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment