Tuesday 23 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தோல்விகள் சொல்லும் பாடம்
பத்தாவது முறையாகக் கீழேவிழுந்தவனைப் பார்த்துபூமி முத்தமிட்டு சொன்னதுநீ
ஒன்பது முறை எழுந்தவன் என்று”உண்மைதான்!
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்கு அல்ல என்பதே தோல்விகள் நமக்குச் சொல்லும் பாடம்.
தடைப்படும் இடங்களில் தளராது வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போல விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்பட்டு விலகிப் போகும். எருதினைப் போன்ற முயற்சி உடையவர்கள், தோல்விக்கே தோல்வி தந்து விடுவார்கள். நமது முயற்சிகளுக்கு தோல்விகள் என்றும் தடைபோடக் கூடாது. முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம், தோல்வியால் தான் சூழப்பட்டிருக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி யாருக்கும் சாத்தியப்படாது. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல, ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு!
தோல்வி தாங்கும் மனம்: தோல்வியே ஒருவர் அடைந்ததில்லை என்றால் அவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் என்று தான் அர்த்தம். நாம் நடக்கும் பாதை மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக் கூட மிதிக்கக் கூடாது என்று நினைப்பதில் அர்த்தமில்லை. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் என்பதை உணரவேண்டும்.
தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு வேறு பாதையை ஆராய வேண்டும். வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். ஏனெனில் வெற்றி சிரித்து மகிழ வைக்கும். ஆனால் தோல்வியோ சிந்தித்து வாழ வைக்கும். பெரும்பாலானோர் வாழ்வில் திருப்பு முனை என்பது தோல்வியின் வடிவில் தான் வந்திருக்கிறது. அவற்றை நமது மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாகவே நினைத்தால், தோல்விகளால் நமக்கு பயன் உண்டு என்பதை உணரலாம்.
பாடம் கற்கலாம்: நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். மகரயாழ் தோல்வி என்னும் நேற்று மடிந்த வைக்கோல், இன்று நல்ல எருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்தால், தோல்வி என்பதை வரவேற்கலாம் அல்லவா!
விதையானது தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலை தாம் விழுந்தாலும் உரமாக ஆவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்குத் தயங்கலாமா? விழுவோம்! எழுவோம்!
நன்றி
பா.பனிமலர்,

No comments:

Post a Comment