Tuesday 8 February 2022

அனைவருக்கும் உதவுங்கள்.

 அனைவருக்கும் உதவுங்கள்.

நேர்மைக்கு முதுகெலும்பாகத் திகழுங்கள்.
“இளைஞர்களே! முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். எது உடலை, மனதை, புத்தியை பலவீனப்படுத்துக்கின்றதோ அதனை நஞ்செனக்கருதி துாக்கி வீசுங்கள்” என்னும் விவேகானந்தரின் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இளைஞர்கள் சுயநலமற்றவர்களாகப் பணி செய்ய வேண்டுமெனக் கருதினார்.
நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் நம் இதயத்தின் ஆழத்திலிருந்து உணர்வுப்பூர்வமாக எழ வேண்டும். அப்பொழுதுதான் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் பணிசெய்ய இயலும். புத்தி சிந்திக்கட்டும், இதயம் உணரட்டும், உடல் உழைக்கட்டும். அவ்வாறு செய்தால் மகத்தான வளர்ச்சியினை நம்மால் ஏற்படுத்த முடியும் என உரக்கக் கூறினார். அவர் அழைப்பினை ஏற்று பலர் ராமகிருஷ்ணா மடத்தில் துறவியாயினர்.
இளைஞர்கள் இறையாற்றலும், இறை நம்பிக்கையும் உடையவர்களாக இருத்தல் அவசியம் . இறைநெறியே அறநெறியை வளர்க்கும். நாம் ஒவ்வொருவரும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்கள். அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வாழ்கை பலவகையில் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கின்றது. அதை அலட்சியப்படுத்தாது, இறை நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன் ஆலயத்தில் மட்டுமல்ல, நம் எல்லோர் இதயத்திலும் , காணும் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் அன்புள்ளமே இறைவனின் நிரந்தர இருப்பிடம். அவருடைய இக்கருத்துக்கள் ராமேஸ்வரம் ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது.
அவருடைய் சிந்தனைகள் தேசிய லட்சியமாக மாற வேண்டும். நாம் காணும் இந்தியாவைக் காட்டிலும் மிக வலிமையான இந்தியாவை உருவாக்க எண்ணிய தலைசிறந்த தேசிய சிந்தனையாளர். அவர் வடித்துக் கொடுத்த எண்ணங்கள் இன்றும் உயிருடன் உலவிக் கொண்டுள்ளது.
“நானொரு உருவமற்ற குரல். நான் உடலால் மடிந்தாலும், உணர்வுகளால் ஓவ்வொரு இந்தியனையும் விழிப்படையச் செய்வேன்; அதுவரை ஓயமாட்டேன்” என சத்தியம் செய்துள்ளார். “செயல் வடிவே எனது தாரக மந்திரம். வலிமையான, துடிப்பு மிக்க, நம்பிக்கையுடைய, நேர்மைக்கு முதுகெலும்பாகத் திகழும் இளைஞர்களே வாருங்கள். புதிய பாரதத்தைப் புலரச் செய்வோம் என்று முழங்கியவர் இன்று நம்முள் உட்கலந்து வாழ்கின்றார். அவரை வணங்கி அவர் வழிநடப்போம் ! வாருங்கள்.

No comments:

Post a Comment