Wednesday 16 February 2022

உயர்வு தாழ்வு என்பதே இல்லை

 உயர்வு தாழ்வு என்பதே இல்லை.

ஒரு நாள் நல்ல வெயில். சரவணன்,குடையை எடுத்துக் கொண்டு, காலில் செருப்பைப் போட்டுக் கொண்டு வெளியே சென்று வந்தான்.
வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்துச் சென்றான்.
அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து
நீ என்னை விடத் தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்துச் செல்கின்றனர்' என்றது. செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
அடுத்த நாள் நல்ல மழை.வெளியே சென்று விட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட... குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..
உடன் செருப்பு சரவணனைப் பார்த்து, சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்,குப்பை,சகதி,கல் ஆகியவற்றில் இருந்தும் நான் காக்கிறேன் ..
ஆனால் என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. ஆனால் தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்துச் செல்கிறாயே? என வருந்தியது.
உடனே சரவணன்,
"செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.
இந்த உலகத்தில் எந்தப் பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி... அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.
ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது நீங்களும் சரி.. மக்களும் சரி ஒருவருக்கொருவர்....
இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.
உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்துப் பார். உனக்குத் திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன்படும்.
ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.
பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட
நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.
ஆம் நண்பர்களே
நாமும், பிறருக்குப் பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து நம் கடமையை ஆற்ற வேண்டும்.
தவிர்த்து நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற பேதம் தேவை இல்லை.
ஒவ்வொருவரும்... ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே.

No comments:

Post a Comment