Thursday 7 March 2024

எந்தச் சுயநலமுமில்லை . .

 எந்தச் சுயநலமுமில்லை . .

அக்பரின் அரச சபையில்
தான்சேன் என்ற திறமையான
பாடகர் ஒருவர் இருந்தார். இவர் *ஹரிதாஸ் சுவாமி* அவர்களின் சீடராவார்.
இந்த தான்சேன் என்பவர் பாடும் பொழுதெல்லாம் அக்பர் தன்னிலை மறந்து விடுவார். அந்த அளவுக்கு அவரது பாடல் மிகவும் இனிமையாக இருக்கும்.அரசர் தான்சேன் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார்.
ஒரு நாள் மன்னர் நகர் வலம் வரும் பொழுது, தான்சேனையும் உடன் அழைத்துச் சென்றார். செல்கிற வழியில் தான்சேன் அவர்களின் குருவாகிய ஹரிதாஸ் சுவாமிகளின் இல்லம் இருந்தது. எனவே தான்சேன் அவர்கள் தன் குரு நாதரை வணங்கி ஆசி பெற்றுச் செல்லலாமே என்று அக்பரை அழைத்தார். மன்னரும் சம்மதிக்கவே, இருவரும் ஹரிதாஸ் சுவாமிகளின் இல்லத்திற்குச் செல்கிறார்கள்.
அங்கே அவர் இறைவனை நினைத்து மிக இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார். இவர்கள் வந்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னிலை மறந்து பாடிக் கொண்டிருந்தார். இசைப் பிரியரான அக்பர் ஹரிதாஸ் சுவாமிகளின் பாடலில் கட்டுண்டு,
மெய் மறந்து போனார்.
ஒரு கட்டத்தில் அக்பர் தான்சேனிடம் உங்கள் பாடல்கள் மிகவும் உன்னதமானவைதாம். என்றாலும் உங்கள் குருநாதரின் அளவுக்கு உங்கள் பாடல் இல்லையே என்று கேட்டார்.
அதற்கு தான்சேன்
என்ன சொன்னார் தெரியுமா.
''மன்னா நான் உங்களை சந்தோசப்படுத்துவதற்காகப் பாடுகிறேன்.
என் முயற்சியில் சுயநலம் இருக்கிறது. ஆனால், என் குருநாதரோ
இறைவனை நினைந்து, ஏங்கிப் பாடுகிறார். அவரிடத்தில் எந்த சுயநலமுமில்லை.
ஒரு தாயைப் பிரிந்த குழந்தையின் நிலையில் நின்று கொண்டு, உண்மையான அன்போடு, ஏக்கத்தோடு பாடுகிறார். எனவே அவர் பாடலில் உண்மைத் தன்மையும், களங்கமற்ற அன்பும் வெளிப்படுகிறது.
இதனால்தான் எங்கள் இருவரின் பாடல்களின் தரமும் வேறுபடுகிறது என்றார். அக்பர் பிரமித்துப் போனார்.
ஒளியா, இருளா, இன்பமா, துன்பமா நிலையானதா, நிரந்தரமற்றதா எது வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
*நோக்கம் மாறும் பொழுது, பயனும் மாறி விடுகிறது.*

No comments:

Post a Comment