Friday 25 February 2022

கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி

 ‘கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி...

Vikatan
Government And Politics
Election
Published:Today at 5 AM Updated:Today at 5 AM
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க-வில், ‘வார்டுக்கு 60 லட்சம் வரை இறக்கலாம்’ என்று முடிவு செய்திருந்தன.
“கோட்டையைப் பிடித்தாலும் கோவையைப் பிடிக்க முடியவில்லையே...” என்ற ஆதங்கம் குறையாமலிருக்கிறது தி.மு.க. மறுபக்கம், கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றிய அ.தி.மு.க., தன் இடத்தைத் தக்கவைப்பதற்காக எந்த விலை கொடுக்கவும் தயார் நிலையிலிருக்கிறது. இந்த இரு கழகங்களுக்கும் இடையிலான போட்டியால், `களேபர’ களமாகியிருக்கிறது கோவை. ஐபிஎல் டீம் ஏலத்தில் கோடிகள் புரளுவதைப்போல, கோவை மாவட்டத்திலுள்ள வார்டுகளில் இரண்டு கழகங்களும் ஏலம் எடுக்காத குறையாகப் பணத்தை வாரி இறைத்திருக்கின்றன. ‘கோவையைப் பிடிப்பது யார்?’ என்கிற ரேஸில், ‘கோவை ஃபார்முலா’ என்கிற மெகா உத்தியை இரு கழகங்களும் உருவாக்கியிருப்பதுதான், உள்ளாட்சித் தேர்தலைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது!
களமிறங்கிய கரூர் டீம்... வீதி வீதியாகப் பரிசுப்பொருள்கள்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களின்போது, சில்வர் குடம், ஹாட் பாக்ஸ், வேட்டி-சேலை, பாத்திரங்கள் எனப் பரிசுப் பொருள்களை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி கொடுப்பது வாடிக்கையான விஷயம். இது ஒருவகையில் தொண்டர்களிடமும் வாக்காளர்களிடமும் அக்கட்சி மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இதே பரிசுப் பொருள் ரூட்டை, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க கையில் எடுத்ததுதான் அ.தி.மு.க கூடாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. கோவை மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு, உள்ளூர் உடன்பிறப்புகளின் மனக்குமுறல்களையும் மீறி, டாஸ்மாக் பார் உட்பட அனைத்து வருவாய்களையும் கரூர் வழியில் இணைத்தார். அதற்குக் காரணம் புரியாத பலரும், ‘இதற்குத்தானா?’ என இப்போது விடை தெரிந்து வாய்பிளக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பரிசுகளும் கரன்சிகளும் இறங்கிக்கொண்டேயிருந்தன. வேலுமணியின் ஃபார்முலாவான பரிசுப்பொருள் ரூட்டைவைத்தே கோவை அரசியலைச் சூடாக்கிவிட்டார் செந்தில் பாலாஜி.
நம்மிடம் பேசிய கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர், “கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றிலுள்ள வார்டுகளை நிர்வகிக்க, கரூரிலிருந்து சுமார் 1,500 பேரைக் களமிறக்கினார் செந்தில் பாலாஜி. பூத் கமிட்டி, பிரசாரக்குழு, பட்டுவாடா என தி.மு.க அமைத்த அனைத்து டீம்களிலும் கரூர்க்காரர்கள் இணைக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க-வில், ‘வார்டுக்கு 60 லட்சம் வரை இறக்கலாம்’ என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், கரூர் டீம் களத்தில் இறங்கியதால், வார்டுக்கு ஒரு கோடி என எகிறியது. முதலில் ஹாட் பாக்ஸ் விநியோகத்தை இரண்டு கழகங்களும் தொடங்கின. தேர்தல் பறக்கும் படையால், பிடிக்கப்பட்ட ஹாட் பாக்ஸுகளே மூன்று லாரிகள் பிடிக்கும் என்றால், ‘எத்தனை ஹாட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டு, டெலிவரி செய்யப்பட்டிருக்கும்?’ என்கிற கணக்கு கிறுகிறுக்க வைக்கிறது.
தேர்தல் நெருக்கத்தில், பெண்கள் வாக்கைக் கவர, வெள்ளிக் கொலுசுகளை இறக்கியது தி.மு.க டீம். சுமார் 300 கிலோ கொலுசுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த அதிரடியால் ஆடிப்போன அ.தி.மு.க-வினரும் பல இடங்களில் கொலுசுகளைக் கொடுத்தனர். ‘அவர்கள் கொடுக்கும் கொலுசு தரமில்லாதது’ எனத் தரம் குறித்த சர்ச்சை வேறு ஓடியது. கோவை வீதிகளெங்கும் கொலுசுச் சத்தம்தான்.
ஒரு ஓட்டுக்கு 40,000 ரூபாய்... ஸ்டார் வார்டான வடவள்ளி!
பெரும்பாலான வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு தலா 1,000 ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வார்டுகளில் 5,000 ரூபாய் வரையிலும் இரண்டு கழகங்களிலிருந்தும் இறக்கினார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ‘ஆதரவு’ பெற்றவர் சந்திரசேகர். இவரின் மனைவி சர்மிளா, வடவள்ளி 38-வது வார்டில் போட்டியிட்டார். தி.மு.க-வில் பகுதிப் பொறுப்பாளர் சண்முகசுந்தரத்தின் மனைவி அமிர்தவல்லி களம் காண்கிறார். இரண்டு வேட்பாளர்களும் உறவினர்கள். மேலும், இருவருமே அந்தந்தக் கட்சியின் மேயர் ரேஸிலும் இருக்கிறார்கள். இதனால், அவர்களின் வெற்றி கௌரவப் பிரச்னையாகிவிட்டது.
இந்த வார்டில் தி.மு.க தரப்பில் 2,000 ரூபாய், ஹாட் பாக்ஸ், கொலுசு, ஆங்காங்கே வேட்டி சேலைகள் முதலில் இறக்கப்பட்டன. அதற்குப் போட்டியாக, அ.தி.மு.க தரப்பில் 3,000 ரூபாய் பணமும், கொலுசுக்குப் போட்டியாக 10 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டன. டென்ஷனான தி.மு.க தரப்பு, மேற்கொண்டு 2,000 ரூபாயை ஒவ்வொரு ஓட்டுக்கும் இறக்கியது. பதிலடியாக, அ.தி.மு.க-வும் கூடுதலாக 2,000 ரூபாய் கொடுத்தது. இப்படி இருவரும் சேர்ந்து ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் வரை கொடுத்தனர். அப்படியிருந்தும் போட்டி ஓயவில்லை.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், தி.மு.க தரப்பில் 10,000 ரூபாய்க்கான ‘QR CODE’ உடனான டோக்கன் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே, 20,000 ரூபாய் மதிப்பிலான டோக்கனைக் கொடுத்து, போட்டியை உச்சத்துக்குக் கொண்டுபோனது அ.தி.மு.க தரப்பு. இப்படி, 38-வது வார்டில் மட்டுமே ஒரு வாக்காளருக்குச் சுமார் 40,000 ரூபாய் வரை இறக்கப்பட்டிருக்கிறது. நான்கு வாக்காளர்களைக் கொண்ட குடும்பங்களெல்லாம், 1.60 லட்சம் ரூபாய் வரை தேத்திவிட்டன. ஓட்டுப் போட்டுவிட்டு, வார இறுதி நாள்கள் என்பதால் பணம் கிடைத்த உற்சாகத்தில் குடும்பங்கள் பலவும் ஊட்டி, கேரளா என ட்ரிப் சென்றுவிட்டனர். சிலர் கடன்களைக் கட்டிவிட்டனர். 38-வது வார்டில் மட்டுமே சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் இரண்டு கழகங்களும் பணத்தை வாரி இறைத்திருக்கின்றன.
ஏ.டி.எம் ரூட்... மளிகை டு ரீசார்ஜ்!
பணத்தைக் கையில் வைத்துச் சுற்றுவது ஆபத்து என்பதால், கரூர் டீமைச் சேர்ந்த தி.மு.க-வினர், ஏராளமான ஏ.டி.எம் கார்டுகளுடன் பவனி வந்தார்கள். அந்தந்தப் பகுதியிலுள்ள ஏ.டி.எம் மையத்திலிருந்துதான் பணத்தை எடுத்தனர். கைகளில் நோட், ஹாட் பாக்ஸ் மூட்டை, கொலுசு கவர், பணத்துக்குத் தனிப்பை என ஸ்கூட்டரில் வந்த கரூர் பார்ட்டிகள், கூரியர் டெலிவரி செய்வதைப்போல வெளிப்படையாகத்தான் பட்டுவாடா செய்தனர். அ.தி.மு.க-வும் இதே பாணி பட்டுவாடாவை நடத்தியதால், பெரிதாகப் பிரச்னையாகவில்லை. சில இடங்களில் பா.ஜ.க மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தப் பரிசு மழை, பணப் பட்டுவாடா குற்றச்சாட்டுகள் மாநகராட்சியின் 38-வது வார்டோடு முடிந்துவிடவில்லை. 97-வது வார்டில், தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா போட்டியிட்டார். நிவேதாவும் மேயர் ரேஸிலிருப்பதால், அங்கும் பரிசுப்பொருள்கள் இறக்கப்பட்டன. ஹாட் பாக்ஸ், கொலுசு, வேட்டி- சேலை, இட்லி குக்கர், மூக்குத்தி என்று விதவிதமான பரிசுகளை இறக்கியது தி.மு.க தரப்பு. அந்த வார்டில், பிரசாரத்துக்கு வரும் தி.மு.க-வினருக்காக தினசரி 5,000 பேருக்குச் சமையல் செய்யப்பட்டது. இவற்றோடு, ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் ரொக்கமும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
கோவை புறநகர்ப் பகுதிகளில், டிசைன் டிசைனாகப் பட்டுவாடா நடந்தது. பொள்ளாச்சியிலுள்ள பல வார்டுகளில் இரண்டு மாதத்துக்கான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளனர் சில தி.மு.க வேட்பாளர்கள். ‘எங்களை வெற்றிபெறவைத்தால், ஆறு மாதங்களுக்கு மொபைல், கேபிள், டி.டி.ஹெச் கட்டணம் ரீசார்ஜ் செய்து தரப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளனர். ஒருசில இடங்களில் சில்வர் தட்டில் பழங்கள், ஸ்வீட்ஸ் வைத்துக் கொடுத்து, ‘என்னைத் தேர்தல்ல ஜெயிக்கவெச்சா... உங்களுக்கு எல்.இ.டி டி.வி கிடைக்கும்’ என்று அ.தி.மு.க வேட்பாளர்கள் சத்தியம் செய்ததால், வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். வாக்குப்பதிவு நடந்த சமயத்தில்கூட, இந்தப் பட்டுவாடா நிறுத்தப்படவில்லை. வடவள்ளி வாக்குப்பதிவு மையத்துக்கு அருகிலேயே ஓட்டுப் போட்டவுடன், ‘ஸ்பாட் பேமென்ட்’ வழங்கியிருக்கிறது இரு கழகங்களும்” என்றனர்.
‘கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி... கேலிக்கூத்தான தேர்தல்!
கோவையை கெளரவப் பிரச்னையாகவே இரு கழகங்களும் எடுத்துக்கொண்டதால்தான், பணம் தண்ணீராக வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “கோவை மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். கடந்தகால வாக்குப்பதிவு அடிப்படையில், இரண்டு கட்சிகளும் இணைந்து சுமார் 18 லட்சம் பேருக்கு இந்தத் தேர்தலில் பணம், பரிசுப்பொருள்களை வழங்கியுள்ளன.
வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய்க்குக் குறையாமல் இரண்டு கட்சிகளும் பணப் பட்டுவாடா செய்துள்ளன. வடவள்ளியில் வழங்கப்பட்ட தொகை இந்தக் கணக்கில் வராது. இதன்படி கணக்கிட்டாலே, 18 லட்சம் வாக்குகளுக்காக ஒரு கட்சி 180 கோடி செலவு செய்திருக்கிறது. இரண்டு கட்சிகளையும் சேர்த்தால், 360 கோடி ரூபாய் செலவு கணக்காகிறது. பல வார்டுகளில் போட்டி கடுமையாக இருந்ததால், அதிகபட்சம் 5,000 ரூபாய் வரைகூடக் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தொகையையும் கணக்கிட்டால், பணப் பட்டுவாடாவுக்கு மட்டுமே இரண்டு கழகங்களும் சேர்ந்து 500 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளன. இது தவிர ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுப்பொருள்கள், பிரசாரம், கூட்டச் செலவுகள் என அனைத்தையும் கணக்கிட்டால் கோவை மாவட்ட பட்ஜெட் மட்டுமே 750 கோடியைத் தாண்டிவிடுகிறது” என்று அதிரவைத்தார்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் நான்கு முறை மாற்றப்பட்டுவிட்டார். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, கோவைக்குச் சிறப்புத் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டார். இத்தனை குஸ்திகளையும் மீறி வெற்றிபெற முடியாவிட்டால், பரஸ்பரம் கட்சிகளிலிருந்து வெற்றிபெற்றவர்களைக் குதிரைப் பேரம் செய்து இழுக்க, இரண்டு கழகங்களுமே திட்டமிட்டுள்ளன. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அதற்கான புராஜெக்ட் ரேட் பல கோடிகளைத் தாண்டிவிடும் என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் கட்சிக்காரர்கள்.
2009-ம் ஆண்டு திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்கிற வித்தையை அறிமுகப்படுத்தினார் மு.க.அழகிரி. இந்த வித்தையால் தொகுதியை தி.மு.க வசப்படுத்தியது. தொடர்ந்து, கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதே பாணியிலான, ‘கோவை ஃபார்முலா’ வித்தையைத் தற்போது இரு கழகங்களும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. 2,000 ரூபாய் என்றிருந்த ஒரு வாக்கின் ‘விலை’யை தற்போது 40,000 வரை உயர்த்தி ‘சரித்திர சாதனை’யைப் புரிந்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கின்றன இரு கழகங்கள்!
இந்தப் பணப் பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ‘கோவை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டவை’ என்றும் கூறியிருக்கிறது.
‘பணமும், அதிகாரமும், பொய்யான வாக்குறுதிகளும்தான் அரசியல்’ என நிறுவ முயலும் இரு கழகங்களின் உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை!

No comments:

Post a Comment