Saturday 2 March 2024

மதுரை வரை நீளும் கடத்தல் நெட்ஒர்க்; ஒரே நாளில் சிக்கிய ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருள்!

 மதுரை வரை நீளும் கடத்தல் நெட்ஒர்க்; ஒரே நாளில் சிக்கிய ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருள்!*

👇🏾👇🏾
மதுரை வந்த ரயில் பயணியிடமும், அதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள அவர் வீட்டிலும் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு குஜராத் கடல் பகுதியில் இரானிலிருந்து கப்பல் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்து, அது தொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தி.மு.க நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது, ஜாபர் சாதிக் தலைமறைவானார். சென்னையில் ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மதுரை கே.கே.நகர் பகுதியில் தமீம் அன்சாரி என்பவர் வீட்டில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த அருண் மற்றும் அன்பு ஆகியோர், தன் வீட்டில் இந்த போதைப்பொருள்களை வைத்துச் சென்றதாகக் கூற, அவ்விருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடிவருகின்றனர்
இந்த நிலையில்தான், பொதிகை எக்ஸ்பிரஸில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக (DRI) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் இரண்டு பேக்குகளுடன் பயணித்த சென்னை, தேனாம்பேட்டை அபிராமி அவென்யூவைச் சேர்ந்த சேர்ந்த பிள்ளமண்ட் பிரகாஷை டி.ஆர்.ஐ அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்து, மதுரை ரயில் நிலையத்தில் பிடித்தனர்
அவரிடமிருந்து கைப்பற்றிய இரண்டு பேக்குகளிலும் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய வருவாய்ப் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் பிரகாஷை மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், தன்னுடன் தொடர்புகொண்ட ஒருவர் இப்பொருள்களை ரயிலில் மதுரைக்கு எடுத்துச் சென்றால் பணம் தருவதாகக் கூறியதால், எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கடத்தக்கூடிய போதைப்பொருள்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து போதைப்பொருள்களைக் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டு, சர்வதேச போதைப்பொருள் கும்பல் போதைப்பொருள்களை தமிழகத்தில் பதுக்கி வருகிறதா? என்ற அடிப்படையிலும் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்கின்றனர்.
குறிப்பாக மதுரையில் அடுத்தடுத்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது, மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் அடையாளம் தெரியாத நபர்கள் மூலம், மதுரையை மையமாக வைத்து போதைப்பொருள் கடத்தியுள்ளனர்.
இது குறித்து சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் சுமார் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சம்பந்தப்பட்ட பயணி அடையாளம் காணப்பட்டு அவரது உடமைகளை பரிசோதித்ததில், மொத்தம் 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில் வெள்ளை நிற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சோதனையிட்டதில் மொத்தம் 6 கிலோ எடையுள்ள 3 பாக்கெட்டுகளில் இருந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியாகும். இது தொடர்பாக அந்தப் பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment